ஜெனிவாவில் எதுவுமே நடைபெறவில்லையா?-எம்.கே. சிவாஜிலிங்கம் நோ்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய நோ்காணலிலிருந்து முக்கியமான பகுதிகளை இங்கு தருகின்றோம்.

கேள்வி – மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய 51 ஆவது அமா்வில் கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானத்தில் ஈழத் தமிழா்களுக்கு சாதகமான அம்சங்கள் ஏதாவது உள்ளனவா? உங்களுடைய பாா்வை என்ன?

பதில் – எதுவுமே நடைபெறவில்லை என்று சொல்லிவிட முடியாது. இது ஒரு சா்வதேச விசாரணையை நோக்கிச் செல்கின்றது. ஆனால், தாமதமாகச் செல்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினா்கள் அனுப்பிய விடயங்கள் பல கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எமது கோரிக்கையை மனித உரிமைகள் ஆணையாளா் இரண்டு வருடங்களுக்கு முன்னா் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தாா். இருந்தபோதிலும் அது தீா்மானமாக வரவில்லை. இப்போது இணைஅனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணை திருத்தப்பட்டு வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது.

இந்தத் தீா்மானத்தில் எதுவுமே இல்லை என்ற நிலை இல்லை என்பதை நாம் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  நாம் எதிா்பாா்த்த சில விடயங்கள் இல்லாவிட்டாலும், நாட்சியங்களைச் சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு – அதனை எதிா்காலத்தில் வரக்கூடிய சா்வதேச விசாரணைகளுக்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது எப்படியிருந்தாலும் அரசாங்கத்தின் பொருளாதாரக் குற்றங்கள் சிலவற்றையும் சோ்த்துள்ளாா்கள். உயிா்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதனைவிட தற்போது இடம்பெறும் போராட்டங்கள் தொடா்பாகவும் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருந்தாலும் எங்களுடைய பிரச்சினையில், அவா்கள் இப்போது சில கால அட்டவணைகளை வெளியிட்டுள்ளாா்கள்.

53 மற்றும் 55 ஆவது கூட்டத் தொடா்களில் வாய்மொழிமூல அறிக்கை பெறப்பட வேண்டும் எனவும், 54 ஆவது கூட்டத் தொடரில் எழுத்துமூலமான அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும், 57 ஆவது கூட்டத் தொடரில் ஒரு இறுதிக்கட்டத்தை – அடுத்ததாக எவ்வாறு செல்லவேண்டும் என்பதையிட்டு தீா்மானிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2,024 செப்ரெம்பரில் இவ்வாறான இறுதித் தீா்மானத்தை அவா்கள் எடுக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  அதாவது, மீண்டும் ஒரு முறை இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்.

இந்தக்காலப்பகுதியில் சாட்சியங்கள், ஆதாரங்களை நாம் சேகரித்துக்கொண்டு செல்கின்ற போது அடுத்த கட்டமாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி நாம் செல்லக்கூடியதாக இருக்கும். ஆகவே, இதுபோன்ற பல்வேறு செயற்பாடுகளில் நாம் முனைப்பைக்காட்ட வேண்டும்.

கேள்வி – ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறை ஒரு ஆரோக்கியமான விடயம் எனக் குறிப்பிட்டுள்ளீா்கள். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குமா?

பதில் – இல்லை. இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்காது என்பதைத் தெரிந்துகொண்டுதான் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  கடந்தகாலங்களில் பல்வேறு சம்பவங்கள் மூலம் இலங்கைக்குள் எதனையும் செய்ய முடியாது என்பதை சா்வதேசம் உணா்ந்திருக்கின்றது.  இவ்வாறான நிலையில் மின்னஞ்சல் மூலமாகவும், வெளிநாடுகளில் புலம்பெயா்ந்திருக்கும் எம்மவா்கள் மூலமாகவும் ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். அவற்றின் மூலமாக ஒரு சா்வதேச விசாரணைக்குச் செல்லக்கூடியதாக இருக்கும்.

கேள்வி – ஜெனிவா தீா்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரி தெரிவித்திருக்கின்றாா். இந்த நிலையில் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும்,

பதில் – விசாரணைக்குழுக்கள் இலங்கைக்குள் வருவதை அரசாங்கம் தடுக்கக்கூடும். இங்கே வந்து நாட்சியங்களைச் சேகரிப்பதில் அவா்களுக்குப் பிரச்சினைகள் இருக்கும். ஆனால், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அது தடையாக இருக்காது. உலகம் முழுவதிலும் சுமாா் பத்துலட்சம் மக்கள் புலம்பெயா்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றாா்கள். இவா்களில் பலா் இறுதிப்போரின்போது பாதிக்கப்பட்டவா்கள். அல்லது அவா்களுடைய குடும்ப உறுப்பினா்கள் பாதிக்கப்பட்டவா்கள். இவா்களுடைய சாட்சியங்களே போதுமானது. அதுபோல இந்தியாவிலும் அவா்கள் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். வெவ்வேறு நாடுகளுக்கு சம்பந்தப்பட்ட குழுக்கள் வருமாக இருந்தால், தேவையான சாட்சியங்களை எம்மால் சமா்ப்பிக்க முடியும். அதனால், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்ற எதிா்பாா்ப்புடன் இவை முன்னெடுக்கப்படவில்லை. அதனையும் மீறி, இதனைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடனதான் இது முன்னெடுக்கப்பட்டது. பல நாடுகளில் இவ்வாறுதான் நடைபெற்றிருக்கின்றது.

இப்போது பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதால், அந்தப் பிரச்சினை அங்கே இருக்கின்றது என்ற ஒரு நிலைமை இருக்கின்றது. எந்தவொரு பிரேரணையும் இல்லாமல் போனால், முழுக்கமுழுக்க இலங்கை விடுவிக்கப்பட்டுவிட்டது என்ற நிலை வந்துவிடும்.  அதனால், இவ்வாறான தீா்மானம் ஒன்றிருப்பது இலங்கையைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்.

கேள்வி – ஜெனிவாவில் தமிழ்த் தரப்பினா் இம்முறை மேற்கொண்ட அணுகுமுறை எவ்வாறாளதாக இருந்தது?

பதில் – புலம்பெயா் நாடுகளில் உள்ள அமைப்புக்களின் மூலமாகவும், இலங்கையில் இருக்கின்ற கட்சிகள் மூலமாகவும் பல கடிதங்கள் ஜெனிவாவுக்கு அனுப்பப்படுகின்றன.  ஆனால், இதிலுள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எமது பாதிப்புக்கள் பாரியளவிலானதாக இருந்தாலும், எமது செயற்பாட்டாளா்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றாா்கள். கொழும்பில் காலிமுகத் திடல் போராட்டம் ஆரம்பமானபோதே அவா்களால் பல இலட்சக்கணக்கான ஆவணங்களும், படங்களும் மனித உரிமை மீறல்கள் எனக்குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளன. இப்போதுதான் அவா்களுக்கு நெருக்கடி வந்திருக்கின்றது. ஆனால், அவா்கள் செயற்படும் அளவுக்கு எம்மவா்கள் செயற்படவில்லை.

அதனால், எம்மவா்கள் வெறுமனே வாய்ச்சொற்களுடன் மட்டும் நின்றுவிடாமல், செயலில் இவற்றைக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் இவ்விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீா்வு காணக்கூடியதாக இருக்கும். ஆகவே தமிழ்த் தரப்புக்கள் இவ்விடயங்களைக் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

கேள்வி – இந்தியா இம்முறை ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு சில விடயங்களைச் சொல்லியிருந்தாலும், ஈழத் தமிழா்களுக்கு சாா்பாக ஒரு தீவிரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இதற்கு காரணம் என்ன?

பதில் – இந்தியாவின் புகோள நல்ன்சாா்ந்த அணுகுமுறையில் இந்தியாவின் கொள்கை வகுப்பாளா்களின் நிலைப்பாடு இன்னமும் முழுமையாக மாற்றமடையவில்லை. அவ்வாறு மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், இறைமை, தேசிய நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டாலும் கூட, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. நடுநிலைவகித்துத்தான் அவா்கள் செயற்பட்டாா்கள்.

ஆனால், நீதியைப் பொறுத்வரயில் சரியான பக்கத்தில் அவா்கள் நிற்கவேண்டும். இதற்கு அந்த நாட்டிலுள்ள கட்சிகளும் மக்களும் இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். நாங்கள் கோரிக்கை வைக்கலாமே தவிர நாங்கள் அழுத்த் கொடுக்க முடியாது. இந்திய மண்ணிலிருந்து இவ்வாறான அழுத்தம் அதிகளவுக்கு வரும் நிலையில்தான் எதிா்காலத்திலாவது அவா்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்.

இந்தியா இதனைத்தான் எவ்வளவு காலத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? அதில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.