மலையக அரசியல் அரங்கம்; முன்னாள் எம்.பி. திலகராஜ் ஆரம்பிக்கின்றார்

மலையகத்தில் புதிய அரசியல் கட்சி

மலையகத்தில் புதிய அரசியல் கட்சி: நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமைசார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. “அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்குதல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுத்தல், கல்வி, சுகாதாரம், அரசியல்சார் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டே அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.” – என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது,

குறித்த அமைப்பானது அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ அல்லாது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் அதில் எவரும் இணையலாம் எனவும் திலகர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான பணிகள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் ‘அரசியல் சார்’ கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இவ்வாறானதொரு அமைப்பின் தேவைப்பாட்டை உணர்ந்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் ‘மாவட்ட எல்லைகளை கடந்த மலையக அரசியல்’ என்ற எண்ணக்கரு பிரதான செயற்பாட்டுத் தளமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மலையக சமூகத்தின் எழுச்சிக்காக எல்லா வழிகளிலும் பாடுபட்ட மலையக தேசப்பிதா நடேசய்யர், அவரின் பாரியார் மீனாட்சியம்மாள் ஆகியோரின் படங்களை லட்சினையாகக் கொள்வதன் மூலம் மலையக அரசியலில் ஆண் – பெண் சமவாய்ப்பை ஏற்படுத்த அமைப்பு ஒருமைப்பாட்டைத்்தெரிவிப்பதுடன் ‘மலையகம் சமூகம் நூற்றாண்டுகால அரசியல் சமூகம் என்பதனையும் அதன் அரசியல் அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்பட்டு கூலி சமூகமாக காட்ட முயற்சிக்கப்படுகிறது. மலையகத்தின் பிரதிநிதித்துவ அரசியல் 1921 ல் இருந்தே ஆரம்பித்த நூற்றாண்டு பழமை வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைகின்றது” என அமைப்பு குறித்து விளக்கமளித்தார்.

இன்றைய சந்திப்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட செயற்குழுவும் அமைக்கப்பட்டதுடன் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருடன் பிரதான அமைப்பாளர் இராமன் செந்தூரன் செயற்குழுச் செயலாளர் நா. கிருஷ்ணகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மலையக அரசியல் அரங்கம்; முன்னாள் எம்.பி. திலகராஜ் ஆரம்பிக்கின்றார்