Home ஆய்வுகள் எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்

237 Views
எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்பாலநாதன் சதீஸ்

கண்ணீர் நிறைந்த கண்களுடன் மகனைத் தேடியலையும் ஓர் தாயின் பயணம்….

தன் பிள்ளைகளுக்காக வெளிநாடுகளிடம் நீதி கேட்டு, பன்னிரண்டு வருடங்கள் கடந்த நிலையில் தன் மகன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் காணாமல் போன தன் பிள்ளையை மீட்டெடுக்க கணவனை இழந்தும் 12 வருடங்களாகியும் நம்பிக்கையோடு போராடும் தாய்க்கு நீதி கிடைக்குமா? அவரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடத்தப்பட்டு வரும் போராட்டக் களத்தில், வவுனியா புதிய கோவில் குளத்தில் கணவனை இழந்த நிலையிலும் மனம் தளராது காணாமல் போன தன் மகனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் வசிப்பவர் தான் பத்மநாதன் தமிழ்ச்செல்வி.

இவர் தன் மகனுக்காக போகாத போராட்டங்கள் இல்லை. காணாமல் போனவர்களுக்கான போராட்டம் எங்கு நடந்தாலும், கையில் தன் காணாமல் போன மகனின் புகைப்படத்தை ஏந்தியவாறு போராட்டக் களத்தில் ஏக்கத்துடன் அமர்ந்திருப்பார். நோய்கள் தீண்டி உடல் பலமிழந்தாலும், தள்ளாடும் வயதிலே ஆற அமர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்திலே காணாமல் போன தன் மகனைத் தேடிக் கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன், தன் பசி மறந்து மன உறுதியோடு இருப்பார்.

தன் மகன் எங்கேயோ இருக்கின்றான்; என்றாவது ஒரு நாள் வந்துவிடுவான் என்ற நம்
பிக்கையில் போராட்டக் களத்திற்கு வரும் வெளிநாட்டுக்காரர்களிடமும், அனுதாபம் கூறவரும் அரசியல் தலமைகளிடமும் என் மகனை எப்படியாவது மீட்டுத் தாருங்கள், என் மகனை நான் இறப்பதற்குள் பார்த்துவிட வேண்டும் என சிரம் தாழ்த்தி கண்ணீர்  நிறைந்த கண்களுடன் கதறி அழுவார். கணவனைப் பிரிந்த துக்கம் ஒருபுறம், இரண்டாவது மகனை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற ரணங்கள் இன்னொருபுறம் இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டிக் காணாமல் போன தன் மூத்த மகனை தேடிக் கண்டு பிடித்து விட வேண்டும் என்ற ஒரு அவாவில் குடும்பச் சுமைகளையும் ஒதுக்கிவிட்டு, சோக சுமைகளையும் இன்னொரு புறம் தள்ளி விட்டு என் மகன் வருவான் என்று காத்திருக்கும் அந்த தாயின் நிலையை என்ன வென்று வார்த்தைகளால் சொல்வது?

ஒரு பிள்ளையைத் தொலைத்த தாய் படுகின்ற வேதனைகளும், கஸ்டங்களும் இன்னொரு தாயால் தான் நிச்சயம் உணர முடியும். கணவனையும் இழந்து பிள்ளைகளையும் இழந்து தவிக்கும் அந்த அம்மாவின் நிலையை வேறு யாருமே புரிந்து கொள்ளப்போவதில்லை.

அவர்  பேசும் போது,

 “25 வருடங்களாக கணவனைப் பிரிந்து கடைசி மகனுடன் செக்கட்டிபுலவு புதிய கோவில்குளம் பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றேன்.

ஆரம்பத்தில் கிளிநொச்சி உதயநகரில் வசித்து வந்தேன். பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று, முகாம் ஒன்றில் தங்கியிருந்து, ஒரு கடையிலே வேலை செய்து எனது வாழ்க்கையை நடாத்தி வந்தேன். அங்கு இருக்கும் போது சீற் நிறுவனத்தால் செக்கட்டிப்புலவு புதிய கோவில் குளப்பகுதியில் காணி ஒன்று வழங்கப்பட்டு அதிலே வீடு கட்டித் தந்தார்கள். அந்த வீட்டில்தான் இப்பவும் இருக்கிறம்.

எனது காணாமல் போன மூத்த மகன் பத்மநாதன் ரவிசங்கர். இவர் உறவினரைப் பார்வையிடுவதற்காக அவரது நண்பர்களோட கிளிநொச்சி உதயநகருக்கு 1995 ஆம் ஆண்டு போனவர். பின்னர் யுத்தம் காரணமாக பாதை தடைப்பட்ட நிலையில் வராமால் அங்கயே நிண்டிட்டார். அங்கிருந்து திரும்பி வரமுடியவில்லை.

இந்நிலையில் எனது இரண்டாவது மகன் பத்மநாதன் டனசங்கர், இவர் செக்கடிப்புலவு புதிய கோவில்குளத்தில் என்னுடன் தங்கியிருந்து கொழும்பிற்கு வேலைக்கு சென்று விடுமுறையில் வீட்டுக்கு வருவார். அப்படி விடுமுறையில் வந்து வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு போன போது அங்கு வந்த இனந்தெரியாத வர்கள் எனது மகனையும், இன்னொருவரையும் 2007, ஜனவர் 06ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

பின்னர் என் மூத்த மகன் கிளிநொச்சியில் இருந்து வரமுடியாததால் தகப்பன் வழி உறவினரோடு இருக்கவேண்டிய நிலை. இந்நிலையில் வன்னியில் யுத்தம் தீவிரமடைந்தது. இதனால் இறுதி யுத்தம் நடந்த போது 2009 ஆண்டு பங்குனி மாதம் 23 திகதி பொக்கணையிலிருந்து அவரும் காணாமல் போயுள்ளார்.

 

காணாமல் போயிட்டான் என்று தகவல் தெரிஞ்ச நாள் தொடங்கி இன்று வரை நான் என் மகனைத் தேடிப் போகாத இடமில்லை. பொலிஸாரிடமும் முறைப்பாடு கொடுத்திருக்கிறன். என் பிள்ளைய கண்டுபிடிச்சு என்னட்ட ஒப்படைக்கச் சொல்லி எத்தனையோ அரசியல் தலமைகளிட்ட கெஞ்சியிருக்கிறன். ஆனால் யாருமே என் நிலையை கண்டு கொள்ளவில்லை. இருந்தும் என் மகன் என்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு காணாமல்போன பிள்ளைகளை மீட்க நடக்கும் போராட்டங்களுக்கும் போறனான். என் மகன் இருக்கிறான் அம்மாவை தேடி வருவான்.”…

என கணவனைப் பிரிந்து ஒரு மகனை இழந்து அடுத்த மகனையும் தொலைத்த வேதனையுடன் இருக்கும் அந்த அம்மாவிடமிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் தன் மகன் கிடைத்துவிட மாட்டானா? என்ற ஏக்கம் கலந்த ஒரு எதிர்பார்ப்பும் நிரம்பியிருந்தது.

தீர்வினை பெற்றுத் தருவதாக அரசியல் இலாபம் கருதி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டக் களத்திற்கு அனுதாபம் தெரிவிக்க செல்லும் அரசியல் தலமைகளே! உங்களுக்கான பணி ஆறுதல் சொல்வது மட்டுமல்ல, ஒவ்வொரு மக்களுக்கும் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுப்பதுதான் உங்கள் கடமை. நீங்கள் ஆறுதல் மட்டும் சொல்லிவிட்டு போனால், அவர்களுக்கான நீதியை யார் பெற்றுக் கொடுப்பது? பிள்ளையை தொலைத்த வலி பெற்றவளுக்குத் தான் தெரியும். அதே போல உங்களுக்கு இந்நிலை வரும் போது தான் அந்தத் தாய் பட்ட வலி உங்களுக்குப் புரியும். அதுவரை புரியப் போவதில்லை.

பத்மநாதன் தமிழ்செல்வி

செக்கட்டிபுலவு, புதிய கோவில்குளம்.

கா. போ. மகன் : பத்மநாதன் ரவி சங்கர்

சுட்டு மரணமான மகன் : பத்மநாதன் டனசங்கர்

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version