கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை – இரா.சாணக்கியன்

அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று  சாணக்கியன் உரையாற்றியதில் சில முக்கிய பகுதி இங்கே, “பிரியந்த குமாரவுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக எனது கவலையை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், அதேபோன்ற சம்பவங்கள் எமது நாட்டிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளமையை நான் நியாபகப்படுத்த விரும்புகிறேன். 1956-57 களில் நடைபெற்ற கிளர்ச்சியின்போதும், இதற்கு சமமான சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்துள்ளன. அதுவும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் தான் இவை நிகழ்த்தப்பட்டன.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன.

அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு யார் காரணம் என இங்குள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட தெரிந்திருக்கலாம்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கத்தை கொலை செய்தார் எனும் குற்றஞ்சாட்டுள்ள ஒருவர் இன்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பே இருக்கவில்லை. 1948 முதல் 1978 வரையான காலப்பகுதியில் அரசியல் உரிமைக்காக தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளையே மேற்கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால்தான் தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தினார்கள். பாகிஸ்தானில் மத அடிப்படை வாதத்தினால் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஆனால், ஒருநாடு – ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கு மக்கள் அனைவரும் இந்த செயலணிக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நாடு – ஒரு சட்டம் என்பதை வைத்து நாட்டை ஒருபோதும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தை வளர்க்கவம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இணைந்து செயற்படத் தயார் என்பதையே கூற விரும்புகிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை - இரா.சாணக்கியன்