Home ஆய்வுகள் படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா

இதனைத் தாண்டி இரண்டாவது நுழைவாயில் மீண்டும் மேலே அடுத்த குகையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால் சென்று பார்க்க எமக்கு நேரம் போதாது. நேரம் 3 மணியைத் தாண்டியிருக்கும். காட்டினுள் வெளிச்சம் வேகமாக மறையத் தொடங்கிவிடும். மழை மேகங்களும் இன்னும் வேகமாக இருளினை பரப்பிக் கொண்டிருந்தன.

மீண்டும் படர்கல் மலை காட்டு நுழைவாயிலை நோக்கியதாக மிகவும் வேகமாகவும், அவதானத்துடனும் நடக்கத் தொடங்குகிறோம். மிகவும் களைப்பாக இருக்கிறது. காட்டிலே நேற்றுப் பெய்த மழை நீர் ஓடி வரும் ஓடை ஒன்றில் இருந்து விலங்குகளாகவே மாறி நீரை அருந்தத் தொடங்கினோம். தாகம் தீர்ந்தது. புத்துணர்ச்சி வந்தது.

.திவா படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - மட்டு.திவா

படர்கல் மலைத் தொடரின் இன்னொரு மலை எமக்கு அழகிய நீர் வீழ்ச்சியைக் கண்ணுக்கு இனிதாக காட்டிக் கொண்டு இருக்கையில், யானையின் வாசனையை இலகுவில் அறிந்து கொள்ளும் ஜெகன் அண்ணா பக்கத்தில் யானை வந்து கொண்டிருப்பதைப் பற்றிய எச்சரிக்கையை எமக்குத் தந்தார். குழுவும் நேரத்தை விரயம் செய்யாது காட்டை விட்டு வெளியேற, முன்பை விட வேகமாக நடக்கத் தொடங்கியது. நிகோசன் அண்ணாவும், நானும் நடந்தவற்றை எல்லாம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் இருக்கும், காட்டின் வாகனம் செலுத்தக் கூடிய பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

புளுட்டுமானோடை காடுகளை தாண்டினால் தான் மக்கள் நடமாடும் பிரதேசம் வரும். மழைச்சாரல் லேசாக விழுவதை உணரக் கூடியதாக இருந்தது. அரைமணி நேர மழை கூட ஏற்கனவே பெய்த மழையால் நீரை உறிஞ்சி வைத்திருக்கும்  காடுகளில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கும்.

புளுட்டுமானோடைக் குளத்தினை அடைவதற்கிடையில் 2 சிற்றோடைகளைக் கடந்தாக வேண்டும். காட்டு வெள்ளம் வரத் தொடங்கினால், எம்மால் இங்கிருந்து நகர முடியாமல் போய்விடும். தொலைபேசிக்கு சிக்னல் கூட வராது. இரவுக்குச் சாப்பிடக் கூட ஒன்றும் இல்லை. எண்ணற்ற யோசனைகளுடன் வேகமாக ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து புளுட்டுமானோடைக் குளத்தினை வெற்றிகரமாக வந்தடைந்தோம். இங்கிருந்து மழை உரக்கத் தொடங்கியது.

எனது மோட்டார் சைக்கிளுக்கு மழையைக் கண்டால் கொஞ்சம் பயம். உடனடியாக எஞ்சின் தொழிற்படுவதை நிறுத்தத் தொடங்கிவிடும். அன்றைய நாளும் அதே நிலைமை தான். புளுட்டுமானோடைக் குளத்தினருகே உள்ள வாடியில் மழைக்கு ஒதுங்கினோம். எம்முடன் வந்த திருச்செல்வம் ஐயாவும், ஜெகன் அண்ணாவும் குளத்தருகில் இருந்த கோவிலில் ஒதுங்கி நின்றனர். நாம் முன்னே உள்ள வாடியில் இருப்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் அவர்களுடன் இருந்த தொடர்பு எமக்கு இல்லாமல் போனது.

நெடு நேரமாக அவர்களைக் காணவில்லை என்பதால், சென்று பார்ப்போம் எனத் திரும்பிச் செல்லும் போது எனது மோட்டார் சைக்கிள் முழுமையாக செயலிழந்தது. அவர்களும் நாங்கள் போய் விட்டோம் என நினைத்து, எம்மைத் தேடியபடி காட்டை விட்டு வெளியேறும் வழியினை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர்.

தெய்வாதீனமாக 10 நிமிடத்தில் எனது மோட்டார் சைக்கிளை நிகோசன் அண்ணாவின் உதவியுடன் சரி செய்துவிட்டு. வேகமாக மற்றைய இருவரும் இந்தப் பாதையால் தான் எம்மைத் தேடி சென்றிருப்பார்கள் எனக் கணித்துக் கொண்டு புறப்பட்டோம். எப்படியோ நாங்கள் போன வேகத்தில்  புளுட்டுமானோடை காட்டின் நுழை வாயிலான குமாரத்தன் கோவிலுக்கு அருகில் வைத்து அவர்களைக் கண்டு பிடித்து விட்டோம்.

புளுட்டுமானோடை குளத்தினை நாம் நெருங்கும் போது, பெய்யத் தொடங்கிய அடை மழை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாம் வரும் போது இருந்த பாதைகளை எம்மால் இப்பொழுது அவதானிக்க முடியவில்லை. வயல் வேறு பாதை வேறென பிரித்தறிய முடியாமல் ஏதோ ஒரு குத்துமதிப்பாக 20 Km/h எனும் வேகத்தைக் கூட எட்டமுடியாமல் பயணம் செய்து கொண்டிருந்தோம். நேரம் என்னவோ 5.15 மணி  மட்டில் தான் இருக்கும். ஆனால் எம் முன்னால் இருந்த இருட்டின் அளவு 7 மணியைத் தாண்டி இருக்கும் போல  என நினைக்கத் தூண்டியது.

6 மணி மட்டில் காட்டுப் பாதைகளைக் கடந்து, குசலானமலை அருகே வரும் போது, மீண்டும் எனது மோட்டார் சைக்கிளின் எஞ்சினில் நீர் புகுந்ததால், உடனடியாகத் தொழிற்பாட்டை நிறுத்தியது. எவ்வளவோ முயற்சி செய்தும் திரும்ப எஞ்சினைத் தொழிற்பட வைக்க முடியாமையால், அருகில் இருந்த ஓலை வேயப்பட்ட – கைவிடப்பட்ட வாடி ஒன்றினுள் வந்து ஒதுங்கி, அனைவரும் அடுத்த திட்டத்தைத் தீட்டத் தொடங்கினோம்.

வாடியில் இருந்த சிறு கயிறுகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு  பெரிய கயிறு ஒன்றை உருவாக்கினோம். அதை வைத்துக் கட்டி மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே வீடு வரை செல்வது தான் திட்டம். ஆனால் இந்த இடத்திலிருந்து வீடு வரையான தூரம் அண்ணளவாக 30 கிலோ மீற்றர் இருக்கும். அதிகம் யோசிக்க நேரமில்லை. கிடைத்தவற்றை வைத்து நிகோசன் அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் எனது மோட்டார் சைக்கிளைக் கட்டிக் கொண்டு இழுத்துக் கொண்டு போனோம்.

இலுப்படிச்சேனைச் சந்தியில் இருந்து மாவடியோடைக்கு வரும் பாதையில் பயணித்தவருக்கு மட்டும் தான் விளங்கும் இது வாகனப் போக்குவரத்துக்கு எவ்வளவு கடினமான பாதை என்று. நாம் மோட்டார் சைக்கிள்களை இணைத்துக் கட்டிய கயிறு மிகவும் மெல்லியது. எனவே அதிகமான அழுத்தம் கொடுத்தால் அறுந்துவிடும்.

அப்படி இரண்டு தடவைகள் அறுந்து விட்டன. அடுத்த தடவை அறுவதற்கு இடம் கொடுக்காது, பள்ளங்கள் வரும் வேளையில் கயிறுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருக்க நான் காலாலே உந்தி இழுப்பதற்கு இலகுவான வகையில் விசையை பிரயோகிக்கத் தொடங்கினேன். இந்த முறை எமக்கு மிகவும் கை கொடுத்ததெனச் சொல்லலாம்.

அநேகமாக இந்தப் பாதை ஒவ்வொரு 5 மீட்டருக்கு ஒரு முறை பெரிய பள்ளத்தைக் கொண்டிருக்கும். அனைத்தும் இந்த கனரக வாகனங்களால் ஏற்பட்ட பள்ளங்கள் தான் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட  முனைகிறேன். அதனால் நான் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு வாத்து போல வீதியில் நீந்திக்கொண்டு போனேன். இந்த நாள் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத ஒரு நாள் ஆகிப் போனதுக்கான முக்கிய காரணங்களில் இந்த வாத்து நீச்சலும் ஒன்று எனலாம்.

அப்படியே ஒரு மாதிரியாக இலுப்படிச்சேனை வரை வந்து விட்டோம். வழிகாட்டியாக வந்த வடிவேல் அய்யாவின் மருமகளின் கடையில் பிஸ்கேட் உம் வாங்கிச் சாப்பிட்டு, தேநீரும் அருந்திவிட்டு செங்கலடி வரை மோட்டார் சைக்கிளை இழுத்துக்கொண்டே போய், நண்பன் ரேணுவின் வீட்டில் நாளை காலை வந்து எடுக்கிறேன் எனக் கூறிவிட்டு நான் வெளியே வரவும், நிகோசன் அண்ணா வடிவேல் ஐயாவை அவரது வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.

ஏற்கனவே நேரம் 8 மணியைத் தட்டிக் கொண்டு இருந்தது, திருச்செல்வம் ஐயாவிடமும் , ஜெகன் அண்ணாவிடமும் விடைபெற்றுக்கொண்டு இரவுச் சாப்பாடாக கொத்துரொட்டிப் பார்சலும் கட்டிக்கொண்டு 8.30 மணி அளவில் நான் மட்டக்களப்பில் உள்ள எனது வீட்டினை வந்தடைந்தேன்.

நிகோசன் அண்ணா இன்னும் 39 கிலோமீற்றர் பயணிக்க வேண்டி இருந்தமையால், அவரும் தாமதிக்காமல் கிளம்பி விட்டார். அன்றைய நாளின் கதைகளை அம்மாவிடம் கூறி, சாப்பிட்டு முடிக்கும் போது நேரம் இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது. இடரின் போதும் என் கூடவே இருந்த நண்பன்  நிகோசன் அண்ணாவையும், குழுவினரையும் மறக்கவே முடியாது.

பாதுகாப்பாக வீடுவரை வந்ததையிட்டு இருந்த மகிழ்ச்சியில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது. வீட்டிலேயே கிணற்றுத் தவளை போல இருப்பவர்களுக்கு இப்படி ஒரு பயண அனுபவத்தை மற்றவர்களுடன் சொல்லி மகிழக்கூடக் கதை இருக்காது. இந்த வயது கடந்தால் எந்த வயதில் செல்ல இயலும்? அடுத்த பயணத்தில் சந்திக்கிறேன்.

முற்றும்.

நன்றி.

-மட்டுநகர் திவா

Exit mobile version