எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்

வடக்கு மீனவர்கள்

சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்து வரும் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையானது, அண்மைக்காலமாக, தமிழ்நாட்டு மீனவர்களால் எல்லை மீறிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்கள்2 எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்வடக்கு கடலில் நிகழ்ந்து வரும் இந்த எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையின் பின்னணியில் மிகப்பெரும் சதித்திட்டம் பொதிந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையேயான தொப்புள் கொடி உறவை அறுத்தெறியும் சதித்திட்டத்துடனேயே குறித்த விடயம் இலங்கை அரச தரப்பால் கையாளப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாக தணிந்திருந்த தமிழ்நாட்டு மீனவர்களது எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையானது, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு 2019 பதவியேற்றதன் பிற்பாடே அதிகரித்து, அண்மைய நாட்களில் அது எல்லைமீறி தலைவிரித்தாடி நிற்கின்றது.

இவ்வாறு வடக்கு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டும் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளின்  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்படும் வடபகுதி தமிழ் மீனவர்கள், தமக்குள்ளாகவே இழப்புகளையும், துயரங்களையும் சகித்துக் கொள்ளும் நிலையே ஆரம்ப நாட்களில் இருந்து வந்தது.

மீனவர்கள்1 எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்வடக்கு மீனவர்கள் தினமும் பெரும் சொத்தழிவுகளைச் சந்தித்து, தமது வாழ்வாதரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து நிற்கையில், மீனவ சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாசங்கள், சம்மேளனங்கள் துறைசார்ந்த அமைச்சரது இருப்பை பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தனர், வருகின்றனர்.

கடந்த காலங்களில் கடற்றொழில் விவகாரங்களுக்குப் பொறுப்பாக சிங்களவர் ஒருவரே அமைச்சாரக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்சகளின் அரசில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக நியமிக்கப்பட்டமையே எல்லைதாண்டல் பிரச்சினை இரு நிலங்களிலும் உள்ள தமிழர்களுக்கு இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் தோற்றுவாயாகும்.

தமிழ்நாட்டு மீனவர்களது எல்லை தாண்டிய மீன்பிடியால் கடந்த காலங்களில் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கை அரசுக்கு எதிராகவே மீனவ சமூகத்தின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதுவே நியாயமான எதிர்வினையாகவும் அமைந்திருந்தது.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்ட பிற்பாடு, வடக்கில் உள்ள பெரும்பாலான மீனவ சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தில் அவரது விசுவாசிகளே பொறுப்புகளுக்கு வந்தார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அண்மைக்காலமாக அதிகரித்த எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையினால் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தீர்வைப் பெறும் வகையிலான போராட்ட முன்னெடுப்புகளை செய்யாது டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுப் பதவியைப் பாதுகாப்பதுடன், அதன் பெயரால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யும் வகையிலான அறிவிப்புகளை பொறுப்புகளில் உள்ளவர்கள் விடுத்து வருகின்றனர்.

எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட வேண்டிய முதல் தரப்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவே காணப்படுகிறார். பாதிக்கப்பட்டுவரும் மீனவர்கள் சார்பில் அவருக்கு வழங்கப்படும் அழுத்தங்கள் என்பது, வடக்கு கடற்பரப்பின் மீதான கட்டுப்பாட்டை சரிவர மேற்கொள்ளும் நெருக்குவாரத்தை இலங்கை கடற்படை மீது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் அவரால் பிரயோகிக்க வழிவகுக்கும்.

இப்பொறிமுறையூடாகவே வடக்கு கடற்பரப்பில் நிகழும் எல்லை தாண்டிய மீன்பிடியைத் தடுத்து நிறுத்த மீனவ சமுதாயம் முற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த வழிமுறையிலான போராட்டம் என்பது அமைச்சரது கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்திவிடும் என்பதால்தான், அமைச்சரது விசுவாசிகளாக இருந்து பொறுப்புகளில் இருக்கும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் சடங்குமுறை போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

நிலமை இவ்வாறு இருக்க, கடந்த ஜனவரி 27ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற ஜோசப் – பிறேம்குமார் (வயது-37) மற்றும் அருண்குமார் – தணிகைமாறன் (வயது-21) ஆகிய இரு மீனவர்களும் மறுநாள் கரை திரும்பியிருக்கவில்லை.

குறித்த தினத்தில் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை சக மீனவர்களால் அவதானிக்கப்பட்டிருந்த பின்னணியில் கடலில் காணாமல் போயிருந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. துண்டாடப்பட்ட நிலையில் வலைகள் மட்டும் தேடிச்சென்ற மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இத்தடயத்தின் மூலம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டு இழுவைப் படகுகளால் மோதி குறித்த மீனவர்களது படகு விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சக மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஜனவரி – 30 ஆம் திகதி இரவு வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால், பருத்தித்துறை மீனவர்களது மீனபிடி வலைகள் அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களது குமுறல்களுடனே ஜன-31ம் திகதி விடிந்தது.

மீனவர்கள்3 எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்கடலில் காணாமல் போயிருந்த 21 வயதேயான தணிகைமாறனது உடலும் அதே நாளில் கரையொதுங்கிய செய்தி வடபகுதி மீனவர்களிடையே பரவியமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போன்று அமைந்திருந்தது.

மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன மேற்கூறப்பட்டவாறு அமைச்சரை பாதுகாக்கும் வகையில் வாழாதிருக்க, மீனவர்களே தமது துயரத்திற்கு தீர்வுதேடி நேரடியாக போராட்டத்தை ஆரம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

‘எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்து’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சூட்டோடு சூடாக வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் தொடர் சாலைமறியல் மற்றும் தொழில் மறிப்பு போராட்டத்தை அன்றைய தினமே ஆரம்பித்திருந்தனர். இப்போராட்டத்தின் வீச்சு வடமராட்சி கடற்கரை வீதியில் ஆங்காங்கே படகுகளை நிறுத்தி வீதி மறியல் போராட்டமாக மாற்றியிருந்தது. இதனால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதோடு, இப்போராட்டம் வடமாகாணம் தழுவியதாக விரிவடைந்தது.

ஒருநாளில் கூடி கலைந்து விடுவார்கள் என்று காத்திருந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் தரப்பினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்சாலை மறியல் போராட்டமாக வலுவடைந்த நிலையில், வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மீனவர்கள் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் ஒன்றுகூடி சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரச தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, ‘வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை தடுத்துநிறுத்துவது தொடர்பில் தகுதிவாய்ந்த தரப்பினர் எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும்வரை தமது போராட்டம் தொடரும்’ என்பதாக மீனவர்கள் உறுதிபடத் தெரிவித்து அக்கோரிக்கைகளை நிராகரித்திருந்தனர்.

உறுதியுடன் தொடர்ந்த மீனவர்களது இப்போராட்டமானது, இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலானதாகவும் தமிழ்நாடு, இந்திய அரசியல் தரப்பினரது கவனத்தை திருப்பும் வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மீனவர்களுடன் ஒருமித்து மீனவ சமாசங்கள் மற்றும் சம்மேளன தரப்பினரும் கைகோர்த்து நின்றிருப்பின் எல்லை தாண்டிய மீன்பிடியால் வடக்கு மீனவர்கள் நித்தமும் சந்தித்துவரும் துயரத்திற்கு நிரந்தரத் தீர்வுக்கான வழி காணப்பட்டிருக்கும்.

தம்சார்ந்த மீனவ சமுதாயத்தின் இருப்பை பாதுகாப்பதற்கு பதிலாக டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுபதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த மீனவ சமாசங்கள் மற்றும் சம்மேளன தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாட்டினால், காவல்துறையினர் நீதிமன்றத் தடையுத்தரவின் மூலமாக மீனவர்களது இப்போராட்டத்தை பெப்-04 அம் திகதியுடன் தற்காலிக முடிவுக்கு கொண்டுவரும் நிலையேற்பட்டிருந்தது.

மீனவ சமாசங்கள் மற்றும் சம்மேளன தரப்பினர் தாமும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மீனவர்களது தொடர் சாலைமறியல் போராட்டம் ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறு அவர்களும் அடையாள போராட்டத்தை முன்னெடுத்தது மட்டுமல்ல, மீனவர்கள் தங்களது நாளாந்த தொழில் நடவடிக்கையையும் நிறுத்தி தம்மை வருத்தி மேற்கொண்டுவந்த தொடர் சாலைமறியல் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தத்தை மடைமாற்றி வலுக்குறைப்புச் செய்திருந்தனர்.

முன்னர் சுட்டிக்காட்டிய பொறிமுறையூடாக எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் தார்மீக பொறுப்பு வாய்ந்த இலங்கை கடற்படை, தனது கடப்பாட்டில் இருந்து விலகி நிற்பதானது, தமிழ்நாட்டு மீனவர்களும் வடபகுதி மீனவர்களும் நேருக்கு நேர் மோதும் சூழலை ஏற்படுத்தி, இரு நிலங்களிலும் உள்ள தமிழர்களிடையே நிரந்தர பகையை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடனே என்பது தெரிகிறது.

இச்சதித்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் தான் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது ஆதரவு தரப்பான மீனவ பிரதிநிதிகள் செயற்பட்டு வந்தனர். ‘எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டு மீனவர்களது படகுகளை நடுக்கடலில் இடித்து மூழ்கடிப்போம்’ என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இந்த பின்னணியில்தான் அவர்களால் விடுக்கப்பட்டிருந்தது.

இதன் நீட்சியாக கடலில் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதும், இதன்மூலம், ஈழத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தாய்த் தமிழ்நாட்டில் இருந்து எதிர்வினையாற்றும் நிலையை இல்லாமல் செய்வதுமே இச்சதித்திட்டத்தின் நோக்கமாகும்.

மீனவர்கள்4 எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்மீனவர்கள் முன்னெடுத்திருந்த தொடர் சாலைமறியல் போராட்டம், இச்சதித்திட்டத்தை தற்காலிகமாக பலவீனப்படுத்தியுள்ளது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

இருந்தபோதிலும், வடபகுதி மீனவர்களது நெடுநாள் துயரத்திற்கு நிரந்தரத் தீர்வை நோக்கியதாக நகர்ந்த மீனவர்களது போராட்டம், அதிகாரத் தரப்பினரது நெருக்குவாரத்தால் தற்காலிகமாக கைவிடப்படும் நிலைக்கு வந்தது. மீனவர்கள் ஏற்படுத்திய அடித்தளத்தில் டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆதரவாளர்களாக வலம்வரும் மீனவ பிரதிநிதிகளும் அரசியல் ஆதாயம் பெற்று வருகின்றனர். இதனால் வடபகுதி மீனவர்களது துயரம் தொடர்கதையாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளமையும் மறுப்பதற்கில்லை.

தற்போதைய பரபரப்பான சூழலில் தணிந்து போனதாக காணப்படும் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளின் எல்லை தாண்டல் என்பது மீண்டும் எல்லை மீறுமாயின் வடக்கு மீனவர்கள் கடற்றொழிலை முற்றாக கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தலைமுறைகள் கடந்து கடலன்னையின் மடியேறி தம் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பிய வடபகுதி மீனவர்கள், கடற்றொழிலை கைவிடும் நிலையேற்பட்டால், தற்போதைய சூழ்நிலையில் அவர்களை சாவின் விளிம்புக்கு தள்ளுவதாகவே அமையும்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் படகுகளை தடுத்து நிறுத்தவேண்டியது இலங்கை கடற்படையின் கடப்பாடாகும். அதனை வலியுறுத்துவதே இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுவரும் வடபகுதி மீனவர்கள் சார்பில் முன்வைக்கவேண்டிய ஒரே கோரிக்கையாகும். அதைவிடுத்து தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேசுவதோ, தமிழ்நாடு, இந்திய தரப்பினரோடு பேச முற்படுவதோ இவ்விடயத்திற்கு தீர்வாகாது என்பதுடன், பொறுப்புச் சொல்லவேண்டிய கடற்றொழில் அமைச்சரையும், இலங்கை கடற்படையையும், இலங்கை அரசாங்கத்தையும் காப்பாற்றும் செயற்பாடாகவே அது அமையும் என்பது திண்ணம்.

வடபகுதி மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இவ்விடயத்தின் காத்திரத்தன்மையை உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

Tamil News