Home செய்திகள் பாகிஸ்தானின் அணுவாயுதத் தந்தை காலமானார்

பாகிஸ்தானின் அணுவாயுதத் தந்தை காலமானார்

பாகிஸ்தானின் அணுவாயுதத் தந்தை

பாகிஸ்தானின் அணுவாயுதத் தந்தை எனப் போற்றப்பட்ட கலாநிதி அப்துல் கொடீர் ஹான் கோவிட்-19 நோய் காரணமாக  கடந்த வாரம் பாகிஸ்தானில் மரணமடைந்துள்ளார்.

காலநிலை மாற்றம் உலகத்தை அச்சுறுத்திவரும் போதும், அணுவாயுதப் போட்டியும் சத்தமின்றி உலகத்தை அச்சுறுத்தி வருகின்றது.

ஈரான் உட்பட பல அரபு நாடுகள் அதனை தயாரிக்க முற்பட்டு வருகையில் உலகில் அணுவாயுதத்தை கொண்டுள்ள ஒரே ஒரு முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இந்தியாவை விட அதிக ஆயுதங்களை தயாரித்துள்ளது.

உலகின் ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்களின்படி பாகிஸ்தானிடம் 160 அணுவாயுதங்களும், இந்தியாவிடம் 150 அணுவாயுதங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், ரஸ்யாவிடம் 6375, அமெரிக்காவிடம் 5800, சீனாவிடம் 320, பிரான்ஸிடம் 290, பிரித்தானியாவிடம் 215, இஸ்ரேலிடம் 90 மற்றும் வடகொரியாவிடம் 30 தொடக்கம் 40 அணுவாயுதங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தை என போற்றப்படும் கலாநிதி அப்துல் கொடீர் ஹான் நெதர்லாந்தின் அணுசக்தி ஆய்வுகூடத்தில் தான் பயின்ற கல்வியைக் கொண்டு தனது நாட்டுக்கான முதலாவது அணுவாயுதத்தைத் தயாரித்திருந்தார்.

அது மட்டுமல்லாது, ஏனைய அரபு நாடுகளும் அணுவாயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையையும் கொண்டிருந்தார். ஈரானுக்கு தனது உதவிகளை அவர் வழங்கியதுடன், லிபியாவுடனும் தொடர்புகளில் இருந்துள்ளார்.

சவுதி அரேபியாவும் அதில் ஆர்வம் காண்பித்ததுடன், பாகிஸ்தானின் அயுவாயுத உற்பத்திக்கும் அது உதவியிருந்தது.

முஸ்லீம் நாடுகள் அணுவாயுதங்கள் வைத்திருப்பதை எதிர்க்கும் இஸ்ரேல், தனது மொசாட் என்ற இரகசிய தாக்குதல் அணி மூலம் ஹானை படுகொலை செய்ய முயன்றபோதும், அவர் தாக்குதலில் இருந்து உயிர்தப்பியிருந்தார்.

எனினும் கோவிட்-19 நோய் காரணமாக அவர் கடந்த வாரம் தனது 85 ஆவது வயதில் பாகிஸ்தானில் காலமானார்.

Exit mobile version