நெல்சன் மண்டேலாவின் அனைத்துலக நாள் 2022 | சூ.யோ. பற்றிமாகரன்.

67 ஆண்டுகால அரசியலில் 27 ஆண்டுகள் சிறையில் வாடியும்
அஞ்சாது விடுதலைக்காக உழைத்த நெல்சன் மண்டேலா

“சுதந்திரத்தை நோக்கிய எங்கள் பயணம் மீளப்பெறப்பட முடியாதது
அச்சம் எங்கள் வழியில் நிற்பதை அனுமதிக்க மாட்டோம்”
– நெல்சன் மண்டலே

உலக வரலாற்றில் தென்னாபிரிக்க மக்களுக்கு எதிரான நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் பிரித்தானிய அரசின் சிறைக்குள் வாடி உள்ள உறுதியால் தனது விடுதலையை நிலைநாட்டித் தன் நாட்டின் விடுதலையையும் உறுதி செய்த உள்ள உறுதியின் உறைவிடம்தான் நெல்சன் மண்டேலா என்னும் வரலாற்று மனிதன். எந்த உலகு அந்த மனிதனின் அரசியல் வாழ்வின் 40 வீத காலத்தை சிறைப்பறவையாக வாழவைத்ததோ அந்த உலகு இன்று அவரை மனிதாயப் பணிகளின் சிறப்புக்காக அவருடைய நினைவேந்தி அவரின் பெயரில் அனைத்துலக நாளையே யூலை 18ம் நாளில் ஐக்கிய நாடுகள் சபை மூலம் கொண்டாடி வருகின்றது.

இவ்விடத்தில் நெல்சன் மண்டேலாவின் விடுதலை மீதான உறுதியையும் அந்த உறுதியின் அடிப்படையில் அவர் மனித உரிமைகளுக்கான சட்டத்தரணியாகத் தன்னை முன்னிலைப்படுத்தியதையும் இந்த விடுதலை முயற்சியில் தன்னுடைய  குடும்பம்,  தொழில், நாளாந்த வாழ்வு அனைத்தையும் விட்டு விலகி வறுமையில் பல சிக்கல்களுடன் வாழும் சட்டத்துக்கு கரந்து வாழும் வாழ்வை தனது வாழ்வாகத் தெரிந்து கொண்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் எந்தத் துன்பவாழ்வை தங்கள் நாளாந்த வாழ்வாக வாழ்ந்தார்களோ அந்தத் துன்பவாழ்வைத் தன் வாழ்வாகவே ஏற்றதையும் எடுத்து விளக்குபவர்கள் ஒரு சிலரே. மக்களோடு மக்களாக மக்களில் ஒருவராக செயலில் வாழ்ந்தமையே நெல்சன் மண்டேலா மீதான தென்னாபிரிக்க மக்களின் நம்பிக்கையை உறுதி பெறவைத்தது.

நெல்சன் மண்டேலா அறம் பேசி மறம் பேசி நடைமுறையில் தங்கள் வாழ்வில் ஒரு சிறு இழப்புக்குக் கூட அர்ப்பணிப்பு இல்லாத வாய்வீச்சு மனிதராக வாழவில்லை என்பதே அவரின் வாழ்வியல் வெற்றியின் இரகசியம். தன் வாழ்வை தன்நாட்டின் மக்களின் துன்ப வாழ்வாகவே மாற்றியமைத்து மக்களின் விடுதலைக் குரலாகவும் துணையாகவும் மாறியது மட்டுமல்ல ஆயுத எதிர்ப்பால் சுதந்திரம் வெல்லப்பட வேண்டும் என்னும் உண்மையையும் வெளிப்படுத்தினார். “வாழ்வே போராட்டம். எனது வாழ்வின் இறுதி வரை சுதந்திரம் வெல்லப்படுவதற்காகப் போராடிக் கொண்டே இருப்பேன்” என 1961 யூன் 26ம் திகதியில் தான் தன்னைத் தேடும் பொலிசாரிடம் சரணடைய மாட்டேன் என விளக்கி “போராட்டமே எனது வாழ்வு” என்னும் விளக்கத்தை அளித்தார்.

நெல்சன் மண்டேலாவின் 1960களிலான அரசியல் சிந்தனைகள் அறவழிப்போராட்டத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாகக் கையாண்ட மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் சிந்தனைகளால் ஊக்குவிக்கப்பட்டது. அது போலவே அக்காலத்தில் ஈழத்தமிழர்களின் தலைவராக இருந்த அமெரிக்க சீர்திருத்தக் கிறிஸ்தவ சபைக் கிறிஸ்தவரான தந்தை செல்வநாயகம் அவர்களும் அறவழிப்போராட்டத்தை இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டத்துக்கான முதன்மை வழியாக முன்னெடுத்தார். ஆயினும் நெல்சன் மண்டடேலாவுக்கு இருந்த படைபல அடக்கு முறைக்கு எதிராக ஆயுத எதிர்ப்பால் சுதந்திரம் வெல்லப்பட வேண்டும் என்ற எண்ணம் தந்தை செல்வா அவர்களுக்கு இருக்கவில்லை. இதற்கு இலங்கையில் பெருவளர்ச்சி பெற்றிருந்த ஆங்கிலம் படித்தோர் குழாத்தின் சனநாயகத்தின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது முக்கிய காரணமாக அமைந்தது. தந்தை செல்வாவின் அறவழிப்போராட்ட அரசியல் முறைமை, ஈழத்தமிழ்த் தேசியத்தின் தொன்மைத் தொடக்கத்தின் முதல்வர் எனக் கூறப்பட்ட, பண்பாட்டு மீள் உற்பத்தி மூலம் பிரித்தானிய காலனித்துவ அரசுக்கு எதிராக ஈழத்தமிழர்களை போராட ஊக்குவித்த, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் காலத்திலேயே மனுக்கொடுத்து மன்றாடி அரசாங்கத்தில் இருந்து சலுகை பெறல் என்னும் அரசியல் போராட்ட முறைமையாகத் தோற்றம் பெற்றுத் தொடர் வளர்ச்சியாக தந்தை செல்வாவின் அறவழிப்போராட்டமாகப் பரிணாமமுற்றது.  ஆனால் தந்தை செல்வா அவர்கள் இலங்கையில் அமெரிக்காவைப் போலவோ அல்லது பிரித்தானியாவைப் போலவோ அரசியல் கலாச்சாரம் வளர்ச்சி அடையவில்லை. மாறாக பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் பழக்கப்படுத்தி வழக்கப்படுத்திய இனவாத மொழிவாத மதவாத அரசியல் கலாச்சாரமே நடைமுறை அரசியல் கலாச்சாரமாக இருந்தமையே மக்கள் போராட்டமாகத் தங்கள் வாழ்வை முன்னிலைப்படுத்தும் முயற்சிக்கான சமுதாய ஒன்றிணைவு அற்றவர்களாக இருந்தனர். சுருக்கமாகச் சொன்னால் நீதிக்காக பேசிய நெல்சன் மண்டேலா நீதியை அன்றாட வாழ்வால் நிலைநிறுத்தும் போராட்ட ஆற்றலாக வெளிப்படுத்தியது போல, ஈழத்தில் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அரசியல் எழுச்சிக் காலம் வரும் வரை நீதிக்கான பேச்சு என்பது மக்களின் வாழ்வால் அடையப்பட வேண்டிய நீதிக்கான போராட்டமாக, மக்களின் நாளாந்த வாழ்வின் ஒரு அங்கமாக வளர்ச்சி பெறவில்லை. இதனால் நெல்சன் மண்டேலா வழிப்படுத்திய பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தம் வாழ்வையே போரட்டமாக முன்னிலைப்படுத்தும் முறைமை இலங்கையில் நடைமுறை அரசியலாக வளர்ச்சி பெற இயலவில்லை. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் சமகால உலகின் நீதிக்கான முக்கிய விடுதலைப்போராட்டமாக போற்றப்படும் இன்றைய காலகட்டத்திலும் கூட அந்தப் போராட்டத்தின் உச்சங்களையும் அது ஈழத்தமிழர் இருப்பினை அடையாளத்தை மண்ணுரிமையை தன்னாட்சியை ஏன் சிங்கள மக்களின் பாதுகாப்பையும் கூட  உலகில் உறுதிப்படுத்திய வளர்ச்சிகளை இன்றுவரை ஈழத்தமிழர்கள் முழுஅளவில் வெளிப்படுத்தாது போராட்ட சூழலின் விளைவுகள் குறித்தே பேசி காலத்தை வீணடிக்கின்றனர்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த மட்டில் ஈழத்தமிழர்களின் தேச இனத்தன்மை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் கூடிய மண்ணுரிமையைக் கோரல் என்பதோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு தங்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பதற்கு உள்ள பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமை உள்ளது என்பதோ இதுவரை ஈழத்தமிழ் மக்களால் விளக்கப்படவில்லை. ஈழத்தமிழர்களால் இந்த வரலாற்று உண்மைகள் தெளிவாக்கப்படாததன் காரணமாகவே ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்புக்கள் குறித்த அனைத்துலக நீதி இதுவரை ஈட்டப்படாத ஒன்றாகத் தொடர்கிறது. இதற்கு நெல்சன் மண்டேலா போன்று ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் முன்னிலையாளர்கள் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஈழமக்களின் வாழ்வாக வளர்ச்சி பெற்ற தாயகம், தேசியம், தன்னாட்சியைப் பேணும் ஒன்று என்பதை இனியாவது தெளிவுபடுத்த இந்த 2022ம் ஆண்டு நெல்சன் மண்டேலா அனைத்துலக நாளில் உறுதி எடுப்பார்களாக. இது தெளிவு பெறும் வேகத்திலேயே அனைத்துலக நாடுகள் அமைப்புக்கள் ஈழமக்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு உதவ முடியும்.

மேலும் நெல்சன் மண்டேலா, ஆபிரிக்கர்களின் குற்றச் சாட்டு கறுப்பு இனத்தவர். வறுமைப்பட வெள்ளையர்கள் செல்வந்தராக உள்ளனர் என்பதல்ல. சட்டங்கள் இதனைப் பேணக் கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதேயாகும் எனத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த வறுமை நிலையை உடைப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று முறைசார் கல்வியினை வளர்த்தல். அடுத்தது வேலையாட்களின் திறன்களை வளர்த்து அதன் வழி அவர்கள் திறமைக்கேற்ற கூலி பெற வைப்பது. ஆனால் ஆபிரிக்கர்களைப் பொறுத்த மட்டில் இந்த இரண்டு வழிகளுமே அரசாங்கத்தின் வேண்டுமென்றே திட்டமிட்ட சட்டங்களால் அடைக்கப்பட்டுள்ளன. எமக்குத் தேவை சமத்துவமான அரசியலுரிமை. இது இன்மையே எங்களின் இயலாமைகள் நிரந்தரமாக உள்ளமைக்கான காரணங்கள். இதனை மாற்ற முயல்வது ஆள்பவர்களுக்கு புரட்சியாகப் பயமளிக்கும். சனநாயகத்திற்கு அச்சமூட்டுவதாக அவர்கள் கூறுவர். என்றார் நெல்சன் மண்டேலா. ஈழத்தமிழர்களுக்கும் அவரின் கூற்று பொருந்தும்.

அத்துடன் ஆபிரிக்க தேசிய விடுதலை இயக்கம் முதல் ஐம்பது ஆண்டுகள் இனவெறிக்கு எதிராகப் போரடியது. தற்போது அது தனது கொள்கையை மறுஆய்வு செய்து வாழ்வதற்கான உரிமைக்காகப் போராடுகிறது. ஆபிரிக்க மக்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் சொந்த வாழ்வின் தூண்டுதல்களின் அடிப்படையில் வாழ்வதற்கான உரிமைப்போராட்டமாக பரிணாமமுற்றது என நெல்சன் மண்டேலா 20.04. 1964இல்  தென்னாபிரிக்காவின் பிரிடோரிய நீதிமன்றத்தில் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்து குற்றவாளிக் கூண்டில் இருந்து கூறினார்.

அத்துடன் “நான் வெள்ளையர்களின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் கறுப்பர்களின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்கு எனது வாழ்வை அர்ப்பணித்து சனநாயகத்தினதும் சுதந்திரமான சமுகத்தினதும் அடிப்படையில் அனைவரும் அமைதியிலும் சமத்துவத்திலும் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்காகத் தேவையேற்படின் என்னுயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன்” என்றார். இவ்வாறு நாட்டின் அனைவரதும் விடுதலையை முன்னெடுத்த நெல்சன் மண்டேலாவின் கூற்றே தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டத்தை உலக அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக உலகைப் பார்க்க வைத்தது.

இன்று இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு, ஈழத்தமிழர்கள் மலையக மக்கள் இலங்கை முஸ்லீம்கள் வறுமைப்பட சிங்களவர்கள் செல்வந்தராக வாழக்கூடிய முறையில் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டமையே மூலகாரணம். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் நெல்சன் மண்டேலா போல் தமக்கு மேலுள்ள சிங்கள ஒடுக்குமுறைச் சட்டங்கள் தங்களைப் போன்றே மலையக மக்களையும் முஸ்லீம்களையும் பாதிப்பதால் இம்மூன்று மக்களினங்களதும் கூட்டிணைவு இயக்கப் போராட்டங்கள் வழியாகவே இம்மூன்று மக்கள் இனங்களதும் உயிரையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்க இயலும். இதற்காக பொதுவான கூட்டிணைவுப் போராட்டத்தளமொன்றை உருவாக்கி அதன் வழி அரகலிய போராட்டக்கார்களுடன் இலங்கைக் குடிகள் என்ற வகையில் எல்லோரது சிவில் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் உடனடி உருவாக்கலே இன்றைய இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடிகளுக்கான நிரந்தரத் தீர்வை இலங்கைக் குடிகளே உருவாக்க உதவும்.

இந்நிலை நடைமுறைச் சாத்தியமாவதற்கு இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத இனவெறி மதவெறி மொழிவெறி சாதிவெறி பிரதேசவெறி உணர்வுகள் பணவெறி செல்வாக்கு வெறி வழியாகவே இலங்கையின் அரசியல் அமைப்பு கட்டமைக்கப்பட்டு பெயரளவில்தான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஆட்சி முறைமை உள்ளது என்பதை சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லீம்களும் மலையகத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த உள்ளதை உள்ளபடி ஏற்கும் அரசியல் எதார்த்தம் சாத்தியமானால் மட்டுமே நெல்சன் மண்டேலா கூறுவது போல “இலகுவாக எதையும் உடைக்கலாம் அழிக்கலாம். ஆனால் அமைதியை உருவாக்கி தேச உருவாக்கத்தை செய்பவர்களே உண்மையான வீரர்கள் என்ற உண்மை உணரப்படும். ஈழத்தமிழர்களின் மாவீரர்கள் பட்டியலின் நீளம் இத்தகைய உண்மையான வீரர்கள் எவ்வளவாயிரம் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்பதை உலகுக்கும் சிங்கள மக்களுக்கும் இன்றும் தெளிவாக்குகிறது.

இந்த மாவீர்களின் மரபணு தாங்கிய ஈழத்தமிழர்கள் நெல்சன் மண்டேலா கூறியது போல “ எங்களுடைய மனிதாயத்தன்மை நடக்க இயலாது என்பவற்றை நடக்கச் செய்யும் வல்லமையுடையது” என்பதை நிரூபிப்பர். இதனாலேயே ஈழத்தமிழர்கள் நெல்சன் மண்டேலா கூறியவாறு ஈழத்தமிழர்கள் “சுதந்திரத்தை நோக்கிய எங்கள் பயணம் மீளப்பெறப்பட முடியாதது. அச்சம் எங்கள் வழியில் நிற்பதை அனுமதிக்க மாட்டோம்” என்பதில் மிகவும் உறுதியுள்ளவர்களாக இலங்கையிலும் உலகிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் தேசியத்தலைமை வளர்த்துள்ள இந்த நோக்கையும் போக்கையும் இனஅழிப்பால் பின்னடையச் செய்த சிங்களத் தலைமைகள் இன்று நாட்டை எந்த நிலையில் கொண்டு சென்று விட்டுள்ளார்கள் என்பது ஒவ்வொரு சிங்களவர்களுக்கும் நன்கு தெரியும்.
ஆதலால் சிங்களத் தேச மக்களாகிய நீங்கள், ஈழத்தமிழர்கள் என்னும் உங்களுடன் எல்லா வழிகளிலும் சமத்துவமான உரிமைகளை இலங்கைத் தீவில் கொண்டுள்ள தேச மக்களின் வரலாறுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள இறைமையை மதித்து, அவர்களுடன் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர முறையில் இணைந்து, இலங்கையில் வாழும் இலங்கைக்குப் பல்வகைகளில் வர்த்தக தொழில் உயர்ச்சிகளைத் தங்கள் வாழ்வால் உறுதிப்படுத்திய குடிமக்களாகிய முஸ்லீம் மலையக மக்களுடைய, குடியுரிமை வழியான சகல அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தி, உண்மையான மக்களாட்சி நாடாக இலங்கையை மாற்றுவதற்கான ஏற்புடைய அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்து, சட்டத்தின் ஆட்சியும் தண்டனை நீதியும் பரிகார நீதியும் இலங்கையின் குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யுங்கள். அதுவே இலங்கைத் தீவின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும். இதனை நெஞ்சிருத்தும் நாளாக 2022 அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் அமையட்டும்.