போரிலே பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி கஸ்டப்படுகிறார்கள் – கலாநிதி ஆறு திருமுகன்

பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி– கலாநிதி ஆறு திருமுகன்

செஞ்சொற் செல்வர் கலாநிதி  ஆறு திருமுகன் அவர்கள்,  தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். முதியோர் தினத்தை முன்னிட்டு, இலக்கு ஊடகத்தினருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம்.


உலக முதியோர் தினம்

போரிலே பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி கஸ்டப்படுகிறார்கள்

கேள்வி?
தாயகத்தில் மூத்தோரின்  இன்றைய வாழ்வியல் குறித்து அனைத்துலக மூத்தோர் தினமான இன்று உலகத் தமிழர்கள் அறிய ஆர்வமாக உள்ளனர்.  சுருக்கமாக கூறுங்களேன்.

பதில்!
போரிலே பிள்ளைகளை இழந்ததனால் சில முதியோர்கள்தாயகத்தில் மூத்தோர் தொகை அதிகமாக உள்ளது. குறிப்பாக வடக்கின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தின் படி ஐம்பது வயதிற்கு மேற்பட்டோர் தொகை தான் அதிகம். குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் மூத்தோரின் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. காரணம் போரிலே பிள்ளைகளை இழந்ததனால் சில முதியோர்கள் தங்கள் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் அவர்களை அரவணைப்பதற்கு ஆட்கள் இல்லாது கஸ்டப்படுகிறார்கள். இரண்டாவது முதிர் கன்னிகள். அதாவது திருமணமாகாத மூத்த பெண்கள் முதியோர் இல்லங்களை நாடவேண்டிய தேவை இருக்கின்றது. அடுத்து குழந்தைகள் இல்லாதவர்களும் முதியோர் இல்லத்தை நாடவேண்டி இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலைகளினால் முதியோர் இல்லத்திற்கான தேவைகள் அதிகரிக்கின்றன.

சிவபூமி முதியோர் இல்லம்

சிவபூமி முதியோர் இல்லம்இந்த நிலையில் முதியோர்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினை, அவர்களுக்கு சரியான அரவணைப்பு இல்லை. அவர்களுக்கு உதவி செய்வாரில்லை. தெருக்களிலே போக்குவரத்துக்கள் அதிகரித்திருப்பதும் வாகனங்கள் வேகமாக ஓடுகின்ற காரணத்தினாலும் வயது முதிந்தவர்கள் மாலையில் சுற்றாடலிலுள்ள கோயில் அல்லது பொது இடத்திற்குக்கூட நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே அவர்கள் வீடுகளில் சிரமப்பட்டுத் தான் வாழ்கின்ற சூழ்நிலை உள்ளது. இந்த நிலையிலே யாழ்ப்பாணத்திலே கடந்த 14 ஆண்டுகளாக சிவபூமி முதியோர் இல்லம் என்ற ஒரு முதியோர் இல்லத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

மிகச் சிரமத்திற்கு மத்தியில் அங்கு 78பேரை பராமரிக்கின்றோம். இதுவரை எமது இல்லத்தில் பலர் வாழ்ந்து 53பேர் வரை இறந்திருக்கின்றார்கள். இப்போதும் 78 முதியோர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருவரும் இல்லாதவர்கள். குழந்தைகள் இல்லாத முதியோர் பராமரிக்க உறவினர்கள் இல்லாத முதியோர் அங்கு வந்து வசிக்கிறார்கள். அதேவேளை சில முதியோரை பிள்ளைகள் பொறுப்பாகப் பார்ப்பதாக இல்லை. சில முதியோர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் சென்று, அவர்களை அங்கே அழைப்பதற்கு விசா ஒழுங்குகள் கிடைக்காத காரணத்தினால் ஊரிலே விட்டுவிட்டார்கள். அப்படியானவர்களும் இப்போது சிரமப்படுகிறார்கள்.

முதியோருக்கு நோய் வருகின்ற போது வைத்தியசாலையிலே ஒருவர் இரவு பகல் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நிற்க வேண்டிய நிலை. வெளிநாடுகளிலே  வைத்தியசாலைகளில் குடும்ப அங்கத்தவர்கள் நிற்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு, கிழக்கிலே ஒரு முதியவரை வைத்தியசாலையில் அனுமதித்தால், ஒருவர் கட்டாயம் நிற்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொல்லுவார்கள். அப்போது அவர்களுக்கு சம்பளத்திற்கு ஒருவரைப் பிடித்து விடுவதென்றால் கூட 24 மணித்தியாலம் நிற்பவர்கள் அவரது சம்பளம், உணவிற்கான செலவிற்காக  3,000 ரூபா அல்லது 4000 ரூபா இப்போது கேட்கிறார்கள். ஆகவே ஒருவரும் இல்லாத ஒரு முதியவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதென்பது இப்போது மிகக் கஸ்டமான ஒரு சூழ்நிலையாக இருக்கின்றது.

இதே நேரத்திலே வடக்கு கிழக்கிலே  பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முதியோரும் அதிகமாக இருக்கின்றனர். பாரிசவாத நோய்கள் உள்ள நோயாளிகளை வைத்தியசாலைகளிலே நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க மாட்டார்கள். வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு படுக்கைப் புண் போன்ற பிரச்சினை வருகின்றது. அல்லது பாரிசவாத நோயாளருக்கு உடற்பயிற்சி கொடுக்கக் கூடியவர்கள் எம்மிடையே போதாமல் இருக்கிறது. அவர்களை அழைத்து இல்லங்களில் பிரத்தியேகமாகப் பயிற்சி கொடுக்கின்ற போது, அவர்களுக்கான ஊதியம் நிறையக் கேட்கிறார்கள். வடக்கு, கிழக்கில் – தாயகத்தில் முதியோர்கள் மிகக் கஸ்டங்களை சந்திக்கிறார்கள்.

கேள்வி?
இவர்களுக்கான அரச திட்டங்கள் ஏதாவது உண்டா?

பதில்!
ஓய்வுதியம் இல்லாத முதியோருக்கு அரசாங்கம் இரண்டாயிரம் ரூபா பிரதேச செயலகம் ஊடாகக் கொடுக்கிறது. ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் என்பது முதியோருக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளோ அல்லது போசாக்கான உணவோ வாங்குவதற்கு போதாது.

அரச முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்ற காரணத்தினாலே ஒருவரும் இல்லாதவர்கள், ஏற்றுக் கொள்ள மாட்டாதவர்கள் போன்ற நிலையில் உள்ளவர்களைத் தான் சிலவேளைகளில் எடுக்கிறார்கள். பிள்ளைகள் இருந்தும் பராமரிக்காத முதியோரை அரச முதியோர் இல்லங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே இந்த அரச முதியோர் இல்லங்கள் போதாத நிலையிலே, எங்களைப் போன்ற முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார்கள்.

நாங்கள் இத்தகைய முதியோர்களை ஏற்கின்ற போதும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட முதியோர் இல்லங்களை தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. அதற்கு நிறையப் பணம் அறவிடுகிறார்கள். சில முதியோர் இல்லங்கள் ஐம்பதாயிரம் அறவிடுகின்றனர். ஒரு இலட்ச ரூபா அறவிடும் முதியோர் இல்லங்கள்கூட இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளை முதியோர்கள் சந்திக்கின்றார்கள். அரசாங்கத்தினுடைய உதவி போதாது.

கேள்வி?
புலம்பெயர் தமிழர்கள் இவர்களுக்கு எவ்வாறு உதவலாம்?

பதில்!
புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை முதியோர்களுக்கு அவர்களின் நிதியுதவி தான் தேவை. இப்போது இயங்குகின்ற பல முதியோர் இல்லங்கள் புலம்பெயர் சமூகத்தின் உதவியினால் தான் ஓரளவு இயங்கினாலும், புலம்பெயர் சமூகத்தினர் முதியோர் இல்லங்களுக்கு நோயாளர் காவு வண்டி, போசாக்குள்ள உணவு கொடுப்பதற்கான சில மா வகைகள் போன்றவற்றை வழங்கி உதவி செய்யலாம்.

புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள் பராமரிப்பாளர்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கு ஏதாவது திட்டங்களை அமைப்புகள் ஊடாக செயற்படுத்தினால் மிகவும் பயனாக இருக்கும்.

எங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது ஊழியர் பற்றாக்குறை. முதியோரை அன்பாக, பண்பாக அவர்களை இந்த முதுமைக் காலத்தில் மானசீகமாகப் பராமரிக்கின்ற பராமரிப்பாளரைப் பிடிப்பது கஸ்டமாக இருக்கின்றது. அவர்கள் ஊதியம் அதிகம் கேட்கிறார்கள். எனவே புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள் பராமரிப்பாளர்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கு ஏதாவது திட்டங்களை அமைப்புகள் ஊடாக செயற்படுத்தினால் மிகவும் பயனாக இருக்கும்.