Tamil News
Home செய்திகள் இலங்கை நடைபெற்ற போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் அச்சத்தில் மக்கள்

இலங்கை நடைபெற்ற போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் அச்சத்தில் மக்கள்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில்  தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் அச்ச நிலை உருவாகியுள்ளது.

கொழும்பு நகரில்  காலி முகத்திடலை மையப்படுத்தி பாரிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில்,  கடந்த ஜூலை 22 ஆம் திகதி இராணுவ  நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் அடக்கு முறைமை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பரவாலக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான பின்னணியில்,  வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கரை ஒதுங்கிய சடலங்கள் தொடர்பில்  அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26 ஆம் திகதி வெள்ளவத்தை கடலில், கடற்படை  காவலரணை அண்மித்து,  30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டதாக கருதப்ட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.  இன்னும் அச்சடலத்தின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.

அதன் பின்னர்  கடந்த ஜூலை 29 ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் சடலமொன்று கரை ஒதுங்கியது. குறித்த சடலம் ஹோமாகம – ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடையது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணை தொடர்கிறது.

இந் நிலையில் இன்று முதலாம் திகதி  காலி முகத்திடலில் மற்றொரு சடலம்  கரை ஒதுங்கியது. குறித்த சடலத்தில் கீழ் உள்ளாடையும் மேல் பகுதியில் நீல நிற ரீ சேட்டும் காணப்பட்ட நிலையில், அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. இந் நிலையில் கோட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை சவச்சாலையில் வைத்துள்ளனர். கோட்டை நீதிவான் திலின கமகேவும் சடலத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில்  அடிக்கடி கரை ஒதுங்கும் சடலங்களால்  கொழும்பில் அச்ச  நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மூன்று சடலங்கள் தொடர்பிலான விடயங்களிலும் இதுவரை  காவல்துறைத் தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Exit mobile version