ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது.

இரண்டரை ஆண்டுகாலம் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்த ஆளுநர் பிறகு அதை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.

இதை தமிழ்நாடு அரசு ஆட்சேபித்தது.

இது தொடர்பான வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக கூறி அவரை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில்,  இதே வழக்கில் சிறையில் உள்ள 6 பேரில் நளினி மற்றும் ரவிச்சந்திரன், தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்திற்கு 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்பதால், தாங்கள் விடுவிக்க முடியாது என்று கூறி நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tamil News