Home செய்திகள் மட்டக்களப்பு: வாகரையில் அமைக்கப்படும் இறால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு: வாகரையில் அமைக்கப்படும் இறால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு

இறால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு

இறால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் அமைக்கப்படும் இறால் பண்ணைகள் காரணமாக வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரம் உட்பட பலவிதான நன்மைகள் அழிக்கப்படுவதை தடுத்துநிறுத்த வலியுறுத்தி இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு முன்னேற்றக்கழகம் என்னும் அமைப்பு உட்பட மீனவ,விவசாய அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி, தட்டுமுனை, புளியங்கண்டலடி, கட்டுமுறிவு, பால்சேனை, கதிரவெளி போன்ற பகுதிகளில் இன்றைய கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரதேசமானது மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வாழும் பகுதியாக காணப்படும் நிலையில், அப்பகுதியில் இரால் வளர்ப்பு என்னும் போர்வையில் முதலாளித்துவவாதிகளுக்கு நிலங்கள் வழங்கப்படும்போது அப்பகுதியில் உள்ள மீனவர்கள்,விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் என பலர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரால் வளர்ப்பு காரணமாக மீன்,இரால் இயற்கை பெருக்கப்பகுதிகள் அழிக்கப்படுவதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளதுடன் விவசாயிகளின் விவசாய நிலங்களும் உவர்த்தன்மையடையும் நிலை காணப்படுகின்றது.

வாகரை பகுதியில் தட்டுமுனை தொடக்கம் கட்டுமுறிவு வரையில் காணப்படும் சுமார் 950ஹெக்டயர் நிலப்பரப்பு இவ்வாறு இரால் பண்ணைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த செயற்பாட்டினை முன்னெடுத்துவருவதாகவும்  மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

கடந்த மாதம் குறித்த திட்டத்தினை நிறுத்துமாறு கோரி வாகரை பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம் நடாத்தியிருந்த நிலையில், குறித்த திட்டம் தொடர்பான நில அளவினை நிறுத்துவதாக உறுதியளிக்கப்பட்டபோதிலும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த திட்டம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,குறித்த திட்டத்தினை நிறுத்தி வாகரை பிரதேசத்தினை பாதுகாக்க அனைத்து அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Exit mobile version