Home ஆவணங்கள் பண்டார வன்னியன் பகுதி 02 – ஆய்வாளர் அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன் பகுதி 02 – ஆய்வாளர் அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன் பகுதி 02

பண்டார வன்னியன் பகுதி 02

வரலாறு என்பது சுற்று வட்ட அமைப்பைப் போன்றது.  ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி சுற்றி வந்து திரும்பவும் அதே புள்ளியில் நிற்பது வரலாறு என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். சில நிகழ்வுகள் முன்னர்; நடந்தது போலவே, வேறுவேறு வடிவத்தில் திரும்பவும் நடைபெறுவதை வரலாறுகளில் காணலாம்.

கி.பி.1783 களில் ஒல்லாந்தர் பெருநிலப்பரப்பை  தமது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக கப்ரன் தோமஸ் நாகெல் அவர்களைப் பொறுப்பாக நியமித்திருந்தனர். அவர் முல்லைத்தீவிலிருந்து தனது நிர்வாகத்தை நடத்த அங்கு கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்திருந்தார். அதனால் வன்னி நிர்வாகப் பிரிவில் குழப்ப நிலை தோன்றியிருந்தது. ஒல்லாந்தருக்கு எதிராக குழப்பம் செய்தவர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறி அயல் பிரதேசங்களில் தங்கியிருந்தனர். முல்லைத்தீவிலிருந்த வன்னிச்சியார் சின்னநாச்சனும் அவரது சகோதரர் பண்டாரமும் நுவரகலாவௌ சென்று தங்கியிருந்தனர். குழப்பங்கள் அடக்கப்பட்ட பின்னர், திறையாக நெல்லை செலுத்த ஒப்புக் கொண்ட காரணத்தினால் சின்னநாச்சன் வன்னிச்சியாரும் அவரது சகோதரர் பண்டாரமும் கரிக்கட்டு மூலைக்கு திரும்பிவர அனுமதிக்கப்பட்டனர்.

நுவரகலாவௌவில் இருந்தபோது திசாவையின் மூத்த மகனான குமாரசிங்கனை சின்னநாச்சன் வன்னிச்சியார் விரும்பியிருந்தார். 1783 டிசம்பர் மாதம் அளவில் நுவரகலாவௌ  குமாரசிங்கனைத் திருமணம் செய்து, அவருடன் புகுந்த வீட்டிற்கு சென்றார். வன்னிச்சியார் சின்னநாச்சனின் உடன் பிறப்பான பண்டாரம் வன்னியனாராகப் பொறுப்பேற்றார்.

தேசவழமைச்சட்டம்:

பெருநிலப் பிரதேசத்தில் இருந்த காணிகளை அரச காணிகளாக்கி யாழ்ப்பாணத்திலிருந்த தேசவழமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கப்ரன் நாகெல் நடவடிக்கை எடுத்திருந்தார். வசதியுள்ளவர்கள் எதுவித அனுமதியுமின்றி கைவிடப்பட்டிருந்த குளங்களைத் திருத்தி விவசாயம் செய்வது வழக்கம். அதனால் இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்ய நிலச்சுவாந்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்தர் முக்கிய திறைப்பொருளாக நெல்லை வசூலிக்க தீர்மானித்தனர்.

குளங்களும் விவசாயமும்:

ஒட்டுசுட்டான் நெடுங்கேணியில் இருக்கும் அலைகல்லுகல்லுப் போட்ட குளத்தை பண்டாரம் வன்னியனார் திருத்தி விவசாயம் செய்த காரணத்தினால்  இந்தக்குளம் பண்டாரக்குளம் எனப் பெயர் பெற்றது. கற்சிலைமடுவிலும் வயல் காணிகளில் விவசாயம் செய்து வந்தார். நெல்லை திறையாக செலுத்த விரும்பாத பண்டாரம் வன்னியனார், பல காரணங்களைக் கூறி திறை செலுத்துவதை தவிர்த்து வந்த காரணத்தினால் ஒல்லாந்த நிர்வாகத்தினருக்கும் பண்டாரம் வன்னியனாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியிருந்தன.

சாயவேர்: துணிகளுக்கு சாயமூட்டுவதற்காக சாயவேர் சேகரிப்பு வடபுலத்தின் பல பகுதிகளில்  இடம்பெற்றது. இதற்கென குறைந்தளவு  ஊழியம் (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது. பண்டாரம் வன்னியனார் நிர்வாகப் பிரிவிற்குள் சேகரிக்கப்படும் சாயவேர் தரம் குறைந்ததென மதிப்பிட்டு குறைந்த விலை  வழங்கப்பட்டது. இதனால் பண்டாரம் மிகவும் வெறுப்படைந்திருந்தார். ஒல்லாந்தர் திடீரென சாயவேரை இலவசமாக சேகரித்துத் தரும்படி உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு பிரதேசத்திலிருந்த வன்னியனார்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பண்டாரம் வன்னியனார் இதற்கு உடன்படவில்லை. இதே நிலைமை யாழ்ப்பாணத்திலுமிருந்தது.  யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் வன்னிப் பிரதேசத்திற்கு வந்து பண்டாரத்துடன் சேர்ந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் ஒல்லாந்தர் கட்டியிருந்த  கோட்டையை தாக்குவதற்கு தீர்மானித்தனர். இந்தத் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. இதன் காரணமாக வன்னியனார் பதவியிலிருந்து பண்டாரம்,  நீக்கப்பட்டார். அவர் கரிக்கட்டு மூலையிலிருந்து வெளியேறி  நுவரகலாவௌ சென்று சகோதரியுடன் தங்கியிருந்தார்.

கி.பி.1795களில் ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்தபோதும் பிரதேசத்தில் குழப்பநிலை தோன்றியது. கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த  நோர்த் அவர்கள் சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன்,  ஒல்லாந்தருக்கு எதிராக குழப்பம் செய்து பதவிநீக்கம் செய்யபட்டிருந்தவர்களுக்கு திரும்பவும் வன்னியனார் பதவிகளை வழங்கினார். பண்டாரம் மேற்கு மூலையிலிருந்த இலுப்பைக்குளத்திற்கு வன்னியனாராக நியமிக்கப்பட்டார். சிறியகுளம் ஒன்றிற்கும் வயல் நிலத்திற்கும் பொறுப்பான வன்னியனாராக நியமிக்கப்பட்டதும் அவருடைய கசப்புணர்வு மேலும் அதிகரித்திருந்தது.

சமகாலத்தில் கண்டி இராஜதானியில் ஏற்பட்ட பதவி போராட்டங்கள் காரணமாக அந்நியரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போரட்டங்களை வன்னிப்பிரதேசத்திலும் கரையோரப் பிரதேசங்களில்  இருந்தும் ஆரம்பிக்கும்படி நுவரகலாவௌ (கன்டி) அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டது. அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க பண்டாரம் தாக்குதல்களை நடத்த தீர்மானித்தார்.

யுத்த தந்திரம்:

அந்நியருக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு முதலில் பெருநிலப் பரப்பிற்கான போக்குவரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டது. கொழும்பிலிருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் கிழக்குக்கடல் வழியாக திருகோணமலைக்கு அருகிலிருக்கும் கொட்டியாரத்தில் வந்திறங்கி, நிலப்பரப்பிற்குள்  வருவதைத் தடுப்பதற்காக, கொட்டியார இறங்குதுறைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்களை வெளியேறச் செய்தனர். அந்நியர்கள் தங்களுடைய பயணத்தை தொடரமுடியாத வண்ணம் வீதிகளின் குறுக்கே மரங்களைத் தறித்து விழுத்தினர்.

முல்லைத்தீவுக் கோட்டை:

1803ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ந்திகதி முல்லைத்தீவுக் கோட்டையைத் தாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு (கன்டி) நுவரகலாவௌ குமாரசிங்க திசாவையும் சேர்ந்து கொண்டார். முல்லைத்தீவுக் கோட்டையிலிருந்த சிறிய படைப்பிரிவினர் அங்கிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு தப்பியோடினர். முல்லைத்தீவும் கோட்டையும் குமாரசிங்க திசாவையிடம் கையளிக்கப்ட்டது. ஆனையிறவுப் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக பண்டாரம் கற்சிலைமடுவிற்குச் சென்று தங்கியிருந்தார். இக்காலத்தில் வன்னியனார் பதவி இரண்டாவது முறையாக பண்டாரத்திடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்த தாக்குதல்கள் காரணமாக கோபமடைந்த ஆங்கில நிர்வாகம் கடுமையான மும்முனைத் தாக்குதல்களை நடத்த தீர்மானித்தது. திருகோணமலையிலிருந்து வந்த கடற்படையினர் முல்லைத்தீவிற்கு வந்து தாக்குதல் நடத்தினர். அங்கு தங்கியிருந்த குமாரசிங்க திசாவை, பீரங்கிகளை இழுத்துக் கோண்டு பதவியாவிற்கு தப்பிச் சென்று அங்கிருந்து நுவரகலாவௌவைச் சென்றடைந்தார்.

முல்லைத்தீவிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் சென்ற வொன் டிறிபேர்க்,  மன்னார் வந்து அங்கிருந்து துணுக்காய் ஊடாக கற்சிலைமடு நோக்கி வந்தார். இந்தப் பிரதேசங்களில் இருந்த வன்னியனார்கள் எதுவித தகவலையும் பண்டாரத்திற்கு அனுப்பத் தவறியிருந்தனர்.

1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 திகதி அதிகாலை கற்சிலைமடுவில் தங்கியிருந்த பண்டாரத்தை அந்நியப்படை சூழ்ந்து கொண்டது. பண்டாரம் அங்கிருந்து தப்பி மேற்கு மூலை பண்டாரஇலுப்பைக்குளத்தைச் சென்றடைந்தார்.  சமகாலத்தில் மன்னார் விடத்தல்தீவில் இருந்த கோட்டைகளையும் காரியாலயங்களையும் தாக்குவதற்கு பண்டாரத்தின் குழுவினர் சென்றிருந்தனர். ஆங்கிலேயர் நடத்திய எதிர் த்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல்; திரும்பி விட்டது.

1808ம் ஆண்டு 16 முதலிமாருக்கு பதவிஉயர்வாக வன்னியனார் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே இருந்தவர்களுக்கு வன்னியனார் பதவி வழங்கியிருந்தாலும், பண்டாரத்திற்கு  மட்டும் வன்னியனார் பதவி வழங்காமை தெளிவாகிறது. அவர்களில் அநேகர் வன்னியனார் பதவியை ஏற்றுக் கொள்ளாமல் முதலியாராகவே இருந்தனர். ஏனெனெனில் வன்னியனர் பதவி ஒரு பிரதேசத்திற்கு உரியதாகவும், முதலியார் என்ற பதவி நாடு முழுவதற்கும் பொதுவாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. புதிய பதவிகள் வழங்கப்பட்டதும் பண்டார இலுப்பைக் குளத்திலிருந்த பண்டாரம் மேலும் வெறுப்படைந்து சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

1811ம் ஆண்டு பண்டார இலுப்பைக் குளத்தில் காலமானார். அவர் வாழ்ந்த வீடு மற்றும் ஆலயம் ஆகியவற்றின் சிதைவுகள் இருப்பதாக ஆங்கில ஆய்வாளாகள் தெரிவித்துள்ளனர்.

1903 -1904 களில் முல்லைத்தீவில் உதவி அரச அதிபராக இருந்த ஆர்.ஏ.ஜி வெஸ்ரிங் என்ற ஆங்கிலேயர் கற்சிலைமடுவில் இருந்த பெரியபுளியமரத்தை, ‘பண்டார புளியமரம்’ என அழைப்பதைத் தெரிந்துகொண்டு, அங்கு அடையாளத்திற்காக ஒரு நடுகல்லை நாட்டுவித்தார். பண்டாரம் தாக்குதலில் தோல்வியடைந்து சுமார் நூறு ஆண்டுகளின் பின்னர் ஆங்கிலேயரின் வெற்றியை நிறுவுவதற்காக இந்த நடுகல் நாட்டப்பட்டமை தெரிகிறது.

1960 களுக்குப் பின்னர் திரு.முல்லைமணி வே.சுப்பிரமணியமும் அவரது குழுவினரும் இந்த நடுகல்லைப் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். அதனை ஆதாரமாக வைத்து பள்ளிக்கூடங்களில் நடிப்பதற்கு பொருத்தமாக கற்பனை கலந்த குறுநாடகம் ஒன்றை முல்லைமணி எழுதினார். அந்த நாடகம் நீண்ட நாடகமாக எழுதப்பட்டு பலமேடை கண்டுள்ளது. முதன்முதலில் பண்டாரவன்னியன் நாடகம் வெளிமேடைகளில் மேடையேறிய போது நானும் நடித்துள்ளேன் என்பதை பதவிடவும் விரும்புகிறேன். நாடகத்தில் உள்ள வசனங்கள் உணர்பூர்வமானவை. அன்றிலிருந்து மக்கள் இந்தநாடகத்தை சிறுபான்மை இனத்தவருக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையில் நடந்த போராட்டமாக தொடர்புபடுத்தி பார்த்த காரணத்தினால் அவருடைய புகழ் தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் பரவியுள்ளது.

தேசிய வீரன்:

பண்டாரம் வன்னியனார் அந்நியராட்சிக்கு எதிராக சிங்கள மக்களோடு சேர்ந்து நின்று போராட்டம் நடத்தியவர். அதனால் இவர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய ஒரு தேசியவீரன்; என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்ற இரண்டு அந்நிய இனத்தவர்களால் நடத்தப்பட்ட நிர்வாக காலத்தில் வன்னியனார் என்ற பதவியைப்  பெற்றுக் கொண்டவர் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ‘மா-வீரன்’ என்று கூறுவது பெருமைக்குரிய விடயமாகும்.

ஆனால்; அவர்மீது கொண்ட மதிப்பின் காரணமாக  வரலாறுகளை எழுதுபவர்கள தவறான தகவல்களை வழங்கி அவரை வன்னியை ஆண்ட கடைசி மன்னனாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். அதன் உச்சக்கட்டமாக தற்போது, பண்டாரம் வன்னியனாரை ‘மாமன்னன்’ என அழைக்கலாமா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளீர்கள்.

‘பண்டாரம்’ என்பது அவரது பெற்றோர் வைத்த இயற்பெயர். ‘வன்னியன்’ என்பது அவர் வகித்த பதவி. அந்நியர் ஆட்சிக்காலத்தில் பெருநிலப்பரப்பில் இராஜதானிகள் எதுவும் இருக்கவில்லை. அப்படியிருக்கும்போது, அரசனாகவோ அல்லது மாமன்னனாகவோ அவரை அழைப்பது என்பது வரலாற்றின்படி முடியாத காரியமாகும்.  கற்பனை கலக்காமல் உள்ளதை உள்ளபடிகூறி, இனம், மொழி,  மற்றும் நாடு  ஆகியவற்றில் உண்மையான பற்றுள்ளவர்களாக எதிர்கால சமூகத்தை மாற்ற வேண்டியது வரலாற்றாசிரியர்களின் பொறுப்பு  என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன்.

முற்றும்.

Exit mobile version