நவாலி தேவாலைய இனப்படுகொலை- 25 ஆவது ஆண்டு நினைவு

சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமரணதுங்காவின் ஆட்சிக்காலத்தில் சிறீலங்கா வான்படையினர் நவாலி கிராமத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் 25 ஆவது ஆண்டு நினைவுதினம் ஜூலை 9ம் திகதி ஈழத்தமிழர்களால் நினைவு கூரப்பட்டது.

வரலாற்றில் இரத்தக்கறை படிந்த அந்த நாட்களின் துன்பங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. சந்திரிக்கா பதவியேற்ற பின்னர் குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கட்ட தமிழர் மீதான இனப்படுகொலை அதுவாகும்.

1995 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் நாள் அதிகாலை 5.40 மணியளவில் முன்நோக்கிப்பாய்தல் என்னும் படை நடவடிக்கையை சிறீலங்கா அரசு மேற்கொண்டிருந்தது. வலிகாமம் தென்மேற்கு, வலி.மேற்கு, வலி.தெற்கு, வலி.வடக்கு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கிய சரமாhரியாக எறிகணை வீச்சுக்களுடன் ஆரம்பமாகிய படை நடவடிக்கையானது. பெருமளவான மக்களை இழப்புக்களுக்கு மத்தியில் இடம்பெயர வைத்திருந்தது.

மாட்டு வண்டில்கள், துவிச்சக்கர வண்டிகள், லான்ட் மாஸ்ரர் வாகனங்கள், கால்நடையாக என மக்கள் கண்ணீருடனும், துன்பத்துடனும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனைக்கோட்டை, சங்கரத்தை, நவாலி, வழுக்கையாறு வெளி, ஆனைக்கோட்டை-மானிப்பாய் பிரதான வீதி ஆகிய வழிகளால் அவர்கள் இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தனர்.

ஆனால் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் வீதிகளை குறிவைத்து சிறீலங்கா படையினர் 120 மி.மீ மோட்டார் தாக்குதல்களை சரமாரியாக மேற்கொண்டதனால் இடம்பெயர்ந்த மக்களில் பலர் வீதிகளில் மரணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. வீதிக்கு வீதி சடலங்கள், காயமடைந்தவர்களை எடுத்துச்செல்லக்கூடிய அளவுக்கு வாகன வசதிகளோ, மருந்தகங்களோ வைத்தியசாலைகளோ இல்லை.

இவ்வாறு இடம்பெயர்ந்து வந்த மக்களில் பெருமளவானோர், நவாலி கதிர்காம முருகன் ஆலயத்திலும், நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் அதன் அருகில் இருந்த சென்ற் பீற்றர்ஸ் பாடசாலையிலும் பெருந்தொகையாகத் தஞ்சமடைந்ததிருந்தனர். அவர்களுக்கு உணவு, நீர் போன்ற அடிப்படை வசதிகளை ஊர்மக்கள் செய்துகொண்டிருந்த மாலை வேளையில் திடீரென வானில் தோன்றிய சிறீலங்கா வான்படையின் 3 புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் இரு ஆலயங்களிலும் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது 13 குண்டுகளை தொடர்ச்சியாக வீசின.Navaly q நவாலி தேவாலைய இனப்படுகொலை- 25 ஆவது ஆண்டு நினைவு

குண்டுகள் வீழந்த சிறிது நேரத்தில் கரும்புகை மூட்டத்துக்குள் அவலக்குரல்கள் அந்தப்பகுதியை அதிர வைத்தன. அதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்,  சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை அளிக்காத நிலையில் நீண்ட நேரம் இரத்தம் சிந்தி பலர் உயிர் இழந்ததை காணக்கூடியதாக இருந்தது.

அன்றைய தாக்குதலில் பொது மக்கள் சேவையில் நேரடியாகப் பங்கு கொண்ட வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர்களான நவாலி வடக்குப் பிரிவு கிராம அலுவலர் செல்வி.ஹேமலதா செல்வராஜா அவர்களும், சில்லாலைப் பிரிவு கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்களும் ஸ்தலத்தில் பலியான அரச சேவையாளர்கள்.

 

மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்ததை மறக்கமுடியாது.

இந்த தாக்குதலில் 13 குழந்தைகள் உட்பட 65 மக்களின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை பின்னர் 120 ஆக அதிகரித்ததாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அன்றைய களநிலை அதிகாரி டொமினிக் ஹென்றி தெரிவித்திருந்தார்.

கத்தோலிக்க தேவாலையத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 13 குழந்தைகள் அவர்களின் தாய்களில் கரங்களிலேயே இறந்ததுடன், வீசிய குண்டுகளில் ஒரு குண்டு தேவாலயத்தின் மீது நேரிடையாக வீழ்ந்திருந்தது. மக்களை ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றில் தஞ்சமடையுமாறு துண்டுப் பிரசுரங்களை வானில் இருந்து வீசிய சிறீலங்கா அரசு பின்னர் அவர்களை ஆலயங்களில் வைத்து படுகொலை செய்தது மனிதாபிமான விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.navali church boming நவாலி தேவாலைய இனப்படுகொலை- 25 ஆவது ஆண்டு நினைவு

அதேசயம், அன்றைய யாழ் பேராயர் தோமஸ் சவுந்தர்நாயகம் அடிகளாரும், தேவாலையங்கள் மற்றும் ஆலயங்கள் மீதான தாக்குதல்களை சந்திரிக்கா அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி சந்திரிக்காவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆனால் தனது இனப்படுகொலைகளை மறைப்பதற்காக அன்றைய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது சிறீலங்கா அரசு.

அரசுகள் மாறினாலும், தமிழ் இனத்தின் மீதான அவர்களின் கொள்கைகள் என்பது எப்போதும் இனவாதக் கொள்கையாகவே இருக்கும் என்பதற்கு சாட்சியாக அதிகளவான இனப்படுகொலை வடுக்களை தமிழீழம் தாங்கி நிற்கின்றது, அவற்றில் அழியாத ஒரு தடையமாக நவாலி இனப்படுகொiயும் அமைந்துள்ளது.

நன்றி: ம. இமானுவேல்