வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு விசித்திரமானது-மனோ

வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு

வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அவரது முக நுார் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது. நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி”..! இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா?

13 என்பது முழுமையான தீர்வென்றோ, அதுதான் இறுதி தீர்வென்றோ எம்மில் எவரும் ஒருபோதும் கருதவில்லை. அரசு முகாமில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ்கூட 13ஐ முழுமையான இறுதி தீர்வு என கருதுகிறார் என நான் நினைக்கவில்லை. அப்படி இருக்கையில், இதையும்கூட திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? இந்த அற்ப (Silly) விவாதத்தை கடந்து நாம் பயணிக்க முடியாதா?

13ஐ “ஆரம்ப புள்ளி” யாக கருதிதானே மாகாணசபை தேர்தல் வந்தால் வடக்கு கிழக்கில் சகல கட்சியினரும் போட்டி இடுகிறார்கள்? ஆக, எந்தவொரு இறுதி தீர்வும், “இதையும் தாண்டி” தானே அமைய வேண்டும்? இதைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல், எப்படி, அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது? இதன் அடிப்படையில்தானே, இலங்கை வரும் ஒவ்வொரு இந்திய அரசு பிரதிநிதியுடனும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆண்டாண்டு காலமாக பேசுகிறார்கள்? அப்படியானால் இனிமேல், இத்தகைய இந்திய அரசுடனான பேச்சுகள் நிறுத்தப்பட போகின்றனவா?மேலும் மாகாணசபை தேர்தல் பற்றிதானே ஐநா மனித உரிமை ஆணையம் உட்பட சர்வதேச நிறுவனங்களும் பேசுகின்றன?

“சமஷ்டி” தீர்வுகளை பெற தமிழருக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை பயன்படுத்தி, தமிழர்தாம் போராடி தீர்வுகளை பெற வேண்டும். உலகம் துணை பாத்திரம்தான் வகிக்க முடியும். வெளியில் இருந்து எவரும் வந்து, தட்டில் வைத்து “தீர்வு” தரப்போகிறார்களா, என்ன?

இங்கே படத்தில், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி, தெருவோரத்தில் பின்னாலே வரும் பஸ் மோதிடுமோ என அவதானத்தில் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு விசித்திரமானது-மனோ