Home ஆய்வுகள் ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்

ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்

உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்: ஜேர்மானிய காலனீயவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு, இனப்படுகொலை என அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படுகொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் வழிவந்தவர்கள், நமீபிய அரசுக்கும் அந்த தென்னாபிரிக்க நாட்டின் முன்னைய ஆட்சியாளருக்குமிடையே ஒப்பமிடப்பட்ட உடன்படிக்கையை விமர்சித்திருக்கிறார்கள்.

‘முகத்தில் விழுந்த அடி’ என்று நமீபிய பொருண்மிய நிபுணரான சலோமோ ஹய் (Salomo Hei) இந்த ஒப்பந்தம் தொடர்பாகத் தெரிவித்தார். சலோமோவின் முன்னோர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் படுகொலைக்கு உள்ளாகியிருந்தார்கள்.

பேர்லீனின் (Berlin) கட்டுப்பாட்டில் 1884 இலிருந்து 1915 வரை இருந்த பிரதேசத்தில் நடந்தேறிய நிகழ்வுகள் தொடர்பாக தமது அரசுக்கும் ஜேர்மனிக்கும் இடையே 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் எழுதப்பட்ட உடன்படிக்கையை நமீபிய மக்களில் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

“உரிய விதத்தில் இந்த விடயம் கையாளப்படவில்லை” என்று தலைநகரான வின்ஹ_க்கில் ஏஎவ்பிக்கு அளித்த செவ்வியில் ஹய் தெரிவித்தார். “கொல்லப்பட்ட மனித உயிர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை.”

“நமீபியாவில் குடியேறியவர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான ஹெரேரோ (Herero) மற்றும் நாமா (Nama) மக்களுக்கு எதிராக 1904க்கும் 1908க்கும் இடையான காலப்பகுதியில் இனவழிப்பை முன்னெடுத்தார்கள்” என்று கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தது.

இனவழிப்பு

இனவழிப்பு’ என்ற பதத்தைப் பயன்படுத்துவது, நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக வருடக்கணக்காக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் எழுதப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையின் ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இனவழிப்பு என்று இந்தப் படுகொலைகளைச் சில வரலாற்று ஆசிரியர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

மேலும் நமீபியாவின் அபவிருத்தி நிதியாக 1.1 பில்லியன் யூரோக்களை (1.3 பில்லியன் டொலர்கள்) எதிர்வரும் முப்பது ஆண்டு காலப்பகுதியில் செலுத்துவதாக ஜேர்மனி வாக்களித்திருக்கிறது. ‘பரிகார நிதி’ என்ற பதத்தைப் பயன்படுத்துவதை ஜேர்மனி தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியமானதாகும். ‘நல்லிணக்க ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் சொற்பதங்களும் “பேச்சுவார்த்தை மேசைக்கு தாம் ஒருபோதும் அழைக்கப்படவில்லை” எனக்கூறும் ஹெரேரோ, நாமா குடிகளின் பிரதிநிதிகள் நடுவில் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.

“வானொலி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவே இந்த அறிவித்தலை நாம் தெரிந்து கொண்டோம்” என்று ஓவாஹெரேரோ இனவழிப்பு அமைப்பின் மேனாள் தலைவரான எஸ்தர் முயிஞ்சாங்குவே (Esther Muinjangue) தெரிவித்தார்.

 “இவ்விடயங்கள் பற்றி எங்களுடன் ஒருபோதுமே கலந்துரையாடப்படவில்லை” என்று கூறிய துணைச் சுகாதார அமைச்சராக இருக்கின்ற முயிஞ்சாங்குவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவத் தவறியதற்காக ஜேர்மனியைக் குற்றஞ்சாட்டினார்.

பாலியல் வன்புணர்வுகளும் படுகொலைகளும்

காலனீய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததற்காக ஜேர்மானிய ஏகாதிபத்தியப் படைகள் ஹெரேரோ மற்றும் நாமா மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்தார்கள்.

ஜேர்மானிய இராணுவ வீரர்கள் 1904ம் ஆண்டு, கிட்டத்தட்ட 80,000 ஹெரேரோ மக்களை ‘கலஹாரிப் பாலைவனம்’  (Kalahari Desert) என இப்போது அழைக்கப்படும் இடத்துக்குத் துரத்திச் சென்று அங்கு பெண்கள் மேல் பாலியல் வன்புணர்வை மேற்கொண்டதோடு, தாம் பிடித்தவர்களைப் படுகொலை செய்தார்கள்.

அந்த நிகழ்வு நடைபெற்றுச் சில மாதங்களுக்குப் பின்னர் இரண்டு குழுக்களைச் சேர்நதவர்கள் அனைவரையும் கொன்றொழிக்குமாறு ஜேர்மானிய இராணுவத்தின் கட்டளைத் தளபதி ஜெனரல் லோத்தார் வொன் துரோத்தா (Lothar von Trotha) கட்டளையிட்டார்.

ஆகக்குறைந்தது 60,000 ஹெரேரோ இனத்தவரும் 10,000 நாமா இனத்தவரும் அப்போது கொல்லப்பட்டார்கள். அத்துடன் மிக மோசமான சித்திரவதை முகாம்களுக்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்.

“மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் பின்னர் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, முக்கியமாக தமது சமூகங்களைச் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர வைத்ததற்காகவும் தமது வாழ்வாதாரங்களை அழித்தொழித்ததற்காகவும் ஜேர்மனி பொறுப்புக்கூற வேண்டும்” என்று கொல்லப்பட்டவர்களின் வழிவந்தவர்கள் கோருகிறார்கள்.

“எனது வாகனத்தில் எனது கிராமத்துக்கு நான் செல்லுகின்ற போது, தற்போது ஹெரேரோ மக்கள் வசம் இல்லாத பல்லாயிரம் ஹெக்டேயர்கள் பரப்பளவு கொண்ட வர்த்தகப் பண்ணைகளை நான் கடந்து செல்லுகிறேன்” என்று ஹய் தெரிவித்தார். நாமா, ஹெரேரோ மற்றும் ஏனைய நமீபிய மக்களுக்கு இடையே வருமானத்தில் பாரிய சமத்துவமின்மைகள் நீண்டகாலமாகக் காணப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்பிட்ட உடன்படிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்பது மட்டுமன்றி ஏற்கனவே உள்ள வரலாற்றுக் காயங்களுக்குள் ‘கத்தியை இன்னும்  ஆழமாக உட்செலுத்தியிருக்கிறது’ என்று ஹய் சுட்டிக்காட்டினார்.

உளவியல் ரீதியாக மக்கள் சந்தித்த தாக்கங்களுக்கு சமூகத் திட்டங்கள் எந்த விதத்திலும் உதவப்போவதில்லை என்று அவர் கூறினார். 1.1 யூரோக்களை வழங்குவதுடன் எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான குற்றங்களுக்காக வருத்தம் தெரிவிப்பது முடிந்துவிடுமா?

முயிஞ்சாங்குவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. அவரது பாட்டனார் ஒரு ஜேர்மானிய இராணுவ வீரனின் வன்புணர்வினால் பிறந்தவர். குறிப்பிட்ட உடன்படிக்கை தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார். “கொலை செய்யப்பட்ட உயிர்களையும், இழக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் நிலங்களுக்கான பெறுமதியையும் எவ்வாறு இவர்களால் ஈடுசெய்ய முடியும். இழந்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிக மிகக் குறைவானதும் அதே நேரத்தில் காலம் கடந்துவிட்ட ஒரு தீர்வுமாகும்.

“சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்ட ஒரு அடி” என வர்ணித்து உடன்படிக்கை தொடர்பான அறிவித்தலை அரசு வெளியிட்ட ஒரு சில மணித்தியாலங்களில், ஹெரேரோ மற்றும் நாமா இனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வின்ஹக்கில் முன்னெடுத்தார்கள்.

பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையைப் பேணத் தவறியதற்காக தமது கண்டனத்தை வெளியிட்ட செயற்பாட்டாளர்கள், மிகவும் பலவீனமான பொருண்மிய வளத்தைக் கொண்டிருக்கும் தமது அரசு மிகவும் குறைவான தொகையைத் தீர்வாகப் பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

 ‘காட்டிக்கொடுப்பு’ ‘எம்மைத் தனியே விடுங்கள்’ போன்ற சுலோகங்களைத் தாங்கிய பதாதைகளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.

 ‘அவமதிப்புக்குரிய தொகை’ என்று கூறி ஹெரேரோ மற்றும் நாமாக் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு குழு உடன்படிக்கையை நிராகரித்ததுடன் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கின்ற குறிப்பிட்ட உடன்படிக்கை, மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

சாதாரண நமீபிய குடிமக்களும் தமது கருத்துக்களைப் பதிவு செய்யக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடைமுறை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று வின்ஹ_க்கில் வதியும் ஹெரேரோ இனத்தைச் சார்ந்த கிளெமென்ரீன் கட்ஜிங்கிசியூவா (Clementine Katjingisiua) கூறினார்.

வேண்டிய பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமக்கிருக்கின்ற பொறுப்பை ஜேர்மனி, வேண்டுமென்றே தட்டிக்கழிப்பதாக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரையில் இனவழிப்பை ஏற்றுக்கொள்ளும் போது, அதற்கான பரிகாரம் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை வழங்கும் பொறுப்பு இனவழிப்பை மேற்கொண்ட அரசுக்கு உண்டு.

“அதனால் தான் மக்கள் மிக அதிகமாகக் கொந்தளிக்கிறார்கள்” என்று நமீபியப் பல்கலைக்கழகத்தில் ஓர் சட்டப் பேராசிரியராக இருக்கின்ற ஜோண் நக்கூட்டா (John Nakuta) தெளிவுபடுத்தினார்.

அபிவிருத்திக்காக வழங்கப்படும் உதவிக்கு சட்ட ரீதியிலான கடப்பாடு இல்லை. இந்தச் சட்டத்துக்குள் சிக்காமல் ஜேர்மனி தப்பிக்கொண்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காலனீய ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கப் போராடுகின்றவர்களுக்கு இந்த உடன்படிக்கை ஒரு நெருக்கடியான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது என்று ஜேர்மனி-நமீபிய ஆய்வாளரான ஹெனிங் மெல்பர் (Henning Melber) வெளிப்படுத்துகிறார்.

எப்பவோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விவாதத்திற்குள் ஜேர்மனி தனது அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது என்று நோடிக் ஆபிரிக்க அமைப்பில் ஒரு ஆய்வாளராக இருக்கின்ற மெல்பர் மேலும் தெரிவித்தார்.

உண்மையில் அது வரவேற்கப்படவேண்டிய ஒரு விடயம் தான். ஆனால் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தான் விரக்தியை ஏற்படுத்துகிறது.

இது மிகவும் காலங்கடந்த ஓர் தீர்வு. மேற்கொள்ளப்பட்ட அழிவுகளைப் பார்க்கும் போது வாக்களிக்கப்பட்ட தொகை மிகச்சொற்பமானது.

நன்றி: பிரான்ஸ்24.கொம் (france24.com)

Exit mobile version