எங்களுடைய பிரச்சினை எமக்கான பிரச்சினை மட்டுமல்ல – சிறீதரன் 

22 நாடுகள் எங்கள் மீது போர் தொடுத்ததால் எங்களால் தனியாக எதுவும் செய்ய முடியவில்லை. அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐ.நா உள்ளிட்ட தரப்புகள் இலங்கையுடன் பேசுகிறது. யார் தீர்வு தரப்போகிறார்கள்? என த.தே.கூட்யமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தினர் நடாத்திய கலைவிழாவிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய பிரச்சினை எமக்கான பிரச்சினை மட்டுமல்ல. அது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குரியது, உலகத்தினுடைய சமாதானத்தோடு சம்பந்தப்பட்டது, உலகத்தினுடைய பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டது, இலங்கையில் உள்ள சிங்களவர்களின் இருப்புகளோடு சம்பந்தப்பட்டது.

ஒரு இனத்தினுடைய மொழி, அந்த இனத்தினுடைய கலாசாரம், அந்த இனத்தினுடைய நிலம், அந்த இனத்தினுடைய பண்பாடுதான் அந்த இனம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்ற கருவி.

நாங்கள் ஒரு தேசிய இனம் என்று கூறப்படுகின்றோம், இந்த மண்ணிற்கு நாங்கள் மூத்த குடிமக்கள், ஈழத்து மண்ணிலே நாங்கள் முதல் தோன்றியவர்கள், பஞ்ச ஈச்சரங்களை வைத்து வரலாறு படைத்தவர்கள், நாங்கள் நாகர்களாக வாழ்கின்றோம். ஆகவே சிங்களவர்களுக்கு முன்பாகவே மூத்தவர்களாக நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்த நாங்கள் ஏன் எங்களுடைய பண்பாட்டை, எங்களுடைய இன மொழி அடையாளத்தை, எங்களுடைய நிலத்தை ஏன் நாங்கள் இழக்க வேண்டும்?

நாங்கள் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழுகின்ற பீனிக்ஸ் போன்ற ஒரு இனம். அதனால் தான் நாங்கள் இன்று உலகநாடுகளிடையே பேசுபொருளாக காணப்படுகின்றோம். ஏன் இலங்கை எங்களோடு பேச வேண்டும்? அவர்கள் பேசாமல் தங்களது வேலையை செய்யலாமே, ஏன் அவர்களுக்கு ஒரு பேச்சுவார்த்தை தேவைப்படுகிறது? பொருளாதார கஷ்டம் இருக்கலாம், யுத்தம் முடிந்தது தமிழர்களை அழித்தார்கள், பேச வேண்டிய அவசியம் இல்லையே. வடக்கு கிழக்கில் இவ்வளவு இராணுவம் இருக்கிறது ஏன் எங்களோடு பேசவேண்டும்?

என்னதான் அடக்கு முறைகள் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் தமிழர்களது விடயத்தில் தலையிடவேண்டிய ஒரு தார்மீக கடமைகளும் பொறுப்புக்களும் சர்வதேச சமூகத்திடம் இருக்கிறது. அதை தாண்டிச் செல்ல முடியாததால் இலங்கை இன்று எங்களுடன் பேசுவதற்கு உள்ளார்கள். அதை உலகமும் இன்று உன்னிப்பாக பார்க்கிறது.

நாங்கள் காலக் கடமைகளை தவறாக பார்க்க முடியாது. அதனால் தான் இது. அருமையான காலம். எங்களுடைய இனத்தை சரியாக வழிநடத்த வேண்டிய கடமைகளும் பொறுப்புக்களும் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என்றார்.