அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பெற்றோர் கோரிக்கை

lanka2 அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பெற்றோர் கோரிக்கை

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 09 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு குறித்த அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டு எந்தவித விசாரணைகளுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கிண்ணையடிப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் உட்பட 09பேர் இவ்வாறு பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பல காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் வாழைச்சேனை நீதிமன்றம் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை விடுதலை செய்யுமாறு  உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்கள், மாவீரர் தினத்திற்கு பதிவிட்டவர்கள், விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளில் இந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் விடுதலைக்காக இதுவரை யாரும் உதவ முன்வரவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் முறையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.