Tamil News
Home செய்திகள் படகு வழியாக வரும் எவருக்கும் அவுஸ்திரேலியாவில் இடமில்லை-ஆளும் தொழிற்கட்சியின் தேர்தல் உறுதிமொழி பற்றி ஆராய்வு 

படகு வழியாக வரும் எவருக்கும் அவுஸ்திரேலியாவில் இடமில்லை-ஆளும் தொழிற்கட்சியின் தேர்தல் உறுதிமொழி பற்றி ஆராய்வு 

அவுஸ்திரேலியாவுக்குள் விசா இல்லாமல் படகு வழியாக எவரும் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் என  கடந்த ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியது அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி. அந்த வகையில், படகு வருகைகள் தொடர்பாக முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணியின் கொள்கையையே தொழிற்கட்சியும் பிரதிபலித்தது. 

படகு வருகைகளை தடுப்பதற்காக கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எல்லைகள் இறைமை நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் தொழிற்கட்சி தலைவரும் (இன்றைய பிரதமருமான) அந்தோணி அல்பனீஸ் தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் கீழ், விசாயின்றி வருபவர்கள் கடல் கடந்த தடுப்புக்கு கொண்டு செல்லப்பட்டு எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்வாறான சூழலில், அவுஸ்திரேலிய ஏபிசி ஊடகம் படகு வருகைகள் தொடர்பான தொழிற்கட்சியின் தேர்தல் வாக்குறுதியை ஆராய்ந்துள்ளது.

படகு வருகைகள் மற்றும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள்:

  1. 29 மே 2022: கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய தேர்தலின் இறுதி நாட்களில் இலங்கையிலிருந்து வந்த படகு தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது என துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ் அறிவித்தார்.
  2. 29 ஜூலை 2022: 125 இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த நான்கு படகுகள் ஜூன் மாதத்தில் தடுக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய எல்லைப்படையின் மாதாந்திர செய்திக்குறிப்பு தெரிவித்தது.
  3. 30 செப்டம்பர் 2022: இலங்கையிலிருந்து படகு வழியாக வந்த 46 பேர் தடுக்கப்பட்டு இலங்கை நாடுகடத்தப்பட்டனர் என எல்லைப்படையின் செய்திக்குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
  4. 27 ஜனவரி 2023: டிசம்பர் 2022ல் 16 பேருடன் வந்த படகு திருப்பி அனுப்பப்பட்டது என எல்லைப்படை கூறியுள்ளது. ஆனால் எந்த நாடு என குறிப்பிடப்படவில்லை.
  5. 24 பிப்ரவரி 2023: ஜனவரி 2023ல் 10 பேருடன் வந்த படகு திருப்பி அனுப்பப்பட்டது.

அந்த வகையில், இதுவரை படகு வழியாக வந்த எவரையும் அவுஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்பது புலப்படுகிறது. அதே சமயம், படகு வருகைகள் அவ்வப்போது தொடருவதால் தொழிற்கட்சி ஆட்சி முடிவிலேயே இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

Exit mobile version