ரம்புக்கனை சம்பவத்திற்கு எதிரப்பு – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி உறுப்பினர் விலகல்

ரம்புக்கனை சம்பவத்திற்கு எதிரப்பு

ரம்புக்கனை பகுதியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவத்திலிருந்து  விலகுவதாக   அஸீஸ் நிசாருதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இந்நாட்டு மக்கள்  பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும்  முகம்கொடுத்து வருகின்றனா்.

உங்கள் அரசாங்கத்தின் மீது  தமது எதிா்ப்புகளை காட்டுவதற்கு பொதுமக்கள்  நாளுக்கு நாள் வீதிகளுக்கு இறங்கி வருகின்றனா். எாிபொருள், பால்மா, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மின்சார துண்டிப்பு, உணவுப்பொருள்களின் விலையேற்றம்  போன்றவற்றால் மக்கள் சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருகின்றனா்.

இன, மத, கட்சி பேதங்களை மறந்து   இந்நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி  வீதிகளில்  இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

நாட்டின் இந்த அவல நிலைக்கு காரணம் அரசாங்கம் மேற்கொண்ட தூர நோக்கற்ற செயற்பாடுகளே என்பதை மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தாா்கள். ஆனால் ஜனாதிபதியான  நீங்கள் காலம் கடந்து  அந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளீா்கள்.

இன்று இலங்கை மக்கள் வரலாறு காணாத  துயரில் காலத்தை நகர்த்திக்கொண்டு இருக்கிறாா்கள். வாழ்வாதாரம் இன்றி வீடுகளுக்குள் போராடிக்கொண்டிருந்தவா்கள், தமது போராட்டத்தை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறாா்கள்.

உங்கள் அரசாங்கத்திற்கெதிராக  தமது  துன்பங்களை, துயரங்களை, சீற்றங்களை  வெளிக்கொணரும் ஜனநாயக ரீதியிலான  செயற்பாடுகளையே மக்கள் முன்னெடுத்து வருகின்றனா்.

ஆனால், நிராயுதபாணிகளான மக்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு  காவல்துறையினா்  மிகவும் கடுமையான, மிலேச்சத்தனமான, தாக்குதல்களை தற்போது மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனா்.

மக்களின் எாியும்  பிரச்சினைகளுக்கான தீா்வை அவசரமாக வழங்குவதற்கு பதிலாக,  அவா்களின் குரல்வளையை  அதிகார பலத்தின் மூலம்  நசுக்க  முயல்வது  ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும்.

காவல்துறை இந்த கொடுமையான செயற்பாட்டை கச்சிதமாக ஆரம்பித்திருக்கிறது.

தமது அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் அப்பாவி மக்கள் மீதான இத்தகைய மனிதநேயமற்ற அடக்குமுறை செயற்பாடுகள் தேசிய மட்டத்தில் பெரும் கொந்தளிப்பையும், சா்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்த ஜனநாயக விரோத நகா்வுகள் இலங்கையின்  பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும்.

ரம்புக்கனையில் போராட்டக்காராின் உயிரை பலியெடுத்த, பலரை காயப்படுத்திய காவல்துறையினாின் கண்மூடித்தனமான தாக்குதல் மனித உரிமையை மீண்டும் ஒருமுறை கேள்விக் குறியாக்கியிருக்கிறது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும், மக்களை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கும் காவல் துறையினா் நடாத்தியிருக்கும் இந்த படுகொலைகளுக்கு காரணமானவா்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

ஒரு சுதந்திர ஊடகவியலாளன் என்ற ரீதியில் ரம்புக்கனையில் இடம்பெற்றுள்ள  இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும், படுகொலைக்கும்  எனது எதிா்ப்பை தெரிவிக்கு முகமாகவும், ஓா் இலங்கை பிரஜை என்ற வகையில் அடக்கி ஒடுக்கப்படும் இந்நாட்டு  மக்களின் போராட்டத்திற்கு  எனது ஆதரவை வெளிப்படுத்து முகமாகவும்    நீங்கள் எனக்கு வழங்கிய  ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவத்திலிருந்து   இராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி மீது முஸ்லிம் சமூகம் மிகவும் அதிருப்தியுற்றிருந்த நிலையில் கூட, நீங்கள் வழங்கிய அங்கத்துவத்திற்கு மதிப்பளித்து முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக எனது சமூகத்தின் உாிமைகளை பாதுகாக்கும் நோக்கில் நான் செயலாற்றி வந்துள்ளேன்.

இந்நாட்டு அப்பாவி மக்கள் படும் அவஸ்தை்தைகளையும், அவா்கள் மீது தொடுக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களையும், அநீதிகளையும் பார்த்துக்கொண்டு, சகித்தக்கொண்டு  ஜனாதிபதி செயலணியில் ஒரு அங்கத்தவராக தொடர்ந்தும்  செயற்பட என்னால் முடியாமல் இருப்பதை மிகுந்த மனவேதனையுடன் உங்களுக்கு அறியத் தருவதோடு,  ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவத்திலிருந்து இராஜிநாமா செய்வதை உங்களுக்கு இத்துடன் அறியத்தருகின்றேன்.

எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவாக உங்களை வேண்டிக்கொள்கின்றேன்” என்றுள்ளது.

Tamil News