முத்துக்குமாரின் நினைவு நாளும் அரசியல் சாசன திருத்தமும்- தோழர் பாஸ்கர்

மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: ஈழத்தமிழர்களின்  படுகொலையை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட கு ...

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதிமூன்று ஆண்டுகள் கழிந்து பதினான்காவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு கொந்தளிப்பு அப்போது நிறைவேறினாலும், அவரது நீண்டகால நோக்கம் நிறைவேறவே இல்லை.

அவ்வாறு நிறைவேறாது என்பதற்கான தடயங்கள் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ஒட்டியே நன்கு தெரிந்து விட்டது.  இன்றுவரையிலும் அவ்வாறே. முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தினால் முக்கியமான இரு சாதகங்கள் மட்டும் ஏற்பட்டன.

முதலாவது

தமிழகத்தில் ஈழச் சிக்கல் மேலும் முன்னெப்போதும் விட பரவலான கவனத்தைப் பெற்றது.

இரண்டாவது

எண்ணற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் அரசியல் அரங்கிற்கு வந்தனர்.

ஆனால் இவ்வாறு வந்தோரில் ஏகப்பெரும்பான்மையினரை  திடப்படுத்தாமல் இருக்கவே செய்தன முதன்மையான ஈழ ஆதரவு அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகமானது ஈழ ஆதரவு அமைப்புகள் புதியவை தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. இத்தகைய புதிய அமைப்புகள் ஈழச் சிக்கலுக்காகவே முதன்மையாகச் செயற்படுவதற்கு தோன்றின.

(தியாகி முத்துக்குமாரின் கடிதம்)

முத்துக்குமார் கடிதம்

ஆனால் இவை முள்ளிவாய்க்காலின் முதன்மையான போர் குற்றவாளியான இந்திய விரிவாதிக்க அரசை அவ்வாறு அம்பலப்படுத்துவதற்கு தயாராய் இல்லாத அரசியல் கண்ணோட்டத்தில் இருக்கின்றன. இப்பொழுதோ இலங்கையில் இந்திய விரிவாதிக்க அரசின் கூட்டோடு முள்ளிவாய்க்காலை அரங்கேற்றிய கும்பலே மீண்டும் அங்கு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் ஆதரவோடு. ஈழச் சிக்கலுக்கான முதன்மையான பழைய மற்றும் புதிய அமைப்புகள் இதை தடுப்பதற்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

அதற்கு இரு காரணங்கள் மட்டும் இருக்கக்கூடும்.

முதலாவது காரணம் என்னவெனில்

இத்தகைய ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள் தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு முகங்கொடுப்பதிலேயே சிக்கியிருக்கக்கூடும்.

இரண்டாவது காரணம் என்னவெனில்

முள்ளிவாய்க்கால் போர் குற்றச் செயல் கும்பலான இராஜபக்ச கும்பலானது  இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் சீன சாய்வு ஆட்சியை நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராய் இந்தியா தலையிடும் எனும் அனுமானம் ஆகும். எவ்வாறாயினும் இந்த அனுமானம் தவறே.

அதை நிரூபித்தது கோத்தபயவின் ஆட்சிக்காலம்.

ரணிலின் ஆட்சிக்காலமும் அதையே நிரூபித்துகொண்டிருக்கிறது.

இந்தியா தலையிட்டாலும் ஈழம் கிடைக்காது. இந்தியாதான் முதன்மைப் போர் குற்றவாளியாக இருக்கும் நிலையில் அதை எதிரியாய் வரையறுக்காத/அம்பலப்படுத்தாத நிலையில் ஈழம் அறவே கிடைக்காது. இதை இன்னமும் அங்கீகரிக்கத் தயாராய் இல்லை ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய கொந்தளிப்பு வழங்கிய வாய்ப்பிலும் அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதே நிலைமைதான்.  இந்நிலையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய உணர்வை தட்டியெழுப்பினால்தான் அத்தியாகத்தின் நோக்கத்தை நோக்கி நகருவதற்கு முடியும். அதற்கு“யார் உண்மையான தமிழ் தேசியவாதிகள்/எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள்…..”என்பதை சரியாக வரையறுப்பதும் அவசியம். இவ்வகைப்பாடுகளில் ‘பிழைப்புவாதிகள்’ என்பதையும் சேர்க்கவேண்டும்.

ஈழ ஆதரவு அமைப்புகள் இடையே  இந்த விஷயத்தில் தெளிவு இல்லை. இத்தகைய தெளிவின்மையானது பொத்தாம்பொதுவாக இல்லாமல் குறிப்பாகவும் இருக்கிறது.
அது எதிரிகளையும் துரோகிகளையும் பிரித்தறியாத மையவாதமாகவும்

ஆளும் வர்க்கத்தினர் இடையேயான முரண்பாடுகளை பிரித்தறியாத மையவாதமாகவும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தையும் அவர்களை எதிர்க்கும் சிங்கள மக்களையும் வேறுபடுத்தாத மையவாதமாகவும் வெளிப்படுகிறது.

இம்மூன்று விதமான மையவாதங்களில் இரண்டாவது மையவாதமும் மூன்றாவது மையவாதமும் கோத்தபயவை விரட்டியடித்த போராட்டத்தை அணுகியதில் வெளிப்பட்டன.

அதனால்தான் அப்போராட்டத்தின்போது ஈழத்தின் ஆர்வலர்களும் தமிழ் நாட்டின் ஈழ ஆர்வலர்களும் பார்வையாளராகவோ மூன்றாவது நபராகவோ தம்மை குறுக்கிக்கொண்டனர்.

‘நாங்கள் இத்துணை ஆண்டுகளாக கஷ்டப்படும்போது நீங்கள்(சிங்கள மக்கள்) வேடிக்கைதானே பார்த்தீர்கள். இப்பொழுது தெரிகிறதா? இப்பொழுதுதான் புரிகிறதா? நன்கு அனுபவியுங்கள்’ என்ற மனநிலையில்தான் அப்போராட்டத்தின்போது இருந்தனர்.

கோத்தபயவா? ரணிலா என்பதில் இரண்டும் ஒன்றேபோல் புரிந்துகொள்வதில் இரண்டாம் மையவாதம் வெளிப்பட்டது. கோட்டாபய பாசிசவாதி என்றோ ரணிலோ கபடவேடமிடும் பாராளுமன்ற ஜனநாயகவாதி என்றோ வேறுபடுத்தி பார்க்கும் பார்வையற்ற மையவாதம் வெளிப்பட்டது.

ரணிலை பயன்படுத்தி இராஜபக்சே கும்பலை போர் குற்றச் செயலுக்கான தண்டனைக்கு உள்ளாக்குவதற்கு மேற்கு ஏகாதிபத்தியங்களை பயன்படுத்தும் பார்வையும் அப்போராட்டத்தின்போது அறவே இல்லாமல் இருந்தது.

ஆனால் இந்தியாவின் மீது நம்பிக்கையை வைத்து ஏமாறுவது மட்டுமன்றி மீண்டும் மீண்டும் பல முள்ளிவாய்க்கால்களுக்கு ஆளாவதற்கு எப்போதும் போல் இப்போதும் தயாராகவே இருக்கின்றன. அதனால்தான் இந்துத்துவ அமைப்புகள் ஈழத்தில் காலூன்ற அனுமதிக்கின்றன ஈழத்தின் ஈழ அமைப்புகள்.

ஈழத்தில் இந்துத்துவ அமைப்புகள் காலூன்றுவது குறித்து பாராமுகமாகவே இருக்கின்றன தமிழ் நாட்டின் முதன்மையான ஈழ ஆதரவு அமைப்புகள்.
ஈழத்தில் இந்துத்துவ அமைப்புகள் காலூன்றியாவது தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் எனும் நப்பாசையில் மக்களையும் ஏமாற்றுகிறார்கள்.

இப்பொழுதுதான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் பதிமூன்றாவது அரசியல் சாசனத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அங்கு சென்று பேசுகிறார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இல்லாமல் ஆக்கிய சிங்களப் பேரினவாதப் பாசிச நடவடிக்கையை வேடிக்கை பார்த்த இந்திய விரிவாதிக்க முள்ளிவாய்க்கால் காரணகர்த்தா கும்பலானது இப்பொழுது இவ்வாறு பசப்புகிறது.

இந்தியாவில் ஈழ அகதிகளை இன்னமும் நட்டாற்றில் வைத்துக்கொள்வதோடு மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்களுக்கு இந்திய் குடியுரிமையை மறுத்துவிட்டு இத்தகைய மாய்மாலத்தை காட்டுகிறது.

ரணிலையும் தனி ஈழமாக மலரா வண்ணம் ஈழச் சிக்கலையும் தன் கையில் வைத்துக்கொள்வதற்கே பதிமூன்றாவது அரசியல் சாசனத் திருத்த அமலாக்கம் என்று இலங்கையில் ஜெய் சங்கர் பேசுகிறார்.

அவர் அங்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்தான் இரண்டிலும் இதை பிப்ரவரி மாதத்தில் செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். ரணிலும் இந்தியாவும் பேசிவைத்தே இது நடப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பதிமூன்றாம் அரசியல் சாசனத் திருத்தம் இப்போதைக்கு பெயரளவுக்கு செய்தால் ரணில் மீண்டும் அமருவார் எனவும் அதனை வைத்து இலங்கையை அதன் வாயிலாக ஈழச் சிக்கலை தன் கையில் வைத்துக்கொள்வதோடு போர் குற்றத் தண்டனையிலிருந்து இராஜபக்சே கும்பலை காப்பாற்றுவதோடு தன்னையும் அத்தகைய தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று கணக்கு போடுகிறது இந்திய விரிவாதிக்க கும்பல்.

இந்த விரிவாதிக்க கும்பலின் அடிவருடியாக இருக்கும் நப்பாசையினால்தான்  ஈழ ஆதரவாளர்கள் இதையெல்லாம் பேசாமல் இருக்கின்றனர். இத்தகைய நிலைமையில்
முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது.