Tamil News
Home செய்திகள் கடவுச்சீட்டு வழக்கும் பாமர மக்களும் – வழக்கறிஞர். ரோமியோ ராய்

கடவுச்சீட்டு வழக்கும் பாமர மக்களும் – வழக்கறிஞர். ரோமியோ ராய்

“திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 ஈழத்தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  ஆனால் அதன் பின்னணியில் உள்ள துயரங்களை பற்றிய உண்மை அனைவரையும் சென்றடையவில்லை. 

திருச்சி சிறப்பு முகாமில்  ஈழத் தமிழர்களுடன் பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை சார்ந்தவர்கள் 110 நபர்கள் இருப்பினும் அதில் 80 நபர்கள்   ஈழத் தமிழர்கள். முப்பது நாட்களை கடந்த ஒரு பெரும் உண்ணாவிரதம், தீக்குளிப்பு இவைகளுக்குப் பின்தான் இந்த 16 பேர் விடுதலை சாத்தியமாகியுள்ளது. ஆனால் ஏன் இந்த நிலை நம் மக்களுக்கு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு,  “குறிப்பாக சிறப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும்  வெளிப்பதிவில் உள்ள பல நபர்களின் மீது கடவுசீட்டு வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளது. இலங்கை கடவுசீட்டு மூலம் இந்தியா  வந்தடைந்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் இந்திய கடவுசீட்டு எடுத்ததினால் கடவுசீட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட பல நபர்களை சந்தித்தேன்.

அவர்கள் மீது வழக்கு பதியும் போது காரணமாக கூறப்படுவது தங்கள் தேசிய இனத்தை (NATIONALITY) மறைத்து இந்திய கடவுசீட்டு பெற்றுள்ளார்கள் என்பது தான். இதை சட்டப்படி மட்டும் அணுகினால் அது சரியென்று தோன்றக்கூடும். ஆனால் சட்ட வரிகளை அதன் பொருள் மற்றும் நோக்கத்தோடு விளங்கி கொள்ள வேண்டும். மேலும் எந்த சட்ட விதிகளுக்கும் விதிவிலக்குகள் உண்டு (Every general rule has exception).

இந்திய கடவுசீட்டு இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தங்களை இந்தியர் எனக்கூறி கடவுசீட்டு பெறுகிறார்கள் என்று தான் வழக்குகள் புனையப்படுகிறது.

என்னை பொருத்தவரை இந்த அத்துனை வழக்குகளும் தேவையற்றதும், ஏற்கனவே இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த மக்களை இன்னும் துயரத்திற்கு உள்ளாக்குவதும் ஆகும். அரசிற்கு தேவையற்ற செலவீனங்களையும் நீதிமன்ற நேர விரையமுமே மிச்சம். முதலில் இந்திய அரசு இந்தியர்களுக்கு மட்டும் தான் கடவுசீட்டு வழங்க முடியும் என்பது மிகவும் தவறு. கடவுச்சீட்டு  சட்ட்ம், 1967 பிரிவு 20-ன் படி இந்திய குடியுரிமை இல்லாதவர்களுக்கும் இந்திய ஒன்றிய அரசு கடவுச்சீட்டை வழங்க முடியும்.

இது பற்றிய முன்னெடுப்போ அல்லது கடவுச்சீட்டு அதிகாரிகளின் சரியான வழிநடத்துதல் இல்லாததால் நம் மக்கள் கடவுச் சீட்டு வழக்குகளில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் பல நபர்கள் 15 ஆண்டுகள் இந்தியாவில் வசித்த பின்னரே  எடுத்துள்ளனர். அவர்களும்  வழக்குகளில் சிக்கியுள்ளனர்.  அவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டு  அதற்கு பின் இந்திய கடவுச்சீட்டை பெற்றால் எந்த வழக்கும் பதிய முடியாது.

இந்திய வம்சாவளியினராக இருந்தால் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய குடியுரிமை பெறுவதற்கு  பல தடைகள் இருப்பது நிதர்சனம் தான். ஆனால் சட்ட போராட்டத்திலும் அரசியல் கள செயல்பாடு மூலமும் அதை சாத்தியப்படுத்த முடியும். இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசிற்கும் ஒரு கோரிக்கை வைக்க வேண்டியதாக உள்ளது.

ஒரு நாட்டில் அரச பயங்கரவாதத்தினாலும், பேரினவாதத்தினாலும், இனப்படுகலைக்கு உள்ளாக்கப்படும் போது தங்கள் உயிரை காப்பாற்றிகொள்ள ஒடிவரும் மக்கள் விசா பெற்றுக்கொண்டோ, அனுமதி வாங்கியோ வரப்போவதில்லை. எனவே தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தன்னுடைய சுதந்திர தின உரையில் இலங்கை அரசை கண்டித்தும் ஈழத்தமிழர்களுக்கு உதவிக்கரமும் நீட்டினார்.

எனவே மனிதாபிமான அடிப்படையில்  கடவுச்சீட்டு வழக்குகளில் சிக்கியுள்ள ஈழத்மிழர்களை இந்திய ஒன்றிய அரசு முற்றிலுமாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் கடவுச்சீட்டு சட்ட்ம், 1967 பிரிவு 22-ன் படி இந்திய அரசிற்கு உள்ளது. எனவே இதனை தமிழ்நாடு அரசும் தமிழ் சமூகமும் முன்னெடுத்து இந்த தேவையற்ற வழக்குகளிலிருந்து மக்களை மீட்க வழிகாண வேண்டும்.“

Exit mobile version