Tamil News
Home செய்திகள் பாராளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில், வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில், வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றம் இன்று (16) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ள நிலையில் அவ்வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்படி ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்துக்கு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். இதன்படி ஜனாதிபதி பதவி வெற்றிடங்கள் இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

எனினும், நேற்று (15) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் முன்னர் தீர்மானித்தபடி எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்வதாக சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி வேட்புமனுக்கள் கோரப்பட்டு அதன் பின்னர் 20ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்பிற்குள் எவ்வித இடையூறும் இன்றி இந்தச் செயற்பாட்டை துரிதமாக முன்னெடுக்க அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் வரலாற்றில் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன் இன்று பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version