Home செய்திகள் 8 ஆண்டுகளின் பின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை

8 ஆண்டுகளின் பின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை

முல்லைத்தீவு மாவட்ட அரசியல் கைதி

முல்லைத்தீவு மாவட்ட அரசியல் கைதி  ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டினைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 16.09.21 இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில், 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

விடுதலையாகி குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், 2013.07.09 அன்று தொலைபேசி மூலம் விசாரணைக்காக அழைத்து, மீண்டும் கைது செய்து பூசா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் 2015 ஆம் ஆண்டு புதிய மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சில சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள நிலையில், இந்த நோயில் இருந்து பாதுகாப்பதற்காக ஜனாதியதி கருணை கூர்ந்து தனது கணவரை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு அவரின் மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16.09.21) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version