இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் | அ.வி. முகிலினி

முள்வேலி நாட்கள்அ.வி. முகிலினி

அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள்

அன்று 16ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டு தந்தையை விதைத்துச் சிறு மணித்துளிகளே கடந்தன. ஒரு போராளியின் மகள். ஒரு மாவீரனின் மகளாகி விட்டேன் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முன்னரே தாய் மண்ணையும், புதைக்கப் போகின்றோம் என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்.

பதுங்குகுழியை விட்டுத் தலை உயர்த்தினோம். தோட்டா தெறித்தது. என் தம்பியின் முதுகுப்பை அவனது உயிரைக் காப்பாற்றியது.  சுற்றி இருந்த எம் உண்மையான இரத்த பந்தம் இல்லாத மாமாக்கள் சொன்னார்கள் “அண்ணாவும் இல்லை. நீங்கள் போங்கோ. நாங்கள் முடிந்தவரை பார்த்துக் கொள்கிறோம்” என்று. அம்மா மறுத்தார். என் கண்கள் என் தமக்கையைத் தேடியது. நடக்கத் தொடங்கினோம். நாங்களும் ஒரு சில மாமாக்களும் அவர்களது குடும்பங்களும். மிகச் சாதாரணமாகத் தோட்டாக்கள் பறந்தன. தோட்டாக்கள் முன்னும் பின்னுமாகக் கூவிக் கொண்டு செல்வதைக் கண்களால் உணர முடிந்தது. செல் துகள்கள் எங்களைத் துளைக்காமல் சென்றது என்னவோ அதிசயம். வழியெல்லாம் காயமடைந்தோர். எங்கு நிற்கிறோம் என்றுகூடத் தெரியவில்லை.

அதுதான் கடைசிப் பதுங்குகுழி. அவள் அப்போது பத்துமாதக் குழந்தை. குழலி. என் உடன்பிறவா குட்டித் தங்கை. எப்போதும் அவளை எனதாகவே உணர்ந்திருக்கின்றேன். அவளின் தந்தை எனக்கும் தந்தை போன்றவரே. ஆனால் அழைப்பதுவோ மாமா என்று. நேரம் நினைவில் இல்லை. மாமா மிகவும் மோசமாகக் காயமடைந்திருந்தார். என்ன தம்பி செய்யப் போகிறோம் என்று அம்மா கேட்க, “போங்கோ அக்கா, நாங்கள் வாறம்” என்றார்.

குழலியை முத்தமிட்டுக் கண்ணீரோடு மாமாக்களிடமிருந்தும், அவர்களது குடும்பத்திடமிருந்தும் பிரிந்தோம். பயம் மட்டும் தான் நிறைந்திருந்தது. மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களோடு சென்று நாமும் சேர்ந்து கொண்டோம். அப்பாவுடன் வந்து எங்களுக்குக் கிடைத்த அண்ணா, எங்களுக்குத் துணையாக எங்களுடனே வந்தார். “நான் உங்களுடனே தான் வருவேன் என்றும், நீங்கள் கவனம் என்று என் கைகளைப் பிடித்துச் சொன்னார். நான் உங்களுடன் தான் வருவேன் என்றும் கூறினார். ஐந்து நிமிடங்கள் நடந்திருப்போம். எதிரிக்குள் தான் நிற்கின்றோம் என்று அப்போது தான் உணர்ந்தேன்.

இன்றும் கண்ணுக்குள் நினைவுகள் நிழலாடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வெடித்த நச்சுக் குண்டு என் உடலில் காயங்களை ஏற்படுத்தியிருந்தது. தோளிலும், முதுகிலும் முதுகுப் பையின் அழுத்தத்தில் வலி மிகுதியாகவே இருந்தது. அந்த வலியைக் காட்டிலும் இழப்புக்களும், பிரிவுகளும் அச்சமும் என்னை நிலைகுலைய  வைத்தது. அம்மாவின் சட்டையைப் பிடித்தபடி தலையை நிமிர்த்தாமல் அழுது கொண்டே நடந்தேன். தலையைத் தூக்கி வலது புறம் பார்த்தேன். பனை மரங்களுக்குப் பின்னால் தோட்டாக்கள் சொரிய எதிரி கூட்டமாக நடந்து கொண்டிருந்தான். சற்றுப் பின்னுக்கும் பனை மரங்கள் நிறையவே நின்றன. ஆனால் கைத் துப்பாக்கிகளுடன் ஓர் இரண்டு மாமாக்கள் மட்டுமே நின்று தடுத்தார்கள். அதிலொருவர் சட்டென்று விழ தலையை மீண்டும் குனிந்து அழ ஆரம்பித்தேன். ஏன் இந்தக் காட்சிகளைப் பார்க்க உயிருடன் வந்தோம் என்று தெரியாமலே நடந்தோம்.

காதிற்கு அருகே ஒரு தோட்டா வெடித்தது. அண்ணா கைகளைப் பிடித்துப் “பயப்படாதேங்கோ தங்கா” என்றார். வீதிக்கு இருபுறமும் துப்பாக்கிகளுடன் நின்றிருந்த அந்தக் கயவர்கள், மேல் நோக்கிச் சுட்டார்கள். பின் துப்பாக்கிகளை எங்கள் பக்கம் திருப்பி அமரும்படி மிரட்டினார்கள். அமர்ந்தோம். சற்றுபின் எழுந்து நடக்கும்படி சொன்னார்கள். எழும்பி நடந்தோம். ஆட்டு மந்தைகளைப் போல சொந்த நாட்டில் நான் மிடுக்குடன் திரிந்த வீதியில் அகதியாய், அடிமையாய் துப்பாக்கி முனையில் கண்ணீரோடு தலைகுனிந்து நடந்தேன். அண்ணா அவ்வப்போது தம்பியைத் தூக்கிக் கொண்டார். என் முதுகுப் பையை மேல் தூக்கித் தாங்கிப்பிடித்தார். பசித்தது நினைவில் இல்லை. ஆனால் நாக்கு வறண்டு போனது. இரத்த வாடை நாசியில் அடித்தது.  வழியெல்லாம் குருதி. ஆங்காங்கே புதைக்கவும், எரிக்கவும் ஆளில்லாமல் பிணங்கள். பாதி அழுகிய அந்தப் பாட்டியின் உடலை நகர்ந்து செல்ல வழியில்லாமல் கடந்து வந்தது இன்றும் என் கனவில் வந்து வந்து கதிகலங்கச் செய்கின்றது. அந்த அணைக்கட்டு எதுவென்று நினைவில் இல்லை. அணைக்கட்டெல்லாம் எலும்புக்கூடுகளும், பிணங்களும். அதன் இரத்த வாடையும் நான் மண்ணுக்குள் புதையும்வரை என்னை ரணமாக வாட்டியெடுக்கும்.

நடக்கும் வழியில் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் என்று குடும்பத்திடம் கதறிய யாரோ ஒரு அண்ணா, கண்ணிவெடியில் என் கண்முன்னே கால் சிதறிய அண்ணா. இவர்களின் முகங்கள் நினைவில் இல்லை. ஆனால் கதறல் ஒலிகள் காதை விட்டு நீங்கவில்லை. காலமும் நேரமும் சற்று வேடிக்கையானது. அந்த நாட்களில் நான் எனது முதல் மாதவிடாயை அனுபவித்திருந்தேன். கழிப்பறையும் இல்லை.  மறைவிடமும் இல்லை. நானும் சற்று வித்தியாசமான இரத்தக் கறையுடன் அங்கு நின்றிருந்தேன். “அன்று காட்டுக்குள் நாங்களும் இதை அனுபவித்திருக்கிறோம். இது மிகவும் சாதாரணமானது” என்று அம்மா என்னிடம் சொன்னார். இன்று வரை அசாதாரணமான சூழல்களைச் சாதாரணமான வார்த்தைகளோடு கடந்து செல்கின்ற அம்மாவின் துணிச்சல் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன. நடைப் பயணம் முடிந்தபாடில்லை.

மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவில் ஒரு திறந்தவெளியில் அமர வைக்கப்பட்டிருந்தோம். கதிரவன் மறைந்து இருள் பூசிக் கொண்டிருந்த வேளை, என் பார்வையில் இடது திசையில் கரும் புகையும், வெடிப் பிளம்பகளுமாக காட்சியளித்தது. அம்மா தலையில் அடித்து அழுதார். அண்ணாவும் அழுது கொண்டிருந்தார். அன்று எங்களின் சரித்திரம் சாம்பலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்களால் கண்டும் உணர முடியாத ஊமைகளாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தோம். தந்தை புகட்டி வளர்த்த வார்த்தைகள் சாட்டையால் அடித்துக் கெசாண்டிருந்தன. முள்ளின் மேல் நடப்பது போல உணர்ந்தேன். எங்கே போகிறோம் என்று தெரியவில்லை. என்ன செய்யப் போகின்றோம் என்றும் புரியவில்லை. நான்கோ ஐந்தோ நாட்கள் நடைபயணம் நரகமாய் இருந்தது. குனிந்த தலையை அவ்வப்போது உயர்த்திப் போகுமிடமெல்லாம் அக்காவைத் தேடிக்கொண்டிருந்தேன். அவளின் அளவில் யாரையாவது கண்டால் சற்று வேகமாகச் சென்று அவர்களின் முகங்களைப் பார்ப்பேன். அவளாக இருக்க வேண்டுமென்ற ஏக்கம் ஏமாற்றமாகவே முடிந்தது.

குனிந்த தலைகளோடு குற்றவாளிகளைப் போலத்தான் நாங்கள் அனைவருமே அன்று நின்றிருந்தோம். யார் யாரை மன்னிப்பது என்கிற மகத்தான மனிதத்துவமும் புதைந்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதையும் நான் அன்றுதான் கண்டிருந்தேன். எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டது போல ஒரு தோரணையில் தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். என் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டதற்கும் என் குலத்தை நிலைகுலைய வைத்ததற்கும் எங்களை நிற்கதியாக்கியதற்கும் நாங்களல்லவா அவர்களை மன்னிக்க வேண்டும்.

“சிங்கள மக்கள் ஒருபோதும் எங்களின் எதிரிகள் கிடையாது.” என்ற தலைவர் மாமாவின் வார்த்தைகள் சத்தியமானது. நானும் அதை உணர்ந்து மதிப்பவள். ஆனால் போரின் ரணத்தை மறக்க மணித்துளிகள்கூட அவகாசம் இல்லாத அந்த மனங்களுக்குப் பெருந்தன்மை இல்லாமல் போனது ஒன்றும் தவறில்லையே அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அச்சமும், வெறுப்பும் என்னை ஆட்கொண்டது. இறுதியாக அந்தப் பேருந்துப் பயணமும், ஆனந்த குமாரசாமி என்று பெயரிடப்பட்டிருந்த புனர்வாழ்வு மையம் என்று அவர்களால் அழைக்கப்படட முட்கம்பி வேலிகளால் மூடப்பட்டிருந்த திறந்தவெளிச் சிறைச்சாலையில் முற்றுப் பெற்றது.

முகத்திரையைக் கிழிப்போம் என்று முத்திரை குது்திக் கொண்டு போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் வாருங்கள் மன்னிப்பளிக்கிறோம் என்று எத்தனையோ சதி வலைகளைத் தத்தளித்துக் கடந்த மீன்களாக இறுதியில் நாங்கள் முட்கம்பி வேலிக்குள் வரிசையில் நின்றிருந்தோம்.

காட்டிக் கொடுக்க ஆளில்லாமலா போயிற்று? இல்லை. இல்லை. எங்களின் உறவுகள் தானே என்ற இறுமாப்புடன் நின்றிருந்தோம். ஆனால் ஒன்றாகப் பழகிய சிலர் எங்களைக் கண்டும் காணாதது போலச் சென்றதும், ஆறுதல் கூறி அணைத்துக் கொள்ள வேண்டியவர்கள் நாங்கள் அருகிலமர்ந்திருக்கிறோம் என்று தெரிந்து எழுந்து சென்றதும் சற்று மனவருத்தத்தைக் தந்தது. அம்மா கூறுவார் “அவர்கள் பாவம் எங்களால் அவர்களுக்கு எதற்கு சிரமம்? உயிர் விலைமதிப்பற்றது” என்று இப்போது அது எனக்கு விளங்குகின்றது.

முட்கம்பி வேலிக்குள் சிறிய மருத்துவ வசதி இருப்பதாகவும் எனது காயங்களை அங்கே காட்டலாம் என்றும் அருகில் நின்றிருந்த முகம் தெரியாத உறவுகள் கூறினார்கள். நாங்கள் எந்நேரமும் அடையாளப்படுது்தப்படலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்துடனே நின்றிருந்தோம்.

(தொடரும்….)Tamil News