புத்தாண்டில் பலரையும் பதகளிக்கச் செய்யும் புதிய ஆட்சி முறையா…..? – பி.மாணிக்கவாசகம்

புதிய ஆட்சி முறையா பி.மாணிக்கவாசகம்

புத்தாண்டில் பலரையும் பதகளிக்கச் செய்யும் புதிய ஆட்சி முறையா…..? புத்தாண்டில் பொருளாதாரப் பிறழ்வினால் பொருளற்ற கடனாளியாக நேரிடும் (Bankrupt) நாடு மாறும், மக்கள் பஞ்சத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்கியுள்ள நிலையில், நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராகிய கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை முன்வைத்துள்ளார். அகிம்சையைப் போதிக்கின்ற பௌத்த மதத்தின் ஒரு மதத் தலைவராயினும், ஒரு மதத் தீவிரவாதியாக – மத வன்முறையாளனாகத் திகழ்கின்ற ஞானசார தேரரிடம் இருந்து தனிப்பட்ட கருத்தாக இந்தக் கோசம் வெளிவந்துள்ளது. இருப்பினும் இராணுவமயமாக்கல் போக்கைக் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா, என்ற வினாவுக்கு, நேர்காணல் ஒன்றில் அவர் அளித்துள்ள பதில் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புதிய ஆட்சி முறையா“ஜனாதிபதி சாதாரண அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல. ‘சேர் பெயில்’ ஆகவில்லை. பொதுத் தேர்தலை நடத்தி புதிய அமைச்சரவையை அவர் அமைக்கும் வரையில் நாடு முழுமையாக ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியபோது, நாட்டில் எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லையே. எப்போது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் இயங்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பிரச்சினைகளும் ஆரம்பித்துவிட்டன. ஆகவே நாட்டின் இன்றைய பிரச்சினைக்கு யார் காரணம் என்பது இதில் இருந்தே வெளிப்படுகின்றதுதானே. ஜனாதிபதிக்குத் தூரநோக்கு சிந்தனையொன்று உள்ளது. இந்தப் பொறிமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு உள்ளது. ஏனையவர்கள் குழப்பியடிக்கின்றார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல. அரச அதிகாரிகளும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும்” என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களும் பாராளுமன்றமும் செயற்படுவதே பிரச்சினைகளுக்குக் காரணம் என அவர் இந்தப் பதிலின் மூலம் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தக் கட்டமைப்பு – அந்தப் பொறிமுறை இல்லாமல் போனால் பிரச்சினைகள் உருவாகமாட்டாது என்பது அவரது கூற்று. இதனையொட்டி ஜனாதிபதியின் அரசியல் நோக்கம் பற்றிய நிலைப்பாட்டை அவர் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஏனைய அரசியல்வாதிகள் போன்றவரல்ல. அவர் முற்றிலும் வித்தியாசமானவர் என்பதை ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வித்தியாசமானவர். வித்தியாசமான சிந்தனையையும், வித்தியாசமான போக்கையும் கொண்டவர் என்பதை அவருடைய செயற்பாடுகளே வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனை ஞானசார தேரர் கூறித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

ஆனால் நாடு மிக மோசமான நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்த நெருக்கடி நிலையில் இருந்து விடுபட வேண்டிய முக்கியமான அரசியல் சூழலில், அதுவும் 2022 ஆம் ஆண்டு உதயமாகின்ற சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இயல்பிலேயே இராணுவ சிந்தனை வசப்பட்டவர். இராணுவ மயமான போக்கைக் கொண்டவர். இதற்கு அவரது கடந்தகால இராணுவ அனுபவமும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் நிறைவேற்றதிகாரம் கொண்ட செயலாளராகச் செயற்பட்டமையினால் ஏற்பட்ட இயல்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

இராணுவ அதிகாரியாக இருந்த காலத்திலும் பார்க்க, விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடுமையான யுத்தத்தின்போது தன்னிகரற்ற வகையில் அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது சிந்தனைப் போக்கில் செயற்படுவதற்கு அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பமும், அதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட சாதகமான அனுபவமும் அவரை இராணுவ மயமான சிந்தனையையும், போக்கையும் கொண்டவராக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்து விட்டன என்றே கூற வேண்டும்.

சிங்கள பௌத்த மக்களின் அமோக ஆதரவின் மூலம் தேர்தலில் ஜனாதிபதியாக வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவின் கடந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் தனது இராணுவ சிந்தனைப் போக்கைப் படிப்படியாக செயற்படுத்தி வந்துள்ளார். யுத்தகாலத்தில் இராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தமையை ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐநா மனித உரிமைப் பேரவையும் அவற்றுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றன.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இரண்டுக்கும் மேற்பட்ட பிரேரணைகள் இந்த பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்தப் பிரேரணை ஒன்றிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி, பொறுப்புக் கூறுகின்ற கடப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயினும் அந்தக் கடப்பாட்டை மீறியுள்ள ஜனாதிபதி கோட்டபாய, அந்த இணை அனுசரணையில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

சர்வதேச பங்களிப்புடனான பொறுப்புக் கூறல் விசாரணைகளுக்கு இடமில்லை என்றும், உள்ளக விசாரணைகளின் மூலம் மட்டுமே பொறுப்புக் கூறலாம் என்றும் அவர் ஐநா மன்றத்திற்குப் பதிலளித்துள்ளார். அவருடைய இந்தச் செயற்பாடு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை மட்டுமன்றி, பொறுப்புக் கூறலுக்கான பிரேரணையை நிறைவேற்றிய சர்வதேச நாடுகளையும் அதிருப்தி அடையச் செய்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி போர்க் குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக ஆளாகியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் போக்கை அந்த நாடுகளும் பல அமைப்புக்களும் கண்டித்திருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது தேர்தல் காலக் கொள்கைப் பிரகடனத்தில் பதவிக்கு வந்தால், எந்த ஓர் இராணுவத்தினரையும் போர்க்குற்ற விசாரணைகளுக்கோ அல்லது உரிமை மீறல் விசாரணைக்கோ இடமளிக்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்ற மறுநாளே இராணுவத்தினருக்கு எதிரான அத்தனை குற்றச்சாட்டுக்களையும் விலக்கப் போவதாக அவர் சிங்கள பௌத்த மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

அந்த உறுதிமொழிக்கேற்ப ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுப் பதவி ஏற்றதன் பின்னர் இராணுவத்தினர் மீதான அனைத்து உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும் விலக்கினார். நீதி மன்றங்களில் நிலுவையாக இருந்த உரிமை மீறல்கள் தொடர்பிலான வழக்குகள் அனைத்தையும் இடைநிறுத்தி, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த அனைத்து இராணுவத்தினருக்கும் விசாரணைகளில் இருந்து விலக்களித்தார். இதன் மூலம் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் அநீதி முறையிலான குற்றச்சாட்டுக்களில் இருந்தும், அவற்றிற்கான தண்டனைகளில் இருந்தும் இராணுவத்தினருக்கு விலக்களித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஞானசார தேரரை அவரது அரசியல் அமைப்பாகிய பொதுபல சேனா என்ற அமைப்பை நிறுவி முஸ்லிம் மற்றும் தமிழ் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைப் போக்கிற்கு ஞானசார தேரரைத் தலைமையேற்றுச் செயற்படவும், இனவாத மதவாதப் போக்கில் வன்முறைகளில் ஈடுபடுவதற்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உறுதுணை புரிந்துள்ளார்.

இந்த வகையில் ஜனாதிபதியுடனான தீவிர இனவாத, மதவாத நெருக்கமான அரசியல் உறவே அவரை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய சட்டவாக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக கோட்டபாய ராஜபக்சவை நியமிக்கச் செய்துள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நீதிமன்றத் தீர்ப்புக்கமைய தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரரை, பௌத்த அமைப்புக்களினதும், பௌத்த மதத்தினரதும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்பட்டதுமல்லாமல், மனித உரிமை மீறல் வழக்கு விசாரணையொன்றில் நீதிமன்றத்தில் குறுக்கீடு செய்து, நீதிமன்றத்தை அவமதித்ததாற்காகவே அவருக்குச் சிறைத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பௌத்த மத நியமங்களின்படி சுகங்கள் சலுகைகள் அனைத்தையும் முற்றும் துறந்திருக்க வேண்டிய  பிக்குகளில் ஒருவராகிய ஞானசார தேரர், ஒரு கடைமகனாகச் செயற்பட்டிருந்தமைக்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

புதிய ஆட்சி முறையாசாதரரண நீதிமன்றக் குற்றத் தண்டனையில் இருந்து தவறான முறையில் தண்டனை விலக்களிக்கப்பட்ட ஒருவரையே ஜனாதிபதி கோட்டபாய நாட்டின் மிக முக்கியத்துவம் மிக்கதொரு சட்டவாக்கத்திற்கான ஆணைக் குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையிலான மதவாத அரசியல் செயற்பாட்டு நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே  நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்காக நாட்டை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அரசியல் ரீதியான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஆயினும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையிலான மதவாத அரசியல் நெருக்கத்தை உற்றுக் கவனிக்கும்போது, இந்தக் கருத்தை ஞானசார தேரருடைய தனிப்பட்ட கருத்தாகக் கொள்ள முடியாதிருக்கின்றது.  உண்மையில் அதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கருத்தாகவே நோக்க வேண்டியிருக்கின்றது.

இராணுவ ஆட்சி

நாட்டை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு அப்பால், அவர் வெளியிட்டுள்ள மற்றுமொரு கருத்து நாட்டின் ஜனநாயகம் விரைவில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். முழுமையான இராணுவ சர்வாதிகார ஆட்சி நிறுவப்படும் என்ற கசப்பான உண்மையைப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

சகல அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குக் காரணம் என தனது நேர்காணலில் கூறியுள்ள ஞானசார தேரர், மற்றுமொரு கருத்தையும் வெளியிட்டுள்ளார். “இவர்கள்தானே (சகல அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே) மக்களைப் பட்டினிக்குள் தள்ளியுள்ளனர். நாட்டைக் கடனில் தள்ளியுள்ளனர். இதற்கு ஜனாதிபதி காரணமல்ல. ‘இராணுவ ஆட்சி’ எனக் கூவிக்கொண்டு, ஜனநாயகக் கதைபேசும் சகலரையும் பிடித்துச் சிறையில் அடைக்க வேண்டும். இல்லையேல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது” எனக் கூறியுள்ளார்.

அறுபத்தொன்பது இலட்சம் பௌத்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைத்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, இராணுவ மயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாகத்தைப் படிப்படியாக உருவாக்கி வருவதுடன், பொருளாதார ரீதியாகவும் மோசமான வெளிவிவகாரக் கொள்கைச் செயற்பாடுகளினாலும் நாட்டை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கின்றார். இதுவே அரசியல் யதார்த்தம்.

நிறைவேற்றதிகாரத்துக்கு அப்பால் அதிகப்படியான அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்து, ஜனநாயக ரீதியாக அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் இராணுவ சிவில் ஆட்சி முறையில் இருந்து நாட்டை முழுமையான சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லப் போகின்றார் என்பதையே நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கு நாட்டை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஞானசார தேரரின் வெளிப்படுத்தி உள்ளது.

அது மட்டுமன்றி, அதிகாரங்கள் பலவற்றைத் தன்னகத்தே குவித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், நாட்டைத் துப்பாக்கி முனையில் ஆட்சி செய்ய வேண்டிய அவல நிலைமைக்கே நிலைமைகள் ஜனாதிபதி கோட்டபாயவைத் தள்ளியுள்ளது என்ற கசப்பான உண்மையையும் மறைமுகமாக ஞானசார தேரர் தனது ஊடக நேர்காணலில் புலப்படுத்தியுள்ளார்.

Tamil News