மன்னாரில்  பொதுமக்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

கடற்படையினர் தாக்குதல்

மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் நேற்று இரவு   தொழிலுக்கு சென்று வந்த மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்களை  மேற்கொண்டுள்ளனர்.

கடற்படையினரின் தாக்குதலில் வங்காலை கிராமத்தைச் சார்ந்த கிராமசேவையாளர் ஒருவரும் மீன்பிடி தொழிலாளி ஒருவரும் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் மேலும் இரண்டு   பேர் கைது செய்யப்பட்டு மன்னார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உரிய அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருக்கிறது. கடற்படையினரின் சோதனைகளின்  பொழுது அவர்களுக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்கிவரும் இந்த நிலையில், மிலேச்சத்தனமான கொலைவெறி தாக்குதல்  தம் மீது  நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தாக்குதல் சம்பவங்களும் அருகில் உள்ள ஐஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் பொருத்தப்பட்டுளள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் உட்பட மீன்பிடி தொழிலாளிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தார்கள்

மேலும் தமக்கு துப்பாக்கியைக் காட்டி கடற்படையினர் அச்சுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் தொழிலுக்குச் சென்று திரும்பிய மீனவர்களை சிவில் உடையில் இருந்த இரு கடற்படையினர் தாக்கிய நிலையில், தொழிலுக்குச் சென்ற ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால்  கடற்படை முகாமுக்குச் சென்ற கிராம சேவையாளர், அப்பகுதி மீனவர்கள் படையினரிடம் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து மக்களுக்கும் கடற்படைக்கும் இடையில் முறுகல் நிலை உருவானதாக கூறப்படுகின்றது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021