Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சில அரசியல்வாதிகளாலேயே கைது செய்யப்பட்டோம்- பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சில அரசியல்வாதிகளாலேயே கைது செய்யப்பட்டோம்- பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வடக்கில் இறந்தவர்களை கிழக்கில் நினைவுகூரப் படக்கூடாது, கிழக்கு மக்களுக்கு அதன் பிரதிபலிப்பு தெரியக்கூடாது என்ற கோட்பாட்டுடன் சில அரசியல்வாதிகள் இருந்த காரணத்தினால் திட்டமிட்டு நாங்கள் கைதுசெய்யப்பட்டோம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தியதாக கைதுசெய்யப்பட்டு  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என இந்த ஆண்டு மே மாதம் மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10 பேரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த  அவர்கள்,

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை நினைந்து நாங்கள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல்  செய்து வருகின்றோம். 2019ஆம் ஆண்டு அதே கிரானில் நாங்கள் நினைவேந்தல் செய்தோம். எந்தவொரு இடையூறுகளும் எங்களுக்கு இருக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு எமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வினை செய்தபோது கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு நாங்கள் கைது செய்யப்பட்டதாக உணர்கின்றோம்.

எமது உறவுகள் பல யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்திருக்கின்றார்கள். அந்த மரணத்திற்காக மாத்திரமே அந்த நிகழ்வினை நாங்கள் செய்தோம். ஆனால் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாணத்தில் தங்களது ஆளுமையினை காட்டவேண்டும், வடக்கில் இறந்தவர்கள் கிழக்கில் நினைவுகூரப்படக்கூடாது,கிழக்கு மக்களுக்கு அதன் பிரதிபலிப்பு தெரியக்கூடாது என்ற கோட்பாட்டுடன் அந்த அரசியல்வாதிகள் இருந்த காரணத்தினால் திட்டமிட்டு நாங்கள் கைதுசெய்யப்பட்டு ஏழு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்.

இதன் காரணமாக எங்களது குடும்பங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டன.
எமது கைது ஒரு அநியாயமான கைதாகும். இதேபோன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் 09 தமிழ் கைதிகள் உள்ளனர்.இவர்கள் 2020 டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதிலும் எந்தமுடிவுகளும் எட்டப்படவில்லை.

அவர்களது வழக்குகளும் துரிதப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் விரைவாக அவர்களும் அவர்களது குடும்பங்களுடன் சென்று மகிழ்ச்சியாக வாழவேண்டும்” என்றனர்.

Exit mobile version