Tamil News
Home செய்திகள் P2P போராட்டம் – சாணக்கியன்,செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலரிடம் காவல்துறையினர் வாக்கு மூலம்

P2P போராட்டம் – சாணக்கியன்,செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலரிடம் காவல்துறையினர் வாக்கு மூலம்

ஆறு காவல்துறை நிலையங்களைச் சோ்ந்த  காவல்துறை  உத்தியோகத்தர்கள் இன்று சாணக்கியனை அவரது அலுவலகத்தில் சுற்றிவளைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றமை குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

 

மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, சம்பாந்துறை ஆகிய காவல்  நிலையங்களைச் சோ்ந்த காவல்துறையினரே சாணக்கியன் அலுவலகத்திற்குச் சென்று குறித்த போராட்டம் தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், எமது மக்களுக்கான போராட்டத்தின் தார்ப்பரியத்தை எடுத்துரைத்து அவர்களை அனுப்பிவைத்ததாக சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

அதே நேரம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் பருத்தித்துறை காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

யாழ்.மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த காவல்துறையினர் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர், அதன்போது சிங்கள மொழியில் வாக்குமூலத்தை காவல்துறையினர்  பதிவு செய்த போது “ எனக்கு வாசித்து புரிந்து கொள்ளமுடியாத மொழியில் பதிவு செய்யப்படும் வாக்குமூலத்தில் கையொப்பம் இட மாட்டேன் “ என முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கூறியமையை அடுத்து அவரது வாக்கு மூலத்தை தமிழ் மொழியில் பதிவு செய்தனர்.

அதே போல் பொத்துவில் தொடங்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி ஆகியோரிடமும் காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version