ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்

ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்

ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் பி.மாணிக்கவாசகம்

ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் என்பதானது இலங்கை அரசு மனித உரிமைகள் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச செவி சாய்த்து, அண்மையில் பதிலளித் துள்ளமை பலரையும் ஏறிட்டு நோக்கச் செய்திருக்கின்றது. பௌத்த சிங்கள பேரின தேசிய வாதத்தில் ஊறி, இராணுவ மனோபாவ சர்வாதிகார ஆட்சியில் ஆழ்ந்துள்ள அவருடைய போக்கிற்கு முரணாக இந்தக் கருத்து வெளிப்பாடு அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை உதறித் தள்ளி, ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக சர்வாதிகார ஆட்சிப் போக்கில் செல்கின்ற அவர், பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐநாவுடன் இணைந்து செயற்படப் போவதாகக் கூறியிருக்கின்றார். மேலோங்கிய அதிகாரச் செயற்பாட்டைக் கொண்டுள்ள அவர், பொறுப்புக் கூறலுக்கான நடவடிக்கைகளை மேற் கொள்வாரா என்ற சந்தேகமும் பலரது வியப்புக்கு உரிய மற்றுமொரு காரணமாகும்.

சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளை தலைமை நிலையில் நியமித்து, முழு நாட்டையும் சர்வாதிகார வழிப் போக்கில் மாற்றிக் கொண்டி ருக்கின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் செயற்பாடுகள் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடாகவே அமைந்திருக்கும் என்பது இலங்கையின் வரலாற்று அரசியல் அனுபவமாகும்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது

இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்1 ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் சமாதானத்துக்கான இராணுவ நடவடிக்கை என்றும் யதார்த்த அரசியலைத் திரித்துக் காட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபாயவின் செயல் வல்லமை உதவியுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை அதீத இராணுவப் பலப் பிரயோகத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டிருந்த போது, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று அவர் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உறுதியளித்திருந்தார். ஆனால் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இன அழிப்பு நடவடிக்கையாகத் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்து, ஊழித் தாண்டவம் ஆடியிருந்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அவர் கவனம் செலுத்தவே இல்லை. மாறாக இராணுவ ரீதியாக மௌனிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது. மீண்டும் ஒரு யுத்த நிலைமைக்கு இடமளிக்க வேண்டாம் என்று இடம்பெயர்ந்து மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் முறையிலும் அவர்களுக்கு அறிவுறுத்துவதிலேயே அவரும், அவரது தலைமையிலான அரச தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்த உடன் இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூனுடனான சந்திப்பின் போது மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையில் சர்வதேச விசாரணைகளுக்கு அன்றைய ஜனாதிபதியாகிய மகிந்த ராஜபக்ச ஒப்புதல் அளித்திருந்தார். அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, இனப் பிரச்சினைக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வு காணவும் அவர் உறுதி யளித்திருந்தார்.

ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்ஐநா செயலாளருடனான இந்த உறுதிப்பாடு குறித்து அப்போது ஓர் இணை அறிக்கையும் வெளியிடப் பட்டிருந்தது. ஆனால் அந்த உறுதி மொழியை மகிந்த ராஜபக்ச நிறைவேற்றவே இல்லை. மாறாகப் பொறுப்புக் கூறலுக்கான விசாரணைகள் எதனையும் நடத்த முடியாது என்ற நிலைப் பாட்டையே வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு கோத்தாபாய ராஜபக்சவே பின்னணியில் பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தார்.

அத்துடன் யுத்த மோதல்கள் இடம்பெற்று, பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக அகதிகளாக இருந்த வடக்கு கிழக்குப் பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் தமது கட்சி அரசியலை வளர்ப்பதற்கும், அதன் ஊடாக அவர்களது வாக்குகளைக் கொள்ளையடிப் பதற்குமான வேலைத் திட்டங்களிலேயே அவர் கவனம் செலுத்தி இருந்தார். இத்தகைய அரசியல் இலாபம் கருதிய நோக்கத்துடன் உட்கட்டமைப்புப் பணிகளை அபிவிருத்தி என்ற போர்வையில் அவர் முன்னெடுத்திருந்தார்.

நீண்டகால யுத்தம் காரணமாகப் பேரழிவுக்கு உட்பட்டிருந்த அந்தப் பிரதேசங்களை மீள் கட்டமைத்து, இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய இடத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த தாகவே அப்போது பெரும் எடுப்பில் பிரசாரம் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், அவர்களுடைய கட்டழிந்து போன வாழ்க்கையை சீரமைப்பதற்குமான மனிதாபிமான செயற்பாடுகளை அரசு முன்னெடுக்க வில்லை. முப்பது வருட கால யுத்தத்தினால் வெறுப்புணர்வுக்கும் பகை யுணர்வுக்கும் ஆளாக்கப் பட்டிருந்த இனங்களுக் கிடையிலான நல்லுணர்வையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படவில்லை.

அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்கைக் கொண்ட உரிமை மீறல்கள் நிறைந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் அவர்களை அரசியல் ரீதியிலான பகைவர்களாகக் கருதியிருந்த அரசாங்கம், அவர்களுடனான நல்லிணக்கத்தை உருவாக்கவும் இல்லை. மாறாக இறுக்கமான இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு சூழலிலேயே பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சிறை வைக்கப் பட்டிருந்தார்கள்.

இந்திய அரசின் அழுத்தத்துக் கமைய தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசியல் தீர்வு காணும் போக்கில் பெயரளவிலான ஒரு பேச்சுவார்த்தையை அரசு முன்னெடுத்திருந்தது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அந்தப் பேச்சு வார்த்தைகளில் அரசு கலந்து கொள்ளவில்லை. ஒரு வருட காலம் அந்தப் பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்த அரசு, அதனைத் தன்னிச்சையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், அந்தப் பேச்சு வார்த்தைகள் அரசாங்கத்துடன் நடத்தப்பட வில்லை என்று அடாவடியாக அறிவித்திருந்தது.

அது மட்டுமல்லாமல், அந்தப் பேச்சு வார்த்தைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே குழப்பியதாகவும் அரசு குற்றம் சாட்டியிருந்தது, ஆனால், இறுதிப் பேச்சுவார்த்தை தினத்தன்று முன்னறிவித்தல் எதுவுமின்றி அரச பிரதிநிதிகள் எவரும் அந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு சமுகமளிக்காமல், மேசையில் பேச்சு வார்த்தைகளுக்காகக் காத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்களை ஏமாற்றமடையச் செய்திருந்தனர்.

யுததத்தின் பின்னர் ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசு, இராணுவ மயமான ஒரு சூழலில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கியதே தவிர, பொறுப்புக் கூறுகின்ற தனது கடப் பாட்டையும், அரசியல் தீர்வு காண வேண்டிய பொறுப்பையும் நிறைவேற்றவே இல்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எட்டப்பட்ட இராணுவ வெற்றியையும், இராணுவ மயப்படுத்தப்பட்ட அடக்குமுறைப் போக்கிலும் செயற்பட்டிருந்த ராஜபக்சக்களின் அரசு 2015 தேர்தல்களில் தோல்வியுற்று பதவி இழந்து, ஐந்து வருடங்களின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும், தமது இனவாத அரசியல் போக்கையும் இராணுவ மயமான ஆட்சி நிர்வாக முறைமையையும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்பௌத்த சிங்களப் பேரின மக்களின் 69 லட்சம் வாக்குகளினால் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கும், பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தையும் எட்டுவதற்கும் ஆதாரமாக இருந்த மோசமான இனவாதப் போக்கிலேயே ராஜபக்சக்களின் புதிய ஆட்சியும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றது.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த வேகத்திலேயே இராணுவத்தினரை நீதியின் முன் நிறுத்துகின்ற எந்த விசாரணைகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்ற கடும் நிலைப்பாட்டை ஜனாதிபதி கோத்தாபாய எடுத்திருந்தார். தொடர்ந்து ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கமைய மனித உரிமை மீறல்களுக்கும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் இருந்து தன்னிச்சையாக விலகிக் கொண்டதுடன், போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக ஆதார பூர்மாகக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளை எதிர் நோக்கி இருந்த இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்.

போர் முனைக்கு வெளியில் அகதிகளாக, மிருசுவில் பகுதியில் தமது சொந்த இடங்களைப் பார்வையிடச் சென்ற சிறுவர்கள் உள்ளிட்ட பொது மக்களை சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்காவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தார்.

உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் எதிர்ப்பையும் கடும் விமர்சனத்தையும் எழுப்பியிருந்த போதிலும், அவற்றுக்கு அவர் செவி சாய்க்கவில்லை. அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணான விதத்தில் தனது சர்வாதிகாரப் போக்கில் இருந்து அவர் மாறவே இல்லை. அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பிரேமச்சந்திரவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டட்ட கொலைக்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவையும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ததுடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளார்.

இதே தருணத்தில் தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை, அவர்களது தண்டனைக் காலம் முடிவடையவிருந்த காலப் பகுதியில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்து தமிழ் மக்களினதும், சர்வதேசத்தினதும் மத்தியில் சுய அரசியல் இலாபத்தை அவர் தேடி இருந்தார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக நீண்ட காலமாகவே நீடித்திருக்கின்றது. அந்த பிரச்சினையில் காட்டப் பட்டிருக்க வேண்டிய மனிதாபி மானத்தையும், நல்லிணக்க உணர்வையும் ராஜபக்சக்கள் வெளிப்படுத்தவே இல்லை.

இத்தகைய பின்புலத்தில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கூறியுள்ள பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகள் எந்த வகையில் முன்னெடுக்கப்படும் என்பது முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது. அதேவேளை, இன நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் சாதகமான சமிக்ஞைகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தாதுள்ள ராஜபக்சக்களின் போக்கில் இருந்து விலகி, ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றார் என்பதும் முக்கிய வினாவாகும்.

இந்த சந்தேகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், ராஜபக்ச வம்சத்தினர் ஒருபோதும் பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற மாட்டார்கள், தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை அவர்கள் உருவாக்க மாட்டார்கள் என்ற கசப்பான தமிழ் மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலுமே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதும், ஒன்றிணைந்த அந்தப் பிரதேசங்களின் நிர்வாக அலகு தமிழர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதும் தமிழ்த் தரப்பின் நீண்டகால கோரிக்கையாகும். ஆனால் இந்தத் தாயகக் கோட்பாட்டை உடைத்துச் சின்னா பின்னமாக்குவதற்கான நடவடிக்கைகளையே பேரின அரசாங்கங்கள் பல்வேறு வடிவங்களிலான நிகழ்ச்சி நிரல்களின் மூலம் முன்னெடுத்து வந்துள்ளன.

சிங்கள அதிகாரி

அந்த வரிசையில் பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்றவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஐநாவுடன் இணைந்து செயலாற்றப் போவதாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அறிவித்துள்ள பின்னணியில் வடமாகாணத்தின் பிரதமர செயலாளராக ஒரு சிங்கள அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு சிங்களவரை நியமிப்பதற்கும்,, வடமாகாண ஆளுனராக ஒரு சிங்களவரை நியமிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிங்கள அதிகாரிகள் தமிழ்ப் பிரதேசங்களில் நிர்வாக ரீதியில் நியமிக்கப் படுவதில் எந்தவிதத் தவறும் இருக்க முடியாது. சேவை மனப்பாங்கும், கடமை யுணர்வும், பொறுப்புணர்வும் கொண்ட சிவில் அதிகாரிகளாக இருக்கும் வரையில் அத்தகைய நியமனங்களினால் எந்தவிதப் பாதிப்பும் கிடையாது.

ஆனால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், இனவாதமும், இன ஒடுக்கு முறையும் நிலவுகின்ற ஒரு சூழலில், இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டதோர் ஆட்சி முறை தொடர்கின்ற நிலையில் தமிழ் ப்பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகள் நிர்வாகக் கட்டமைப்புகளில் நியமிக்கப்படுவது இயல்பான சந்தேகத்தையும் அச்சத்தையுமே தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேவேளை, இன ஒடுக்கு முறை சார்ந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப் படுகின்றன என்பதே இந்த நடவடிக்கை இங்கு பிரச்சினைக்குரிய விடயமாகி உள்ளது.

வடமாகாண பிரதம செயலாளராக நியமிக்கப் பட்டுள்ள எஸ்.எம்.சமன் பந்துலசேன ஓர் அனுபமிக்க அதிகாரியல்ல என்பதும், சேவை மூப்பின் அடிப்படையில் வேறு எத்தனையோ தமிழ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் இளநிலை அதிகாரியாகிய அவரை வடமாகாண பிரதம செயலாளராக நியமித்திருப்பது அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை போக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.

அதே போன்று வடமாகாண ஆளுநராகவும், யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகவும் தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் தேவை நிலவுகின்ற சூழலில் சிங்களவர்களை அந்தப் பதவிகளுக்கு நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைக்கு நல்லதாகத் தோன்றவில்லை.

அதுமட்டுமன்றி, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதேச செயலாளர்களாக நியமனம் பெற விரும்புகின்ற சிங்கள அதிகாரிகளிடமிருந்து அதற்கான விண்ணப் பங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரியிருப்பதுவும் இனவாத அடிப்படையிலான ஒரு நடவடிக்கையே அன்றி வேறில்லை.

தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்கான தமிழ் அதிகாரிகள் இருக்கத் தக்கதாக சிங்கள அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் எதுவும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்ப்பிரதேசங்களை படிப்படியாக சிங்கள மயமாக்குவதற்கும், தமிழ் மக்களின் தாயகப் பிரதேச அரசியல் நிலைமையை இல்லாதொழித்து, அவர்களை அரசியல் அடிமைக ளாக்குவதற்கே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளும், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்காக முன்னெடுக்கப்படும் என்ற கூற்று படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்ற நிலைமையை சுட்டிக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

ilakku-weekly-epaper-140-july-25-2021