கடவுச்சீட்டு முடக்கம்: யாழ். ஊடாக இந்தியாவுக்கு தப்பியோடிய போலந்து நாட்டவர்!

சிறிலங்காவில் இருந்து வெளிநாட்டவர்கள் சிலர் தமிழ்நாட்டின் கோடியக்கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் கோடியக்கரையில் ஓர் படகு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதனை அடுத்து நாகபட்டினம் மாவட்டம் முழுமையாக தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதேநேரம், இந்தப் படகில் பயணித்து- சென்னைக்கு வழி கேட்டதாக கிராம மக்கள் ஒருவரைப் பிடித்து தமிழ்நாடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் குறித்த படகின் ஊடாக தமிழ்நாட்டிற்குள் வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

போலந்தில் இருந்து சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, வெலிமடைப் பகுதியில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஒருவரைத் தாக்கியதனால் ஏற்பட்ட வழக்கு நடவடிக்கைக்காக கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் அதனாலேயே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தததாகவும் அவர் தெரிவித்துள்ளளார்.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் போது, யாழ். மாவட்டத்தில் உள்ள காரைநகரில் இருந்து புறப்பட்டே இந்தியாவை வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்ததாக ஊடக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.