எங்கள் வரலாற்றை மணிவண்ணன் காலத்திலாவது அடையாளப்படுத்த வேண்டும்-ஆறு திருமுருகன்

மணிவண்ணன் காலத்திலாவது அடையாளப்படுத்த வேண்டும்

‘எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள். இன்றைக்காவது எமது வரலாற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும். முதல்வர் மணிவண்ணன் தனது காலத்திலாவது இதனை செய்ய வேண்டும்”என   செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆரியகுளத்தை திருத்துவதற்கு தற்போதைய மாநகர முதல்வர் முன்வந்தமை உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். ஆரியகுளம் யாருடைய குளம் என்பது தொடர்பாக தமிழர்களுக்கே சரியாக தெரியாது. இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வந்த ஆரியச் சக்கரவர்த்தி இங்கு வந்து ஆட்சி செய்த காலத்திலேயே ஆரியகுளம் உருவாக்கப்பட்டது. ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழர்களென பேராசிரியர் பத்மநாதன் தெளிவுபடுத்துகிறார்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலேயே ஆரியகுளம் உருவாக்கப்பட்டது. இது சைவத் தமிழ் மன்னர்களுடையது எனக் கூறுங்கள். மதங்களை கடந்து போகிறோம் என்று சொல்லி எங்களை பொதுவானவர்கள் என்று கூறாதீர்கள். இத்தகைய குளங்கள் அருகிலேயே கல்வெட்டுகளை பதியுங்கள். யாழ் மாநகரசபை இதனைச் செய்ய வேண்டும்.

எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள். இன்றைக்காவது எமது வரலாற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும். முதல்வர் மணிவண்ணன் காலத்திலாவது அடையாளப்படுத்த வேண்டும். இதற்கு பணம் இல்லாவிட்டால் சைவ அமைப்புக்களான எங்களிடம் கேளுங்கள். நாங்கள் செய்வோம். வரலாற்றை ஆவணப்படுத்த தவறிய காரணத்தால் வரலாற்றாசிரியர்களும் சமாளித்துச் செல்லவே பார்க்கின்றனர்.

நாவலர் மண்டபத்தில் கடந்த காலத்தில் ஆய்வரங்குகளும் இந்து கலாசார திணைக்களத்தின் நிகழ்வுகளும் நடந்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது? எமது இனத்திற்காகவும் சமூகத்துக்காகவும் பாடுபட்ட நாவலரின் இடத்தை எவ்வாறு வைத்திருக்கிறோம். இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். பாராமரிக்க முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள்” என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad எங்கள் வரலாற்றை மணிவண்ணன் காலத்திலாவது அடையாளப்படுத்த வேண்டும்-ஆறு திருமுருகன்