Tamil News
Home செய்திகள் தொழில்வேறு, இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை முரளிதரன் உணர வேண்டும்- மனோ கணேசன்

தொழில்வேறு, இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை முரளிதரன் உணர வேண்டும்- மனோ கணேசன்

”முரளிதரன் இங்கு வந்து இடைத்தரகர் வேலை செய்ய முயலக்கூடாது. இடைத்தரகர் வேலை செய்ய முயலக்கூடாது. தனது தொழில் வியாபாரம் வேறு, எமது இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை இவர் உணர வேண்டும்” விமல் வீரவன்சவை ஆதரித்து முரளிதரன் பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே மனோ மனோகணேசன் மேற்கண்ட வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கொழும்பில் தமிழர்கள், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிகட் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகிறார். இவருக்கு அரசியல் புத்தி மட்டு என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும் என்பதால், இவருக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.

முரளிதரனுடன் கிரிக்கட் அணியில் ஒன்றாய் விளையாடிய சக வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோர் சமீபத்தில் அநியாயமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தபோது முழு நாடுமே அவர்களுக்காக குரல் கொடுத்தது. அவ்வேளையில் தன் நண்பர்களுக்காக வாயை திறக்காத இவர், இப்போது தன் பிழைப்புக்காக அரசியல்வாதி விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். இதிலிருந்தே இவர் யார் என்பது ஊர்ஜிதமாயுள்ளது.

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடமும், என்னிடமும் தமிழ் சமூகங்களை ஒப்படைக்க முடியாது எனக்கூறும் விமல் வீரவன்சவிடம், தமிழர்களுக்கான என்ன மாற்றுத் தீர்வுத் திட்டம் இருக்கிறது என்பதை கேட்டு சொல்ல வேண்டும். அதற்கு பிறகு அவருக்காக இவர் வாக்கு கோரலாம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தமிழ், முஸ்லிம் வாக்குகள் வேண்டாம் என்று சொன்னவர் இந்த விமல் வீரவன்ச. கொழும்பு மாவட்டத்தில் இவர்களது கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழ், முஸ்லிம் வேட்பாளரும் இல்லை. இதுதான் உண்மை. இந்நிலையில் இவர் எதற்காக இன்று தமிழ் வாக்குகளை கோருகிறார்?

சஜித் பிரேமதாசவை விட, கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற இவர் துடியாய் துடிப்பது எனக்கு தெரியும். இந்த ஒரே நோக்கத்திற்காகத் தான், தமிழர்களின் மீது திடீர் பாசம் விமல் வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய இவர் முயல்கிறார். இதற்குத்தான் முரளிதரன் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார்.

கொழும்பில் எம்பியாக தெரிவு செய்யப்படும் நான், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையிலும் வாழும் தமிழருக்காக ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் இருப்புக்கு காவல்காரனாக நான் ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் என் பணி, தலைநகரில் மாகாணசபை மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என்று ஒரு தமிழ் தலைமை வலையமைப்பையே உருவாக்கியுள்ள என் பணி, இங்கு வாழும் தமிழர்களுக்கு தெரியும்.

இது தனக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு முரளிதரன் விமல் வீரவன்சவுக்கு எடுத்து கூற வேண்டும். அதைவிடுத்து இங்கே வந்து இடைத்தரகர் வேலை செய்ய முயலக்கூடாது. தனது தொழில் வியாபாரம் வேறு, எமது இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை இவர் உணர வேண்டும்.

முஸ்லிம் மக்களிடம் புரியாணி கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. அதேபோல் தமிழ் மக்களிடம் பொன்னாடைகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. இதையும் முரளிதரன் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version