Home ஆய்வுகள் நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்புபாலநாதன் சதீஸ்

தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காணாமல் போன தன் இரு பிள்ளைகளுக்கான நீதிக்காக போராடும் தாய், காணாமல் போன தன் தந்தையை தேடும் பிஞ்சு மகனின் ஏக்கங்களுக்கு  நீதி  கிடைக்குமா? அவர்களின்  எதிர்பார்ப்பு தீருமா?

IMG 20210527 100725 நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்ட களத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வசிப்பவர்தான் அரியரத்தினம் அன்னலட்சுமி.

இவர் போராட்டக் களத்தில்  காணாமல் போன மகன்களின் புகைப்படத்தை  தன் கையில் வைத்திருந்தவாறு ஏக்கத்துடன் எப்போதும் அமர்ந்திருப்பார். சுருங்கிய நெற்றி அதில் ஒரு திருநீற்று பூச்சும் இருக்கும். முதுமையில் உடல் பலமிழந்தாலும், காணாமல்போன   தன் மகன்களை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனும். யாரிடமாவது முறையிட்டால் தன் மகன்கள் வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இரவு பகலாக  மன வைராக்கியத்தோடு  அந்த போராட்ட  களத்தில் காத்திருக்கின்றார்.

இந்த தாய் தன்  பிள்ளைக்காகவும், காணாமல் போன மகனின் பிள்ளையின் எதிர்கால வாழ்வுக்காகவும் நேரகாலம் பார்க்காமல் தன் பேரபிள்ளையினை தனியாக வீட்டில் விட்டு, காணாமல் போன மகன்களை  எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நடாத்தப்படும் எல்லா  போராட்டங்களுக்கும்  இன்று வரை சென்று கொண்டு இருக்கிறார்.

போராட்டக் களங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க வரும் அதிகாரம் மிக்கவர்களிடமும், இவர்களை வைத்து அரசியல்  ஆதாயம் தேட வருபர்களிடமும்  தன் பிள்ளையை மீட்டு தரச்சொல்லி கெஞ்சுவார். அன்றில் இருந்து இன்றுவரை தன் தூக்கத்தை தொலைத்து தன் மகன்களுக்காக கலங்கிய விழிகளுடன் காத்திருக்கின்றார்.  இந்த தாயின் நிலையை யாருமே புரிந்து கொள்ளப்போவதில்லை.

“என்ர இரு பிள்ளைகளில் ஒருவர்  மூத்த மகன் ஜீவரட்ணம் 1990.09.02 ஆம் திகதி காட்டிற்கு தடிவெட்ட போன நிலையில் ஓமந்தையில் காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அந்த கவலை ஆற முன்பே என்ர இளைய மகன் கோபிநாத்  வேலைக்காக வெளியில்  போனவன் இரவு வேளை வீரபுரத்திலுள்ள அவனது வீட்டுக்கு சாப்பிட திரும்பிய வேளை 2008.06.25 அன்று  வெள்ளை வானில்  வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி வலுக் கட்டாயமாக தூக்கி சென்றுள்ளார்கள்.  இதனை அறிந்த நான் என் மகன் கடத்தி செல்லப்பட்ட அடுத்த நாள்  காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு (2008.06.26) UNHER ICRC CARE  நிறுவனம், ஈ.பி.டி.பி அலுவலகத்திடம் முறைப்பாடு செய்து விட்டு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அலுவலகத்தில் போய் மகனைக் காணவில்லை என்றும் கூறினேன்.

என் மகனை தேடி ஓவ்வொரு வருடமும்,  ஒவ்வொரு மாதமும் புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையிடம் போய்க் கேட்பேன். என் மகனை விடச் சொல்லி. அவர்கள் வீட்டுக்கும் வருவார்கள் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் என் மகன்களை  கண்டுபிடித்து தருவதாக கூறி விளக்கமெடுக்க வருவார்கள். ஆனாலும் இதுவரை எனக்கான நீதி கிடைக்கவே இல்லை.

என் மகன் இல்லாமல்  என்னாலும் என் பேரப்பிள்ளையாலும் தனித்திருக்க முடியாது. எமக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்ர மகனின் பிள்ளைக்கு தற்போது தாயும் இல்லை. வசதிகள் இல்லாமல் என்ர பேரபிள்ளையால் பாடசாலை கல்வியை  கூட தொடரமுடியவில்லை. என் பேரபிள்ளையை படிக்க வைக்கும் அளவிற்கு பொருளாதாரம்  என்னிடம் இல்லை. ஏனெனில் என் கணவரும் தற்போது உயிருடன் இல்லை. 2017.06.26ஆம் திகதி காணாமல் போன பிள்ளைகளை தேடியதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு உடல் பலவீனமடைந்து  இறந்துவிட்டார்.

என் இரண்டு மகன்களையும் இந்த அரசு கடத்தி விட்டது. இரண்டு பிள்ளைகளில்  ஒருவரையாவது விடச்சொல்லி இந்த அரசிடம் கேட்டிருக்கின்றேன். ஒரு முறையாவது என் பிள்ளைகளை காண்பிக்குமாறும் கேட்டிருக்கின்றேன். என் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இனியாவது சிறையில் இருக்கும் என் பிள்ளைகளையும், ஏனையவர்களின் பிள்ளைகளையும்  நான் இறந்து போவதற்குள் விடுவிக்கவேண்டும்.

எம் காணாமல் போன உறவுகளை மீட்பதற்கு கடவுளுடனும், இந்த அரசுடனும் நாம் போராடி கொண்டிருக்கின்றோம். எம் நிலையறிந்து வெளிநாட்டு அரசுகளே எமக்கு நீதியினை பெற்று தரவேண்டும். அவர்கள் எம் பிள்ளைகளை மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையிலையே இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.”

என தன்  இரு மகன்களை தொலைத்த அந்த தாயிடம் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும்  வலி நிறைந்ததாகவும்,   ஏக்கத்துடன் கலந்த ஒரு எதிர்பார்ப்பும் நிரம்பியிருந்தது.

இன்றைய ஆட்சியாளர்களே உங்கள் வீட்டில் இப்படி ஒரு இழப்பு வரும் வரை இதன் வலி உங்களுக்கு புரியப்போவதில்லை. நீங்கள் இனவாதம் பேசுவதற்கும், பணத்தாசை பிடித்து அலையவும்  எம் உறவுகளின் உணர்வுகளை  இரையாக்காதீர்கள்.  காணாமல் போன எம் உறவுகளுக்கு நீதியை பெற்று கொடுங்கள். இன்று தம் பிள்ளைகளை தொலைத்துவிட்டு துடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் கண்ணீரும்,    ஒருநாள் உங்களுக்கு கூரிய ஆயுதமாய் மாறும்.

தந்தை மரணம் : கந்தையா   அரியரத்தினம்

மரணம் : 2017.06.26

மூத்தமகன் : அரியரத்தினம்     ஜீவரத்தினம்

காணாமல் போன திகதி :   1990.09.02

இளையமகன் : அரியரத்தினம்   கோபிநாத்

காணாமல் போன திகதி :   2008.06.25

Exit mobile version