Home நேர்காணல்கள் பிரத்தியேகக் கல்வியின் ஆதிக்கமும் பெற்றோர், பிள்ளைகளின் உளவியல் ரீதியான தாக்கமும் – சந்துரு மரியதாஸ்

பிரத்தியேகக் கல்வியின் ஆதிக்கமும் பெற்றோர், பிள்ளைகளின் உளவியல் ரீதியான தாக்கமும் – சந்துரு மரியதாஸ்

பிரத்தியேகக் கல்வியின் ஆதிக்கமும்

சந்துரு மரியதாஸ்

பிரத்தியேகக் கல்வியின் ஆதிக்கமும் பெற்றோர், பிள்ளைகளின் உளவியல் ரீதியான தாக்கமும்: தன் பிள்ளைக்கு உகந்த துறை எது என்பதனை அறிந்துகொள்ளாமல், தன்னால் நிறைவேற்றிக் கொள்ளாத இலக்கினை தன் பிள்ளைகளைக் கொண்டு சாதிக்க முயற்சிப்போரின் கருவியே பிரத்தியேக வகுப்புக்கள் என்பதில் ஐயமில்லை. இவற்றின் உயிரோட்டத்தின் சுவடுகளை வசதி கொண்ட பெற்றோர்கள் தான் வலுப் படுத்துகின்றனர் என்று எண்ணினால் மறுபக்கம் இன்று வறிய பெற்றோர்களும் என்ன செய்வதென்று அறியாமல் தமது உழைப்பையெல்லாம் தனியார் வகுப்புக்களுக்குக் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தனியாள் ஒவ்வொருவரையும் குவியப்படுத்தி கற்பித்தலில் சுவையும் விறுவிறுப்பும், கற்பவரைத் தூண்டும் விசையும், அன்பு வெளிப்பாடும், ஆசை வார்த்தைகளும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் பெரும்பாலும் கொண்டிருப்பதனால், மாணவர்களுக்காக பாடசாலையில் நடாத்தப்படும் இலவசக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்று அலட்சிப் போக்கினை அடைந்து வருகின்றன.

பல்கலைக்கழக அனுமதியில் போட்டி நிலவுகின்ற சூழலில் பிரத்தியேக போதனைகளை மாணவர் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக வந்துவிட்டதாயினும், அது ஆசிரியர்களது சுய கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது. மாதாந்த சம்பளப் பணத்தை விடுத்து, தினசரி சந்தாப்பணம் பெறும் இன்றைய பிரத்தியேக கல்வி வழங்கும் ஆசிரியர்களது நிலை சமூகக் கண்ணோட்டத்தில் அவர்களது அந்தஸ்தை குறைத்து விட்டதெனலாம். இன்றைய பிரத்தியேகக் கல்விக்கு செலவிடப்படும் செலவீனங்களால் பெற்றோர்கள் பதறிப் போய் காணப்படுகின்றனர். வறுமை கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் நிலை என்னாவது? தமது சக மாணவர்கள் மேலதிக வகுப்புக்கள் மற்றும் பிரத்தியேகமான கல்வி பெறும்போது தாம் மட்டும் குடும்ப பொருளாதாரக் கஷ்டம் காரணமாக வெறும் மன உளச்சல்களுக்கே தள்ளப்படுகின்றனர்.

அத்தோடு இவ்வாறான பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கத்தினால் பிள்ளைகள் பெற்றோரை வீட்டில் சந்திப்பதற்கான நேரங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்டு சென்று கொண்டிருக்கின்றது. பாடசாலை நேரம் தவிர்ந்து படுக்கைக்குச் செல்லும் நேரம் மட்டும் இன்று பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை பொதுவான கண்ணோட்டத்தில் ”பிள்ளை கற்பதற்குத்தானே வெளியே செல்கிறான் இதில் என்ன தவறு இருக்கின்றது” என எண்ணத் தோன்றலாம் ஆனால் அவற்றுள் பல உண்மைகள் புதைந்து காணப்படுகின்றன.

மாணவர்களின் சமய வழிபாடுகளுக்கான நேரம் தடைப்படுகின்றமை, பிள்ளை பெற்றோருடன் கொள்ளும் மகிழ்ச்சிகளுக்குத் தடை போடப்படுகின்றது, குறிப்பாக ஒழுக்க சீர்கேடுகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கப் படுகின்மை, மாணவர்களின் வீணான மனவழுத்தங்கள், பெற்றோர்களின் அலைக்கழிப்பு, அதனால் உண்டாகும் மனவுளைச்சல்கள் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

அனேகமான மாணவர்கள் எதிர்பால் கவர்ச்சிக்காக பிரத்தியேகக் கல்வியை நாடுவதனால் முறைசார் கல்விக்கே உரித்தான ஒழுக்கவியல் மீறப்படுகின்றது. பெற்றோர்கள் தமது சுய கௌரவத்திற்காக பிள்ளைகளை நிர்ப்பந்தம் செய்து பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றனர். மாணவர்கள் தமது பாடத் திட்டத்தினை முன்கூட்டியே பிரத்தியேக வகுப்புக்களில் நிறைவேற்றுவதால் பாடசாலையில் அதிக விடுமுறைகளை சுயமாகவே எடுப்பதற்கு தூண்டப் படுகின்றனர்.

ஆனாலும் மாணவர்கள் எதற்காக பிரத்தியேக வகுப்புக்களின் தாக்கத்திற்கு உட்படு கின்றனர் என்பதனை அறிந்து, அவற்றினை பாடசாலைகள் மூலம் இயலுமான வரை சீர்ப்படுத்த வேண்டும். கல்வி முறையின் பல்வேறு இலக்குகளை பாடசாலை எனும் நிறுவனத்தினூடாக நிறைவேற்ற வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு முறைசார் கல்வியின் குறிக்கோளாகும். பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கம் இன்று முறைசார் கல்வியின் தரத்தினைக் குறைத்துள்ளது என்பதில் ஐயமில்லை என்பதுடன் மாணவர்கள் பாடசாலைக் கற்றல் செயற்பாடு களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையும் காணப்படுகின்றது.

கால மாற்றங்களுக்கேற்ப கல்வி மாற்றங்கள் ஏற்படும் போது அவற்றினை நிறைவு செய்யும் நோக்கில் பாடசாலைச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை இன்றைய ஆசிரியர்களே ஏற்க வேண்டியவர்களாவர். மாணவர்களை மையமாகக் கொண்டே ஒரு நாடு ஊட்டம் பெறுகின்றது. இதற்காகவே ஒவ்வொரு பாடசாலையும் உயிர்ப்பான குறிக்கோள்களுடன் உருவாக்கப்பட்டிருகின்றது. ஆனால் இன்று முறைசார் கல்வியின் நிலை உயிரோட்டம் இல்லாத கல்வி முறையாகி யுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

இன்றைய நவீன காலகட்டத்தினை நோக்கும் போது சமூகத்தில் இடம்பெறும் ஒவ்வொரு செயற்பாடுகளும் பொருளாதார அடிப்படையில் இடம்பெறுகின்றது எனலாம். ஆரம்பகாலத்தில் சேவை அடிப்படையில் வழங்கிவந்த கல்வி முறைகள் இன்று வருமானத்தினை மையமாகக் கொண்டு நகர்த்தப்படுகின்றது. கல்வி இலவசமாக்கப் பட்டமையால் இன்று அனேக மாணவர்களுக்கு அது அலட்சியமாக்கப் பட்டிருக்கின்றது. இதற்கு பெற்றோர்களின் கௌரவம், பிரத்தியேக வகுப்புக்களின் வண்ணமயமான விளம்பரங்களும், கவர்ச்சிகளும், பல்கலைக்கழக அனுமதியில் போட்டி நிலவுகின்ற சூழ்நிலையும் பிரத்தியேக போதனைகளை மாணவர் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக வந்துவிட்டதும், திறமை அடிப்படையில் வேலை வாய்ப்புக்களும், மாணவர்களின் நவநாகரீகப் போக்கும், எதிர்பாற் கவர்ச்சிகளும் பின்னணிகளாகவிருந்து பிரத்தியேக வகுப்புக்களுக்கு ஊக்கிகளாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் இன்று கைக்கெட்டும் தூர இடைவெளியில் பிரத்தியேக வகுப்புக்கள் கேள்விபார் இல்லாமல் உருவாக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இதனால் இன்றைய பாடசாலைகள் அரச பரீட்சைகளுக்கும், இணைப் பாடவிதான செயற்பாடு களுக்கும் மட்டுமே முறைசார் கல்வி வழங்கும் நிறுவனங்களான மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாடசாலைகளில் இலவசக் கல்வியை வழங்கும் சில ஆசிரியர்கள் கூட பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கின்றனர். மீத்திறன் குறைவான மாணவர்களுக்கும், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் தான் மேலதிகமாக கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்று பணத்தேவை ஒன்றினை மையமாகக் கொண்டு கல்வி விற்கப்படும் நிலையே காணப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் மீத்திறன் குறைவான மாணவர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லாத நிலையும் காணப்படுகின்றது. எனவே பிரத்தியேகக் கல்வி அவசியம் தான் ஆனால் அவை தேவைப்படும் உரிய மாணவர்களுக்கு மட்டும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மாணவர்கள் பிரத்தியேக கல்வி நிலையங்களில் கற்றதன் பிற்பாடு மீண்டும் பாடசாலையில் அதே விடயம் கற்பிக்கப்படும் போது பாடசாலைக் கல்வியை அலட்சியப்படுத்தும் சூழ்நிலை காணப்படுகின்றது. இதேவேளை பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் அசமந்த நிலைக்கு உட்படுகின்றனர்.

நாட்டில் இன்று பத்தாயிரத்துக்கும் அதிகமான அரசாங்கப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. முறைசார் கல்வியின் முக்கியத் துவத்தினை எடுத்துக்காட்டும் இத்தகு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று எதற்காக என்று வினா எழுப்பும் வகையிலாகி விட்டது. பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கம் இன்று இலவசக் கல்வியின் தரத்தினைக் குறைத்துள்ளது என்பதில் ஐயமில்லை என்பதுடன், மாணவர்கள் பாடசாலைக் கற்றல் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையான முரண்பாடுகளுக்கு இவை வித்திடுகின்றன. அத்துடன் பெற்றோர்களின் கௌரவம் சார் செயற்பாடுகளின் தாற்பரியமும் பிரத்தியேக வகுப்புக்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

எனவே இதற்கான ஆலோசனைகளை நோக்கும் போது குறிப்பாக அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். முறைசார் கல்வியை வழங்கும் ஆசிரியர்களே பிரத்தியேகமாகக் கல்வி வழங்கும் போதுதான் எம்மை குறைவாக சிந்திக்க வைக்கின்றது. ஆசிரியர்கள் அல்லாத ஏனைய நபர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிப்பதனை விட அரச பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலைகளிலும் கற்பித்துவிட்டு பிரத்தியேக வகுப்புக்களிலும் இவ்வாறாக பிரத்தியேகமாக கல்வி வழங்குவதில் இருந்து தடைவிதிக்க வேண்டும். இதனைக் குறிப்பிட்ட வலயக் கல்வி பணியகம் மூலமாக மேற்பார்வை செய்வதும் சிறப்பானது. இவ்வாறு மேற்கொள்ளும் போது முறைசார் கல்வியில் அதிக அக்கறை காட்டுவது வலுப்படும்.

இரண்டாவது ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்தியாக்கப்படுவதோடு, குறிப்பான பாடங்களுக்கான ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியர் வளம் குறைவான பாடங்களுக்காகவும், கடினமான பாடங்களுக்காகவும் தான் பிரத்தியேக கல்வியை நாடுவர். எனவே இவ்வாறான முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகள் உரிய முறையில் தீர்க்கப்படும்போது மாணவர்கள் பிரத்தியேகக் கல்வியை நாடுவது குறைக்கப்படும். இதன் மூலம் முறைசார் கல்வியை மட்டுமே கற்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கப்படும். இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களின் அலட்சியப் போக்கினைக் குறைத்து அனைத்து மாணவர் களுக்குமான சமவாய்ப்பு நிறைந்த கல்வியை வழங்கமுடியும்.

கல்வியில் சமவாய்ப்பு என்பது பிரத்தியேகக் கல்விக்கு எதிரானது. ஏனெனில் பிரத்தியேகக் கல்வி குறிப்பிட்ட மாணவர்களுக்கானது. எனவே இவை மூலம் முறைசார் கல்வியை வலுப்படுத்தலாம். நான்காவது பிரத்தியேக வகுப்புக்களின் ஆடம்பரமான செயற்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். ஏனைய பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்கின்றார்கள் என்பதற்காகவும் தனது நிர்ப்பந்தத்தின் பேரிலும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புவதால் மாணவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகும் நிலை தொடர்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். அடுத்த வீட்டுப் பிள்ளை இரு வகுப்புக்களுக்கு சென்றால் என்னுடைய பிள்ளை மூன்று வகுப்புக்களுக்காவது செல்ல வேண்டும் என்கின்றதான மனநிலையை பெற்றோர்களிடம் இருந்து நீக்குவதன் மூலம் ஆடம்பரமான, செலவுமிக்க பிரத்தியேகக் கல்வியிலிருந்து மீண்டு வினைத்திறன் மிக்க முறைசார் கல்விக்கு வழிகோல முடியும்.

சந்துரு மரியதாஸ்  (விரிவுரையாளர்)

கிழக்குப் பல்கலைக்கழகம்.

Exit mobile version