புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா

புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.”

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

கூட்டமைப்பின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாவின் மகனது திருமணம்தான் காரணம் எனவும், மாவை சேனாதிராசாவே இந்தப் பயணத்தை பிற்போடுமாறு சம்பந்தனிடம் கூறினார் என்று வெளியாகிய செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

கூட்டமைப்பின் இந்தியப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று. எனது மகனின் திருமணமும் முன்னரே திட்டமிடப்பட்டது. எனது மகனின் திருமணத்துக்காக இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு கோர நான் விரும்பியிருந்தால் அதனை தலைவர் சம்பந்தனிடம் முன்னரே கூறியிருப்பேன். கடைசி நேரத்தில் அதனை ஒத்திப்போடுமாறு கோரும் தேவை எனக்கு இல்லை.

எனது மகனின் திருமணத்துக்காக தமிழர் நலன் சார்ந்த விடயத்தை தள்ளிப்போடுமாறு கோரும் அளவுக்கு நான் சுயநலன் கொண்டவன் அல்லன்.

இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் என்னால் பங்கேற்கமுடியாது என்பதால் அங்கு நடக்கும் சந்திப்புக்களில் என்னென்ன விடயங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேசுவதற்கும் ஆயத்தம் செய்திருந்தேன்.

எனது மகனின் திருமணம் என்ற ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் நான் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூறியிருந்தேன்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு 7ஆம், 8ஆம் திகதிகளில்தான் நடைபெறவிருந்தது. எனது மகனின் திருமணம் 9ஆம் திகதியே நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் நான் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் 7ஆம், 8ஆம் திகதிகளில் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இந்தியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பி மகனின் திருமணத்திலும் பங்கேற்றிருப்பேன். ஆயினும் இந்த சந்திப்பில் நான் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்களை சந்திப்பில் பங்கேற்கச் செல்லுமாறு கூறியிருந்தேன்.

இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு இரா. சம்பந்தனே இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு கோரினார். அவர் ஏன் அப்படி கோரினார் என்பது எனக்கு தெரியாது.

நான் தான் இந்தப் பயணத்தை பிற்போடுமாறு கோரினேன் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை” என்றார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா