Home செய்திகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள அழைப்பு- பிரதீபன்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள அழைப்பு- பிரதீபன்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள

திட்டமிட்ட இன விகிதாசாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன் அதற்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர்  என்.பிரதீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று அனுப்பியுள்ள செய்தியறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய இனத்தினுடைய இன விகிதாசாரத்தை குழப்பும் வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களை அரசாங்கம் கைவிட வேண்டும். வவுனியாவின் எல்லைப்புறமான நெடுங்கேணியில் கோட்டா, மகிந்த அரசாங்கம் திட்டமிட்ட இனப்பரம்பலை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் எல்லைப்புற கிராமங்களில் குடியேற்றப்படும் சாதாரண சிங்கள மக்களையும், விவசாயிகளையும் பகடைக்காயாக வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இனமுறுகலை ஏற்படுத்தும் செயற்பாட்டை சிங்கள பௌத்த பேரினவாதம் முன்னெடுத்துவருவதுடன், அதன் மூலம் தனது ஆட்சியை தக்க வைப்பதற்கு பயன்படுத்திவருவது அவதானிக்க கூடியதாக உள்ளது.

அதுமட்டுமன்றி நாட்டின் வளமான பகுதிகளை பல்தேசிய கம்பனிகளுக்கும், தனியாருக்கும் ஆயிரக்கணக்கில் தாரை வார்க்கும் அரசாங்கம், நிலமற்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏறெடுத்தும் பார்க்காத இந்த அரசு. சாதாரண சிங்கள தமிழ் மக்களை வைத்துக்கொண்டு இனமுறுகலின் ஊடாக ஆட்சியை தக்க வைக்க விரும்புகின்றது.

எனவே தமிழ் தேசிய இனத்தினுடைய இருப்பு என்பது நிலத்தொடர்ச்சியின் இருப்பாகவே அமைந்து காணப்படுகின்றது. அதனை திட்டமிட்டு இல்லாமல் செய்யும் செயற்பாட்டை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் நெடுங்கேணி நகரில் எதிர்வரும் 15.11.2021 திங்கட்கிழமை காலை 10மணியளவில் நடைபெறும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள “நிலம் காக்க” அணிதிரளுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

Exit mobile version