மட்டு மாநகரசபையின் பதில் ஊழியர் ஒருவர் இடைநிறுத்தம்- ஊழியர்கள் போராட்டம்

மட்டு மாநகரசபையின் பதில் ஊழியர்

மட்டு மாநகரசபையின் பதில் ஊழியர் ஒருவரின் நியமனம் எவ்வித அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டதாகவும், அவரின் நியமனம் புதுப்பிப்பதற்கான காலத்தில் இருந்து ஒரு மாதகாலம் சேவையில் ஈடுபட்டிருந்தும் அவருக்கான சம்பளம் வழங்கப்படாமல் நிறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அவரின் சம்பளம் மற்றும் பதில் நியமனக் கடிதம் வழங்குமாறு கோரியும் மாநகர பதில் ஊழியர்களில் சாரதிகளாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் பதில் சுகாதார ஊழியர்கள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்ட ஊழியர்கள் சிலர் தற்காலிக வாகன சாரதிகளாகக் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனங்கள் ஒவ்வொரு ஆறுமாத காலங்களுக்கும் புதுப்பிக்கப்படும்.

அவ்வாறு இருக்கையில் ஒரு ஊழியரின் நியமனம் மாத்திரம் முதல்வரால் புதுப்பிக்கப்படவில்லை என்றும், அவரின் நியமனம் புதுப்பிக்கப்படும் என்ற ரீதியில் அவர் கடமையாற்றிய ஒரு மாத கால சம்பளமும் வழங்கப்படவில்லை எனவும் கோரியே இப்பணிப்பகிஸ்கரிப்பு இன்று மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் மாநகர முதல்வரிடம் வினவிய போது,

IMG 20211006 091210 மட்டு மாநகரசபையின் பதில் ஊழியர் ஒருவர் இடைநிறுத்தம்- ஊழியர்கள் போராட்டம்

குறித்த ஊழியர் பதில் சுகாதார ஊழியர் என்ற நியமனத்திலேயே நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது தனது நியமனத்தைப் புதுப்பிப்பதற்காக பதில் சாரதி நியமனம் என்ற அடிப்படையில் கோருகின்றார். இதற்கு எம்மால் அனுமதி வழங்க முடியாது. இது உள்ளுராட்சி திணைக்களத்தில் இருந்து அனுமதி பெறப்பட வேண்டும். அத்துடன் குறித்த ஊழியர் மீது பலதரப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளன. அந்த அடிப்படையிலேயே அவருக்கான நியமனம் புதுப்பிக்கப்படவில்லை.

அத்துடன் நியமனம் புதுப்பிக்கப்படாமல் இவரை வேலைக்கு அமர்த்தியது நிருவாகத் தரப்பினரின் பிழையான நடவடிக்கையாகும். இதற்கு மாநகரத்தின் நிருவாகப் பொறுப்பில் உள்ளவர்களும், அப்பகுதிக்குப் பொறுப்பான கண்காணிப்பாளருமே பொறுப்பக் கூற வேண்டும்.

மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த மாநகரசபைச் செயற்பாடுகளில் தற்போதைய மாநகர ஆணையாளர் வந்ததும் பிரச்சனைகள் ஆரம்பித்தன. மாநகரசபையினைக் குழப்பி ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மாநகர ஆணையாளரினால் இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.

ஒரு குற்றவியல் நடவடிக்கையின் கீழ் பிணை வழங்கப்பட்ட ஒரு அதிகாரியை தொடர்ந்து அதே பணியில் அமர்த்தியிருப்பதானது நீதிமன்றச் செயற்பாடுகளை அவமதிக்கும் செயற்பாடு. இதற்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளார் பொறுப்புக் கூற வேண்டும்.

இது ஒரு சாதாரண விடயம். பதில் நியமனம் என்பது எப்போதும் வழங்கப்படலாம், நீக்கப்படலாம். இதனைப் பூதாகாரமாக்கி, ஊழியர்களுக்கு சபைக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்குடனேயே இது திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறப்பினர் சாணக்கியன் அவர்கள் மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர ஆணையாளர் நீதிக்கு முரணான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு எதிர்நடவடிக்கையாக மாநகர ஆணையாளரால் இந்த விடயம் செயற்படுகின்றது.

இது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி நியமனம் வழங்குதல் தொடர்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்த பின்னர் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காண முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் வினவியபோது,

vlcsnap 2021 10 05 22h07m02s719 மட்டு மாநகரசபையின் பதில் ஊழியர் ஒருவர் இடைநிறுத்தம்- ஊழியர்கள் போராட்டம்

பதில் ஊழியர்கள் நியமனம் புதுப்பிக்கும் செயற்பாடு மாநகரசபையின் அனுமதியுடனேயே வழங்கப்படுகின்ற விடயம். கடந்த மாதம் செயலி ஊடாக இடம்பெற்ற மாநகரசபை அமர்வில் உரிய ஊழியர் உட்பட மூவர் தொடர்பில் பதில் நியமனத்தினைப் புதுப்பிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவ்வூழியரையும் கடமை செய்யுமாறு உரிய அதிகாரிகள் மூலம் பணித்திருந்தேன். ஆனால் அவருக்கான பதில் நியமனக் கடிதம் இன்னும் முதல்வரால் வழங்கப்படவில்லை. இதனால் அவரின் சம்பளமும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் நான் அனுப்பிய கடிதத்திற்கு பதில் சுகாதார நியமனத்திற்கு பதில் சாரதி நியமனம் என்று கோரியமையால் வழங்க முடியாது என்று காரணம் தெரிவித்துள்ளார். இதே முதல்வர் தான் இதற்கு முன்னர் இதே ஊழியருக்கு பதில் சாரதி நியமனம் என்ற கடிதத்திற்கு அனுமதி வழங்கியிருக்கின்றார். எனவே மாநகரசபையின் நிருவாத்தின் மீது வேண்டுமென்றே பழிமுடிப்பதற்காக முதல்வர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-150-october-03-2021