Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாக மண்ணெண்ணெய்க்காக அலைந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாக மண்ணெண்ணெய்க்காக அலைந்த முதியவர் உயிரிழப்பு

மண்ணெண்ணெய்க்காக அலைந்த முதியவர் உயிரிழப்பு

மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்து திரும்பிய முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அளவெட்டி – மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார்.

சில மணி நேரத்தில் மண்ணெண்ணெய் முடிந்து விட்டது என ஊழியர்கள் அறிவித்தனர். அதனால் அவருக்கு மண்ணெண்ணெய் கிடைக்காமலே வீடு திரும்பி இருந்தார்.

மறுநாளான நேற்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். அவர் அருகில் சென்றதும் மண்ணெண்ணெய் முடிவடைந்து விட்டது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனால் கடும் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர், மனைவியிடம் இன்றும் தன்னால் மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என கவலையுடன் கூறி படுத்தவர், சில நிமிடங்களிலையே படுக்கையிலையே உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு வரினும் இதுவரை எரிபொருள் விநியோகம் சீர்செய்யப்படவில்லை. தினமும் எரிபொருளுக்காக அலைந்து திரிந்தே வாங்கும் நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version