உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1

WhatsApp Image 2022 11 01 at 11.29.36 AM உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1

தாயகத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழும் மக்களின் உளநலத்தைப் பேணுவதற்காகவும் உளரீதியாக பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பல்வேறு காரணங்களினால் குடும்பங்களினால் பராமரிக்க முடியாதவர்களுக்காகவும் பல்வேறு பராமரிப்பு இல்லங்கள் இயங்கி வந்தன.

ஆனால் 2009 இல் போர் முடிவுபெற்ற பின்னர், இவ்வாறான உளநலப்பாதிப்புள்ளவர்களுக்கான இல்லங்கள் எதுவும் அங்கு இயங்கவில்லை. இந்தத் தேவையை உணர்ந்த டானியல் ஆரம்பத்தில் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கான ஒரு இல்லத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் உளரீதியிலான தேவைகள் உள்ள பெண்பிள்ளைகளுக்காக வெற்றிமனை என்ற இல்லத்தை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கிறார். கிளிநொச்சி சமூகம் டானியலின் முயற்சிக்கு நல்ல ஆதரவை வழங்கிவருகிறது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர்கள் இதற்கான தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி சந்தோசம் என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு உளநலக்காப்பகமும் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்படவிருக்கிறது. இவ்வாறான ஒரு பின்புலத்தில் இலக்கு மின்னிதழுக்காக டானியலுடன் ஒரு செவ்வி மேற்கொள்ளப்பட்டது. அந்தச் செவ்வியின் முதற்பாகத்தை இங்கே தருகிறோம்.

கேள்வி: கிளிநொச்சியில் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு இல்லம் ஒன்றை ஆரம்பித்து அதனை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். உளநலம் தொடர்பாக வேறு பல பணிகளையும் செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்கின்ற பணி பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? அதற்கு முதல், எங்கள் இலக்கு வாசகர்களுக்கு உங்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்தால் நல்லது.

WhatsApp Image 2022 11 01 at 11.29.35 AM 1 உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1

பதில்-

என்ரை பெயர் டானியல். நீண்ட காலமாக, அதாவது 97ம் ஆண்டிலிருந்து கிளிநொச்சி ஊனமுற்றோர் புனர்வாழ்வுக் கழகத்தில் வேலைசெய்து கொண்டிருந்தனான். 2009 இல் வந்து நாங்கள் displace ஆகி resettlement  இல வரேக்க இங்க கிளிநொச்சியில் எந்த வித வசதிகளும் இருக்கேல்ல. அந்த நேரத்தில கிராம மட்டத்தில போகேக்க, ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கத்தினரால் counselling training, physiotherapy training, CBR training எல்லாம் வழங்கப்பட்டது.

2010க்குப் பிறகு, நாங்கள் கிராம மட்டத்தில போகேக்க அந்தப் பிள்ளைகளை வீடுகளில வைச்சுப் பராமரிக்க முடியாத நிலையில ஒரு நெருக்குவாரத்துக்குள்ள பெற்றோர் இருக்கிறதை அவதானிச்சனாங்கள். அதால எனக்கொரு எண்ணம் வந்தது. என்ன எண்டு சொன்னால் நான் இதனை ஆரம்பிக்க வேண்டும். என்ற எண்ணம் வந்தது. அதன் அடிப்படையில் நான், முதல் டாக்டர் ஜெயராஜா, எங்கட  Father இம்மானுவேல் – அவர் வந்து கரோட்டில இருந்தவர். மற்றது கடம்பசீலன் எஞ்சினியர் எண்டு சொல்லிக் கொஞ்சப்பேர் – இப்படி ஒரு ஏழு, எட்டுப்பேரைச் சேர்த்து நான் committee ஐ உருவாக்கினனான். 2015ம் ஆண்டு, முதலாம் மாதம் 17ம் திகதி first meeting ஐ எங்கட அன்னை இல்லத்தில் போட்டனாங்கள். அந்த நேரத்தில  நான் முன்வைச்ச விடயங்கள், இந்தப் பிள்ளைகளின்ர Daycare Centre ஐ அதாவது பகற்பராமரிப்பு நிலையம் எண்டது தான் எங்கட இலக்காக இருந்தது. காரணம் என்ன எண்டுசொல்லிச் சொன்னால், நாங்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து பராமரிக்கேக்க, பெற்றோர் வீடுகளில், அவை வந்து எங்களிட்டப் பிள்ளைகளை hand over பண்ணியிற்று வேலைகளுக்குப் போயிற்று திரும்ப வரேக்க நாங்கள் இந்தப் பிள்ளைகளைக் கொடுக்கிறதால பிள்ளைகள் அவை வந்து கசநந ஆக வேலைக்குப் போகக்கூடியதாக இருக்கும் எண்டுறதுக்காக ஆரம்பிச்சனாங்கள்.

அது நாளடைவில எங்கட சமூகத்தின்ர போக்கு, அதாவது விலைவாசி ஏற்றங்கள் அதுகள் இதுகள் எண்டு சொல்லி ஏற்பட்டு, அது வந்து Daycare Centre ஆக வைச்சிருந்தனாங்கள் – வீடுகளில வைச்சுப் பராமரிக்க ஏலாத பிள்ளைகளை எங்களோட 24 மணித்தியாலமும் எடுத்துப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலைக்குள்ள வந்திட்டோம். இது வந்து நாங்கள் பிள்ளையளை, 18 வயசுக்கு உட்பட்ட பிள்ளையளை எண்டால் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் ஊடாகவும் 18 வயசுக்கு மேல எண்டால் கிளிநொச்சி மாவட்டப் பிரதேச செயலாளர் – அந்தந்தப் பிரதேசங்களில இருக்கிற பிரதேச செயலாளர்கள் ஒரு கடிதம் தாறதன் மூலமும் அந்தப் பிள்ளைகளை எங்கட இல்லத்தில இணைச்சனாங்கள்.

WhatsApp Image 2022 11 01 at 11.29.35 AM 2 உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1

இப்படியான பிள்ளைகளோட வேலை செய்யத் தொடங்கிய பின் சமூகத்தில ஏற்பட்ட சில பிரச்சினைகள். இது மட்டும் எங்கட போக்கில்லை. இந்த நிறுவனத்தின் ஊடாக இன்னும் கூடச் செய்ய வேண்டும் எண்டு முடிவெடுத்தனாங்கள். அந்த நேரத்தில டொக்டர் ஜெயராஜா எனக்குப் பெரும் ஆதரவாக இருந்தவர். அப்ப அவரது ஆதரவோட முதற்கட்டமாக நாங்கள் வெற்றிமனையை ஆரம்பிச்சனாங்கள். ஏனெண்டால் அது 2009க்கு முன்னர் இயங்கிய உளநலக்காப்பகம் – அதாவது பெண்களுக்கான உளநலக்காப்பகம் 2010க்குப் பிறகு இருக்கேல்ல. அதைப் பொறுப்பெடுத்துச் செய்யிறதுக்கும் யாரும் முன்வரேல்ல. அந்தக் கட்டத்தில டொக்டர் ஜெயராஜா என்னைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவரது ஆதரவு எனக்குக் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில வெற்றிமனையை நான் துவங்கினனான். ஆனால் உண்மையிலேயே வைத்திய வசதியைப் பொறுத்து, எங்கட சிறுவர் இல்லமாக இருக்கலாம் அல்லது வெற்றிமனையாக இருக்கலாம். கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை உளநலப்பிரிவில் இருக்கிற உளநலவைத்தியர் டொக்டர் ஜெயராஜாவின் பங்களிப்பு, அவர் எனக்கு வழங்கிய பங்களிப்பு – அவர் எனக்கு வழங்கிய ஆதரவு எண்டது பெரியதொரு வரப்பிரசாதமாக அமைந்தது. அது எனக்கொரு உந்து சக்தியைத் தந்திருக்குது. என்ன எண்டு சொன்னால் நான் வேகமாக வேலைகளைச் செய்யலாம் எண்ட உணர்வு வந்தது.

அதில தான் வெற்றிமனைக்கு ஒரு counsellor தேவை எண்டு வரேக்க சாந்தியை அதாவது அன்னை இல்லத்தில 96 இலிருந்து counsellor ஆக இருந்து நிறையப் பணிகளை ஆற்றினவர். அவவை வந்து வெற்றிமனைக்கு உள்வாங்கினனான். அதுக்குப் பிறகு எங்கட வேலைத்திட்ட விரிவாக்கம் வந்து, ஒரு சில நிகழ்வுகள் மூலம் – உதாரணமாகச் சொல்லப் போனால் ஒரு தீபாவளி நிகழ்வின் மூலம் பிள்ளைகள் – விசேட தேவைகள் உள்ள பிள்ளைகள் தங்களுக்கும் திறமை இருக்குது எண்டதை வெளிப்படுத்தியிருக்கினம் – நிகழ்வுகளைப் போட்டு தாங்களே அந்த பாட்டுகளைப் பாடி, டான்ஸ் ஆடி, அதோட நாடகங்கள், கவிதைகள், – இதுகளை வெளிக்கொணர்ந்ததன் மூலம் அவைக்கு நல்லதொரு திறமையை வளர்த்துவிட வேண்டும் எண்ட நோக்கம் எனக்கு இருந்தது.

நான் அதை யோசிச்சனான். என்னெண்டு சொன்னால் இந்தப் பிள்ளைகளுக்குப் பாடசாலைக் கல்வி மாதிரி கல்வியைக் குடுத்தால் செயற்படுத்தேலாது எண்டதுக்காக, விளையாட்டு, பாட்டு, டான்ஸ் – இதுகளுக்கால அவையளது திறமையை வளர்க்க வேண்டும் எண்டு சொல்லி….

கேள்வி: உங்களை இடைமறித்து ஒரு கேள்வியைக் கேக்கிறன். இப்ப உங்களிட்ட இருக்கிற பிள்ளைகள் எப்படிப்பட்ட பிள்ளைகள் என்பதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னீங்க எண்டால் எங்கட வாசகர்களுக்கு அதனை விளங்கிக்கொள்ளச் சுலபமாக இருக்கும்.

WhatsApp Image 2022 11 01 at 11.29.35 AM உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1

விசேட தேவைகள் உள்ள பிள்ளைகள் எண்டு சொல்லேக்க எல்லாவிதமான பாதிப்புகளோடயும் தான் இருக்கினம்.  உளநலப் பாதிப்புடையவர்கள் இருக்கினம். நடக்க முடியாதவர்கள் இருக்கினம். வாய் பேச முடியாதவர்கள் இருக்கினம். மற்றது படுக்கையில இருக்கிற ஆட்கள் இருக்கினம். ஆண்பிள்ளைகள் தான் கூடுதலாகப் படுக்கையில இருக்கினம்.

படுத்த படுக்கையான பிள்ளை எண்டு சொல்லேக்க ஒரு ஆண்பிள்ளை இருக்கிறார். அவரால ஒண்டும் கதைக்கமுடியாது. படுத்திருப்பார். வாய்க்கால பச்சைத் தண்ணி கூடக் குடுக்கேலாது. மூக்கால ரியூப் வைச்சு அந்த ரியூப்பால இரண்டு மணித்தியாலத்துக்கு ஒருக்கா 200 மில்லி லீற்றர் பால் ஜூஸ் போன்ற திரவ உணவுகள் குடுக்க வேண்டும்.

தொடரும்