குரங்கு காய்ச்சலைவிட பிறழ்வடைந்த கோவிட்டே ஆபத்தானது – பைசர் நிறுவனத்தின் தலைவர்

பிறழ்வடைந்த கோவிட்டே ஆபத்தானது

குரங்கு காய்ச்சல் நோயானது ஆபிரிக்க நாடுகளை தவிர ஏனைய 21 நாடுகளில் வேகமாக பரவி வருகின்றபோதும், தற்போதைய தடுப்பு மருந்துகளை செயலற்றதாக்கும் கோவிட்-19 வைரசின் புதிய வடிவமே மிகவும் ஆபத்தானது என அமெரிக்காவை தளமாகக் கொண்ட பைசர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் அல்பேட் போர்லா தெரிவித்துள்ளார்.

கோவிட் நோயை போல குரங்கு காய்ச்சல் இலகுவில் விரைவாக பரவும் நோயல்ல, எனினும் நாம் எதிர்பார்க்காத சம்பவமாக அது பல நாடுகளில் பரவியுள்ளது. அதற்கான தடுப்பு மருந்துகள் ஏற்கனவே உள்ளன. எனவே அதனை கட்டுப்படுத்துவது சுலபமானது.

ஆனால் கோவிட்-19 தான் தற்போதும் எமக்கு சவாலாக உள்ள விடயம். புதிய வடிவங்கள் தற்போதைய தடுப்பு மருந்துகளை செயலற்றதாக்குவதால் நாம் முற்றாக இந்த நெருக்கடியில் இருந்து மீளவில்லை.

உலகில் உள்ள 45 வறிய நாடுகளுக்கு தயாரிப்பு விலையிலேயே தடுப்பு மருந்துகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். கோவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை நாமே முதலில் தயாரித்திருந்தோம்.

புற்றுநோய் மற்றும் தொற்று நோய்களுக்கான 23 வகையான மருந்துப் பொருட்களை எமது நிறுவனம் இலாபங்கள் இன்றி விற்பனை செய்து வருகின்றது. அதனை நாம் உதவி நோக்கத்துடன் செய்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News