செவ்வாய்  கிரகத்தில் மீண்டும் ஆய்வுக்கு தயாராகும் நாசா

download 5 செவ்வாய்  கிரகத்தில் மீண்டும் ஆய்வுக்கு தயாராகும் நாசா

செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளை சேகரிக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், வரும் வாரங்களில் இரண்டாவது முயற்சியை மேற்கொள்வதற்கான பணிகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் திகதி நாசாவால் அனுப்பிவைக்கப்பட்ட   பெர்சவரன்ஸ் ரோவர், கடந்த பிப்ரவரி 18-ம் திகதி  செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசீரோ பள்ளத்தாக்கு பகுதியில் தரையிறங்கியது. 7 அடி நீளம் கொண்ட கை போன்ற ரோபோ கருவி மூலம், பாறையைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 30 மாதிரிகளுடன் 2030-ல் பூமிக்கு திரும்ப இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன்படி, மாதிரிகளை சேகரிக்கும் முதல் முயற்சி, கடந்த 6-ம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

ரோவரில் இருந்த கேமராக்கள் எடுத்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது, மாதிரிகள் வைக்கப்படும் குப்பிகள் காலியாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முயற்சியை வரும் வாரங்களில் மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிட்டாடெல்லே என்ற பகுதிக்கு ரோவர் கருவியை அனுப்பிவைக்க உள்ளனர்.

இந்த முறை மாதிரிகளை சேகரிப்பதை உறுதிப்படுத்துவதற்காக மாதிரி சேகரிக்கும் குப்பியின் புகைப்படத்தை ஆய்வுசெய்த பிறகே,  மாதிரிகளை பதப்படுத்தி, ரோவர் கருவியின் மையப்பகுதியில் வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவுசெய்துள்ளனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021