அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால்தான் சமாதானத்தை ஏற்படுத்தலாம் – த.கலையரசன்

அதிகாரப் பகிர்வு

அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் பட்சத்தில் தான் நாங்கள் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்..

“எமது நாட்டை பொறுத்தவரையில் தமிழ் சமூகம் நீண்டகாலமாக தீர்வுகாண முடியாதவர்களாகவே இருந்துகொண்டு இருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் நீண்டகாலமாக அடக்குமுறைக்குள் அகப்பட்டு கொண்டிருக்கின்றோம். இன்று வரைக்கும் ஆட்சி செய்துவரும் அரசாங்கங்கள், அரசியல் தலைவர்கள் தீர்வு திட்டங்களை வழங்கவில்லை என்ற அடிப்படையில், நாங்கள் பல ஏமாற்றங்களை பெற்று சர்வதேச ரீதியாக எமது மக்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எமது தலைவர்கள் மும்முரமாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள். அந்த அடிப்படையில்தான் இன்றைய ஐ.நா பிரதிநிதிகளுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இன ரீதியான அடக்குமுறை, இன அழிப்புகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இற்றைவரைக்குமாக அதற்குரிய நியாய பூர்வமான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லையே என்பதே எமது தமிழ் தரப்பிலிருந்து தொடுக்கப்படும் ஒரு வினாவாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அரசாங்கம்  நம்பிக்கையான எந்தவிதமான தீர்மானங்களையும், திட்டத்தினையும் அந்த மக்களுக்காக முன்னெடுக்கவில்லை என்ற இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த சுமத்தக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் இருந்துகொண்டிருக்கின்றது. அதன்படியே தான் நாட்டின் தலைவர் ஐ.நா சபையில் உள்ளக பொறிமுறை அடிப்படையில் இதற்கான தீர்வுகளை வழங்குவோம் என்று கூறியிருக்கிறார்.

நாட்டில் யுத்தம் முடிந்த கையோடு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் செயற்படுத்த முடியாத இந்த அரசாங்கத்தில் மீது எவ்வாறு நம்பிக்கை ஏற்படும் என்ற வினாவினை தொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனடிப்படையிலே தான் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற ஒரு விடயம் சர்வதேச ரீதியாக எமது பிரச்சினைகள் கையாளப்பட வேண்டும். ஆகவே நீதியான நியாயமான அரசியல் தீர்வினை எமது மக்கள் விரும்புகின்றனர் அதனடிப்படையில் அரசு செயற்பட வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

எமது தலைவர்கள் வலியுறுத்தியதை போன்று பிளவுபடாததும், பிரிக்கப்படாததுமான  நாட்டிற்குள் அதி உச்ச அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் அதிகாரத்தை எமது மக்கள் நாடி நிற்கின்றனர் ஏனென்றால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டவர்கள்  அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் பட்சத்தில் தான் நாங்கள் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என்பதே எமது கருத்து”  என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021