Tamil News
Home செய்திகள் யாழில் தேசிய பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு : போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்...

யாழில் தேசிய பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு : போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு 

தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை கோரியுள்ளனர்.

இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் மக்கள் வட கிழக்கெங்கிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு, தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளுமின்றி, நாட்களை கழித்துவரும் நிலையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள், காணி விடுவிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என அரசின்  திட்டமிடப்பட்ட இனப்பிரச்சினைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத சூழ்நிலையில், தேசிய பொங்கல் விழாவினை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில்  யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?

ஜனாதிபதி பொங்கல் விழாவை  மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பாராயின், தமிழ் மக்களாக நாங்களும் இணைந்துகொள்வோம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) 3 மணியளவில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெற இருக்கின்ற தருணத்தில், 1 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும்  இடத்துக்கு செல்வதோடு நிறைவடையும்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் அரசியல் பேதமின்றி இந்த பொங்கல் நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்த சாத்வீக போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

அத்தோடு அனைத்து சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version