Tamil News
Home செய்திகள் இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான ‘போர் பயிற்சி ’ குறித்து வெளியாகும் செய்திகள் –...

இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான ‘போர் பயிற்சி ’ குறித்து வெளியாகும் செய்திகள் – கடற்படை விளக்கம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) தைமூர் உடனான திட்டமிடப்பட்ட கடற்படைப் பயிற்சி தொடர்பான சில தகவல்களுக்குப் பதிலளித்த இலங்கை கடற்படையினர், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் கடற்படைக் கப்பல்கள் நாட்டை விட்டுப் புறப்படும்போது வழக்கமான செயற்பாடாக பயிற்சிகளை மேற்கொள்வது சம்பிரதாயபூர்வமானது என தெரிவித்துள்ளது.

134 மீ. நீளமுள்ள PNS தைமூர் ஆகஸ்ட் 12 அன்று ஒரு உத்தியோகபூர்வமான பயணமாக கொழும்பு வந்தடைந்தது. இந்த கப்பல் ஆகஸ்ட் 15 வரை நாட்டில் இருக்கும் , மேலும் இரு கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

மேலும், பிஎன்எஸ் தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் ‘போர் விளையாட்டு’ பற்றி பரப்பப்படும் சில ஊடகச் செய்திகள் தவறானவை” என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு கடற்படைகளுடன் செயல்படும் திறன், கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.