படகு வழியாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கான கால அளவை நீட்டிக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்துக்குள் கடல் வாயிலாக நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கான கால அளவை 4 நாட்களிலிருந்து 28 நாட்களாக உயர்த்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டிருக்கிறது. 

நியூசிலாந்தில் படகு வழியாக அகதிகள் பெருமளவில் தஞ்சமடைவது நிகழாத போதிலும், நியூசிலாந்தை படகு மூலம் அடையும் முயற்சிகள் பல நடந்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டில் 200 தமிழ் அகதிகளுடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தை அடைய முயன்ற படகு காணாமல் போன சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது.

படகு வழியாக நியூசிலாந்தில் தஞ்சமடைவதற்கான ஆபத்து குறைந்த அளவில் தான் உள்ளது என்ற போதிலும் தற்போதைய சட்டத்தில் மாற்றம் தேவை என அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் மைக்கேல் வுட் கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த முன்மொழிவு மனித உரிமைகளை நிராகரித்துள்ளதாக என பசுமைக் கட்சியின் அகதிகள் விவகார பேச்சாளர் கோல்ரிஸ் கஹ்ரமான் தெரிவித்திருக்கிறார்.

“நியூசிலாந்தின் கடல் பகுதிக்குள் தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் படகுகள் பெருமளவில் வருவதில்லை. இது எந்த காரணமுமின்றி எடுக்கப்பட்ட தெளிவான அரசியல் தேர்வாகும்,” என அவர் விமர்சித்திருக்கிறார்.