உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் – களுத்துறை மாவட்ட செயற்குழு மனோ கணேசனிடம் கோரிக்கை

218964325 10215598078184192 6604043298579124297 n உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் - களுத்துறை மாவட்ட செயற்குழு மனோ கணேசனிடம் கோரிக்கை

“தேர்தல் முறைமை பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நீங்கள் இருக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கு நியாயம் தரும் தேர்தல் முறைமைக்காக நீங்கள் போராடுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனினும், தேர்தல் முறைமை எதுவாக இருந்தாலும், எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலில் நமது கட்சி களுத்துறை மாவட்டத்தில் தனித்தே போட்டியிட வேண்டும்” என களுத்துறை மாவட்ட ஜனநாயக மக்கள் முன்னணி செயற்குழு, கட்சி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

கொழும்பு தெற்கு பாமன்கடை அலுவலகத்தில், மனோ கணேசன்  தலைமையில் களுத்துறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் மரியதாசன் அன்டனி ஜெயசீலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது,  “தேர்தல் முறைமை எதுவாக இருந்தாலும், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், நமது கட்சி களுத்துறை மாவட்டத்தில் ஏணி சின்னத்தில் தனித்தே போட்டியிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மனோ கணேசன் பதில் கருத்து தெரிவிக்கையில், களுத்துறை மாவட்ட பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் எமக்குரிய பிரதிநிதி த்துவங்களை பெறுவதற்கு தனித்து போட்டியிடுவதே சரியான வழி.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கின்ற பிரதான சிறுபான்மை கட்சி என்ற முறையில் நாம் தேர்தலில் போட்டியிடும் முறைமை தொடர்பில் உரிய வேளையில் உரிய முடிவை தமிழ் முற்போக்கு கூட்டணியாக எடுப்போம்.

நாம் சேர்ந்தும் போட்டியிடலாம். தனித்தும் போட்டியிடலாம். எல்லா கதவு சாவிகளையும் கையில் வைத்திருப்போம். உரிய வேளையில் உரிய கதவை திறப்போம்.

எவருக்கும் வாக்குகளை பெற்றுக் கொடுத்து விட்டு வெளியிலே சும்மா நிற்கும் வாக்கு வங்கியாக நாம் இனி இருக்க மாட்டோம். எமது மக்களின் நியாயமான பிரதிநிதித் துவங்களை பெறுவதே எமது நோக்கமாகும்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021