Home ஆய்வுகள் உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு  தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு  தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி

736 Views

சுவீடன் நாட்டின் Stockholm Junior Water Prize Competition ஆனது நீர் தொடர்பான பிரதான பிரச்சினைகளிற்கான தீர்வை வழங்கும் நோக்கத்துடன் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியாகும். இதில் தெரிவு செய்யப்படும் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது சுவீடன் நாட்டின் முடிக்குறிய இளவரசி விக்டோரியா அவர்களினால் வழங்கப்படும்.

இதனடிப்படையில் இவ்வருடம் நடைபெற்ற ஆராய்ச்சி போட்டியில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை ஆராய்ச்சி குழுவினர் இலங்கை சார்பாக பங்குபற்றினர். 29 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரையில் முதல் 12 இடங்களிற்குள் முன்னேறி இறுதிச்சுற்றிற்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் கடந்த 30 வருடங்களில் இதுவே  இறுதிச்சுற்றிற்கு தெரிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பமாகும்.

இவ் ஆராய்ச்சியில், கழிவு நீரிலிருந்து பார உலோகமான கட்மியத்தை அகற்றுவதற்கான இலகு முறையொன்றை நாவல் விதையின் நனோ துணிக்கையை பயன்படுத்தி கண்டறியப்பட்டது.

இப்பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் திரு. செல்வராஜா தேவகுமார் அவர்களின் வழிகாட்டலில் உயிரியல் பிரிவில் கல்விபயிலும் மாணவர்களாகிய செல்வன். தம்பிப்பிள்ளை தினோஜன் மற்றும் செல்வி. கணேசமூர்த்தி அபிநயா ஆகியவர்களினால் இவ் ஆராய்ச்சி நடாத்தப்பட்டது.

இவ் ஆராய்ச்சி மூலமாக ஆசியாவிற்கு பெருமை தேடித்தந்த பாடசாலையாக மட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசியபாடசாலை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இவ்வாராய்ச்சியின் சுருக்கத்தை உங்களுடன் பகிர்வதில் சந்தோசமடைகின்றேன்.

ஆரம்பகாலம் தொடக்கம் எம் மூதாதையர்கள் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையின் பொருட்டு காட்டு வழியால் நடந்து செல்லும் போது நாவல் (Eugenia jambolanaSyzygium cumini)விதைகளைப் பயன்படுத்தி நீரைச் சுத்திகரித்துப் பருகினர்.

இப் பாரம்பரிய முறையையும், நவீன விஞ்ஞானமுறையையும் ஒன்றிணைத்ததன் விளைவாக பசுமையான முறையில் மக்னடைட் (Fe3O4)  துணிக்கைகளை உருவாக்கி அதன் மூலம் நீரிலுள்ள கட்மியம் அயன்களை அகற்றுவதற்கான ஆய்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக இரசாயனவியல் ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இத் துணிக்கைகள் பல்லினவியல்புக்குரிய மேற்பரப்பைக் கொண்ட பளிங்குகளாகவும்,நனோமீற்றர் பருமனுடையதாகவும்,பலவிதமான சேதனப் பிணைப்புகளைக் கொண்டதாகவும், குறிப்பாக காந்த இயல்பைக் கொண்டதாகவும் வௌவேறு உபகரணங்களைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்காக sri Jayawardenapura university Sri Lanka, Sri Lanka Nanotechnology Institute (SLINTEC) ஆகியவற்றின் உதவிகள் பெறப்பட்டன. மேலும் உருவாக்கப்பட்ட இத்துணிக்கையானது கட்மியம் அயன்களின் (Cd2+) புறத்துறிஞ்சலில் காட்டும் நாட்டம் பற்றியும் ஆராயப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் முடிவாக, உருவாக்கப்பட்ட துணிக்கையானது கழிவு நீரிலுள்ள ஏறத்தாழ 92 சதவீதமான கட்மியம் (Cd2+) அயன்களை 30 நிமிடங்களில் அகற்றக்கூடியது எனக் கண்டறியப்பட்டது. சாதாரணமான அயனிக் ஒட்சைட்டு துணிக்கைகள்,சர்வதேச ரீதியாக இற்றை வரை கண்டறியப்பட்ட துணிக்கைகள் நீரிலிருந்து பார உலோகங்களை அகற்றப் பயன்படுத்துவதைவிட பசுமையான முறையால் உருவாக்கப்பட்ட இவ் அயனிக் ஒட்சைட்டு துணிக்கைகளை (Fe3O4) பயன்படுத்துவது வினைத்திறனானது எனக் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இவற்றை நாளாந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

மேலும் இதனை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்த சில வெளிநாட்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சர்வதேச போட்டியின் இறுதி முடிவானது எதிர்வரும் 25ஆம் திகதி சுவீடன் நாட்டின் முடிக்குறிய இளவரசி விக்டோரியா அவர்களினால் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பாடசாலையானது மேற்குறித்த ஆராய்ச்சி மாத்திரமன்றி மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை சில

*2018ம் ஆண்டின் எமது நாட்டின் மிகச்சிறந்த பாடசாலை விஞ்ஞான கழகம் எனும் தேசிய விருது தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால் வழங்கப்பட்டது.

*2018ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான விருதுகள் இரண்டு தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால் வழங்கப்பட்டது.

*2019ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான விருதுகள் மூன்று தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இப்பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் அவர்கள் பாடசாலையில் வெவ்வேறு மாணவக்குழுக்களை அமைத்து சர்வதேச ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும்.

 

 

 

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version