Home ஆவணங்கள் பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன்- பகுதி 1: வன்னிப் பெருநிலப்பரப்பின்  வரலாற்று முன்னோடியான முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ‘வரலாறும், இலக்கியமும் வேறு வேறானவை. உள்ளதை உள்ளபடி கூறுவது வரலாறு. கற்பனை கலந்து படைப்பது இலக்கியம். எனது பண்டாரவன்னியன் நாடகம் வரலாறல்ல. கற்பனை கலந்த நாடக இலக்கியம் என்பதை விமர்சர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

இலங்கையில் வாழும் பெரும்பான்மை மக்களால், சிறுபான்மை இனமான வடபுலத் தமிழர்களின் தனித்துவம் நசுக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள்  தோல்வி கண்டு,  தமிழினத்தின், உரிமைகளும் பறிக்கப்பட்டு அனாதரவாக நிற்கும் காலத்தில், பண்டாரவன்னியன் போன்றதொரு தலைமை தமக்கிருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது கொண்ட உணர்வு பூர்வமான மதிப்பு மரியாதை விருப்பம் ஆகியவை அதிகரித்து வந்திருந்தது.

பண்டார வன்னியன்அவரைப் பற்றி கற்பனையாக எழுதப்பட்டவற்றை  வரலாறாக எண்ணிக்கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டு வருவதும் கவலைக்குரியது. வரலாறு என்பது கற்பனை கலந்து எழுதுவதல்ல. உள்ளதை உள்ளபடி வரலாற்றில் எழுதினால் எமது எதிர்கால இருப்பைத் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.

தமிழினத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களைப் போற்றிப் பாடுவதற்காக கவிஞர்களும், புலமையாளர்களும் அரசவைகளில் நியமிக்கப்பட்டிருந்ததை இலக்கியங்களில் காண்கிறோம். அரசர்களைப் போற்றிப்  பாடுவது கவிஞர்களின் தொழிலாக இருந்தது.  அரசர்களை, வீரன், மாவீரன், சிற்றரசன், மன்னன், மாமன்னன் என்று போற்றிப் பாடியுள்ளார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய் அரசர்களை கடவுளின் அவதாரம் என்று போற்றியும் பாடியுள்ளார்கள்.

அதைப் பின்பற்றி  பெருநிலப் பிரதேசத்தில் வாழ்ந்த தலைமைகளை ‘ராசா’ என்றும் மன்னன் என்றும் மாமன்னன் என்றும் போற்றிக் கவிதைகள் பாடப்பட்டுள்ளன. அதேபோல அவர்களை அரசர்களாக உருவகப்படுத்தி, கவிதை நாடகங்களும், உரை நாடகங்களும் மேடையேற்றப்பட்டுள்ளதையும் காணலாம். அதற்காக அவர்களது உருவங்களும், ஆடைகளும் பொருத்தமாக அமைக்கப்பட்டு அவர்கள் பற்றிய எண்ணத்தை மிகைப்படுத்தி, மனக்கண்ணில் பதியும்  வண்ணம் வடிக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில் பண்டாரம் வன்னியனாரை சிற்றரசன், குறுநில மன்னன், அரசன் எனவும், மாமன்னன் எனவும் அழைப்பது, அவர்களுக்கிருந்த சுதந்திர தாகத்தினால் ஏற்பட்ட ஏக்கத்தின் வெளிப்பாட்டை நாம் உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வரலாற்று ரீதியாக அல்ல.

அந்நியர் ஆட்சிக் காலத்தில் பெருநிலப்பரப்பில் இருந்த நிர்வாகப் பதவி நிலைகளைச் சற்று பார்ப்போம். இலங்கையின் பல பகுதிகளில் தென்னிந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறியுள்ளனர். இவர்களில் அநேகமானோர் சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்தபோது, படை வீரர்களாக வந்தவர்கள். அவர்கள் நிபந்தனைகளுடன்  குடியேற அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளில் முக்கியமானது சுதேசிகளிடம் இருந்து திறை சேகரித்து அந்தந்த இராஜதானிகளுக்கு வழங்க வேண்டும் என்பதாகும்.

வரலாறு: இலங்கை வரலாற்றில் இரண்டு முறை வன்னியர்கள் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக கிழக்கிலங்கையில் இருந்த சோழ இளவரசன் ஒருவருக்கு மதுரையில் இருந்து மணப்பெண்ணை அழைத்து வந்தபோது  அவருக்கு காவலாக 60 வன்னிய குலத்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வைபவங்கள் முடிவடைந்ததும் அவர்களில் 59 பேர் பனங்காமப்பிரிவில் (பாணன்கமம்) குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

பாணன்கமத்தை சுற்றியிருந்த சுதேசிகளான இயக்கர் நாகர்களிடம் இருந்து திறை சேகரித்து இராஜதானிகளுக்கு வழங்க வேண்டும் என்பது வன்னியர்களுக்கு இடப்பட்ட உத்தரவாகும். திறை சேகரிப்பின்போது ஏற்பட்ட எதிர்ப்புகள், பாணன்கமத்தில் குடியேறிய 59 வன்னியர்களிடையே தலைமைப் பதவிக்காக ஏற்பட்ட போட்டிகள் காரணமாக 54 வன்னியர்கள் உயிரிழக்க நேரிட்டது. மிகுதி ஐந்து பேரும் பாணன்கமப் பகுதியை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து நிர்வாகம் செலுத்தினர். இந்தத் தலைமையாளர்கள் வன்னியனார் என அழைக்கப்பட்டனர்.

தாயகம் திரும்ப எண்ணிய வன்னியனார்கள் தென்னிந்தியாவிற்கு செய்தி அனுப்பினர். திருச்சிராப்பள்ளி, மருங்கூர் போன்ற இடங்களில் இருந்து மாப்பாண குலத்தைச் சேர்ந்தவர்கள் முல்லைத்தீவில் வந்திறங்கியுள்ளனர். இவர்களில் தலைமையாளரான இளஞ்சிங்க மாப்பாணரை பனங்காமத்திற்கு அழைத்து, அவரை வன்னியனாராக நியமித்து ஐந்து வன்னியனாரும் நாடு திரும்பினர்.

இளஞ்சிங்கரே முதன் முதலில் வன்னியனாராகப் பதவி வகித்த மாப்பாண குலத்தவராகும். சமகாலத்தில் வன்னிச்சிமார், வன்னியர்களைத் தேடி இலங்கை வந்தனர். இளஞ்சிங்க மாப்பாணருடன் ஒப்பந்தம் செய்து பாணன்கமத்தை ஐந்து பிரிவாகப் பிரித்து நிர்வகித்தனர். இவர்கள் வன்னிச்சிமார் என அழைக்கப்பட்டனர்.

கி.1505 களில் இலங்கை வந்த போர்த்துக்கேயர் மன்னார் தீவகத்திற்கு வந்தனர். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர். தமது அனுமதியில்லாமல் சமயம் மாற ஒப்புக் கொண்டமைக்கு மதம் மாறியவர்கள் தண்டிக்கப்பட்டனர். மாதோட்டம் ஊடாகப் படையெடுத்து யாழ்ப்பாணம் செல்ல முற்பட்ட போர்த்துக்கேயரை, பனங்காமத்தில் இருந்த வன்னிச்சிமார் எதிர்த்து நின்றனர். அதனை ‘வன்னியர்களுடைய நாடு’ என்று கூறிய போர்த்துக்கேயர், திரும்பி கரையோரமாகச் சென்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

இந்தப் போராட்டத்தின் பின்னர் ஐந்து வன்னிச்சிமாரும் தமக்கு பாதுகாப்பில்லை  எனக்கருதி உயிரை மாயத்துக் கொண்டனர். ஒப்பந்தத்தின்படி இளஞ்சிங்க மாப்பாண  பரம்பரையினரே தொடர்ந்து பனங்காம இராஜதானியில் வன்னியனார் பதவி வகித்து வந்தனர்.

கி.பி.1644 – 1658 வரை 14 வருடங்கள் போர்த்துக்கேயர் ஆட்சியில்  கயிலை என்பவர்  வன்னியனார் பதவி வகித்தார். இவர் போர்த்துக்கேயரின் கட்டளைகளுக்கு கீழப்படியவில்லை.

கி.பி.1658 களில் ஒல்லாந்தர் ஆட்சி ஆரம்பம். தொடர்ந்து 20 வருடங்கள் ஒல்லாந்தருக்கும் கயிலை வன்னியனார் கீழ்ப்படியவில்லை.

1678 களில் கயிலை வன்னியனார் காலமாகிய பின்னர், ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டொன் பிலிப் நல்ல மாப்பாண முதலியை பனங்காமத்திற்கு வன்னியனாராக நியமித்தனர். அவரது உறவினர்கள் ஏனைய பகுதிகளுக்கும் வன்னியனார்களாக நியமிக்கப்பட்டனர். வன்னியனார் பதவி வகித்தவர்கள்  நிர்வாகம் நடத்திய காரணத்தினால் பிரதேசம் முழுவதும் ‘வன்னி நிர்வாகப் பிரிவு’  (Vanni Administrative Division) என அழைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் வன்னி என மருவியது.

கி.பி 1679 களில் ஒல்லாந்தரால் கிழக்கு கரையோரப் பகுதியில் புதுக்குடியிருப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. அடுத்திருந்த பகுதி கரைதுறைப்பற்று எனவும், அதற்கும் தெற்கேயிருந்தது கரிக்கட்டுமூலை எனவும் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பிரிவுக்கு கீழ்ப்பட்ட கருநாவல்பற்றில் முதலியாராக இருந்த  டொன் தியோகு புவிநல்ல மாப்பாணருக்கு ‘வன்னியனார்’ என்ற பதவி உயர்வை வழங்கி இரண்டு பிரிவுகளுக்கும் வன்னியனாராக நியமித்தனர்.

இவருடைய மகனின் பெயர் டொன் தியோகு அழகேசன் புவிநல்ல மாப்பாணர் என்பதாகும். கி.பி.1742 களில் இவர் வன்னியனாராக நியமிக்கப்பட்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் பெயர் சின்னநாச்சன் மற்றவர் பெயர் பண்டாரம் என்பதாகும்.

கி.பி.1783 களின் பின்னர் பண்டாரம் கரைதுறைப்பற்று கரிக்கட்டுமூலைப் பகுதிகளுக்கு வன்னியனாராக நியமிக்கப்பட்டார். தமிழில் பண்டாரம் வன்னியனார் எனவும், சுருக்கமாகப் பதவி நிலையைக் குறிக்கும் வகையில் வன்னி எனவும்,  ஆங்கிலத்தில் பண்டார வன்னியன் எனவும் அழைக்கப்பட்டார்.

சமகாலத்தில் 16 பிரிவுகளுக்கு வன்னியனார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்நியர்கள் மீது பண்டாரம் தாக்குதல் நடத்தியபோது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்-விடத்தல்தீவு போன்ற இடங்களில் இருந்த கோட்டைகள்மீது தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த தாக்குதல்களுக்கு சில வன்னியனார்கள் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் இருந்துள்ளனர்.

பண்டாரம் மாப்பாண குலத்தைச் சேர்ந்தவர். வன்னிய குலத்தவரல்ல. பிரதேசத்தில் பாரம்பரியமாக இருந்த வன்னியனார் என்ற தலைமைப் பதவி அந்நியர்களால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

தொடரும்….

 

Exit mobile version