வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ்

தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்

வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்

 பாலநாதன் சதீஸ்

இலங்கை உள்நாட்டு  போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல் போனவர்களின் பிரச்சினை  வடக்கிலும், கிழக்கிலும் முடிவின்றித் தொடர்கிறது.

யுத்தம் நிறைவடைந்து பல தசாப்தங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில்  பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தும், இதுவரை  அதற்கான தீர்வு  கிடைக்கவில்லை. இந்நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டங்களைப் பல்வேறு முறைகளில் முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் இவர்களைக் கண்டுகொள்ள த்தான் இங்கே யாருமில்லை.

தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் சொந்தங்கள், தம் உறவுகளின் நீதிக்காக  வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள், இந்த நிலையில் தான் காணாமல் போனோர் அலுவலகம் பல மாவட்டங்களிலும் தாபிக்கப்பட்டது.  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்தும்கூட  அவர்களுக்கான தீர்வுகளை அந்த அலுவலகத்தினால்  வழங்க முடியவில்லை.

இந்நிலையிலும் தம் நம்பிக்கையைத் தளரவிடாது, காணாமல் போன  தம் உறவுகளுக்காகக் கால நேரம் பாராது பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, தாம் ஆசையாக பெற்றெடுத்த ஒரே ஒரு மகனைத் தொலைத்த தாயும், தந்தையும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தம் மகனை மீட்டுவிட வேண்டும் என்ற அவாவில்  அவர்கள் இருக்கும் நிலையை யாரறிவார்.

“எனது பெயர்  கிருஷ்ணபிள்ளை கணேசமூர்த்தி. என் மனைவி கணேசமூர்த்தி யோகராணி. நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலே வசித்து வருகின்றோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் தான்.  அதிலேயும் பல ஆசைகளுடன் பெற்றெடுத்த கடைசி மகன் தான் கணேசமூர்த்தி  கிஷாந்தன். இவர் தான் 2009.04.21 அன்று போர் தீவிரம் அடைந்த வேளையில்  எல்லோரும் இராணுவ கட்டுபாட்டுப் பகுதி நோக்கி வரும் போது முள்ளிவாய்க்கால் பகுதியில்  காணாமல் போய்விட்டார்.

எங்கு தேடியும் எங்கள் மகனைக் காணவில்லை. பின்னர் இராணுவத்தினர் பேருந்தில் எம்மை ஏற்றி  வவுனியா செட்டிகுளம்,  வலயம் – 4 (zone – 4) முகாமில் கொண்டுவந்து விட்டார்கள். ஒருவருடம் முகாமில் இருந்துவிட்டு 2010ஆம் ஆண்டு வவுனியா  நெளுக்குளம் உறவினர் வீட்டில் இருந்தனாங்கள்.

அப்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா காரியாலயத்திலும், ரெட் குறோஸ் நிறுவனம்,  காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP),  ஜனாதிபதி ஆணைக்குழு என எல்லா இடத்திற்கும் நேரடியாகப் போயும் கடிதம் எழுதியும், எங்கள் மகனைக் காணவில்லை என முறைப்பாடு செய்தனாங்கள். ஆனாலும் இதுவரை ஒரு தீர்வுமே கிடைக்கவில்லை.

IMG 41f714c9a588fea4dc58af7f64c557b8 V வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் - பாலநாதன் சதீஸ்என்ரை மகனை எங்கு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 2011 ஆண்டு எமது சொந்த இடமான புதுக்குடியிருப்பு, கோம்பாவிலுக்கு மீள்குடியேற்றத்தின்  போது வந்தோம்.  என்  மகன் காணாமல் போய் 12வருடங்கள் ஆகிட்டுது. என்ரை பிள்ளை காணாமல் போகேக்க 27 வயது இப்போ  எங்க எப்படி இருக்கிறான் எண்டு கூடத் தெரியல. எங்கள் இரண்டு பேருக்கும் வயது இப்போ 67. எங்கட இந்த வயது முதிர்ந்த காலத்திலாவது எங்கடை பிள்ளையோட இருக்கணும் எண்டு ஆசை. ஆனால் என்ரை பிள்ளை இப்போ எங்க கஸ்ரபட்டுக்கொண்டு இருக்கிறானோ தெரியல. எப்பிடியாவது எங்கட பிள்ளைய மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில தான் இரண்டு பேரும் இப்ப வரை  காத்துக்கொண்டிருக்கிறம்”

வயது முதிர்ந்து தள்ளாடினாலும், முதுமையிலும் தம் பிள்ளையை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை மட்டும்  சற்றும் அவர்களுக்கு குறையவில்லை. தாம் ஆசையாகப் பெற்ற ஒரே மகனைத்  தொலைத்துவிட்டு நாள்தோறும் தம் மகன் வந்துவிட மாட்டானா? என்ற நப்பாசையுடன்  தனியாகக்  காத்திருக்கும் அந்தப் பெற்றோரின் வலி, அவர்கள் படுகின்ற துன்பங்களைக்  கூற வார்த்தைகளால் முடியாது.

தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்இவர்களைப் போல் இன்று எத்தனையோ பெற்றோர்கள், உறவுகள் நாள்தோறும் காணாமல் போன தம் உறவுகளின் வருகைக்காய் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள். இவர்களுக்கான தீர்வுகளும் எட்டப்படுவதாய் தெரியவில்லை.

இறுதி யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள்  இந்த வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக மாற்ற  நினைத்து, போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி  சரணடைந்தவர்களையும், கடத்தப்பட்டவர்களையும் ,  கையளிக்கப்பட்டவர்களையும்  இன்று காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் நிலைக்கு, கையறு நிலைக்கு தள்ளியிருக்கின்றது இந்த அரசு.

இந்நிலையில் காணாமல் போன தம் உறவுகளைத் தேடித் தரச் சொல்லி மக்கள் போராட்டம் செய்துவரும் நிலையில், அதற்கு எவ்வித தீர்வினையும் கூறாது தற்போது உருவாக்கி வெளியிடப்பட்ட பாதீட்டில் காணாமல் போனவர்களுக்காக 300 மில்லியன் நிதியினை இழப்பீடாக அரசாங்கம் அறிவித்து வெளியிட்டிருக்கின்றது. இது தான் எம் மக்களுக்கான நீதியா?

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் - பாலநாதன் சதீஸ்